சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டம்
கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதை உறுதி செய்யும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வும், வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப் படும். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 91 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
ரூ.336 கூலி
இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50-இல் தொடங்கி தற்போது ரூ.374 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஒரு நாள் கூலியாக ரூ.319 வழங்கப் பட்டு வந்த நிலையில் ரூ.17 உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரூ.336 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத் துக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.
முதலமைச்சர் கடிதம்
இந்த திட்டத்துக்கான நிதி ஒன்றிய அரசால் முறையாக ஒதுக்கப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டின.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந் தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இதுதவிர அமைச்சர் தங்கம் தென்னரசு, கனி மொழி எம்.பி. ஆகியோர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் பேசி னார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி.,
100 நாள் வேலை திட்டம் தொடர் பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அதேபோன்று தி.மு.க. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினர்.
ரூ.2,999 கோடி விடுவிப்பு
ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பல மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தாகவும், இதனால் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்த நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்தநிலையில் தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ரூ.2 ஆயிரத்து 999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.
ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.