புதுடில்லி, ஏப்.30- நெடுஞ் சாலைகளை அமைத்தாலும், அங்கு எந்த வசதியும் இல்லாததால், விபத்துகளில் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரி வித்தது.
கட்டணமில்லா சிகிச்சை திட்டம்
மோட்டார் வாகன சட்டத்தில் 164ஏ என்ற புதிய உள்பிரிவு சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட் டது. மோட்டார் வாகன விபத்துகளில் சிக்கியவர்களுக்கு ‘கோல்டன் ஹவர்’ எனப்படும், முதல் ஒரு மணி நேரத்தில், மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்க இப்பிரிவு வழிவகுக்கிறது.
இந்த பிரிவு, 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும், கட்டணமில்லா சிகிச்சைக்கான திட்டம் வகுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மார்ச் 14-ஆம் தேதிக்குள் கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை வகுக்குமாறு கடந்த ஜனவரி 8-ஆம் தேதி உத்தரவிட்டது.
அவமதிப்பு
ஆனால், அதன்பிறகும் ஒன்றிய அரசு திட்டம் வகுக்காததால், ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சக செயலாளரை நீதிமன்றத்தில் நேர்நிலையாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சாலை போக்குவரத்து அமைச் சக செயலாளர் நேர் நிலையானார்.
அப்போது, ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித் தனர். நீதிபதிகள் கூறியதாவது:-
ஒன்றிய அரசு செய்தது, நீதிமன்ற அவமதிப்பு. உத்தரவை யும் பின்பற்றவில்லை. கால நீட்டிப்பு கேட்பது பற்றியும் கவலைப் படவில்லை. எப்போது திட்டம் வகுப்பீர்கள்? உங்கள் திட்டம் பற்றி நீங்களே கவலைப்படவில்லை.
நெடுஞ்சாலைகளால் என்ன பயன்?
சட்டப்பிரிவு அமலுக்கு வந்து 3 ஆண் டுகள் ஆகியும் சாதாரண மக்களின் நலனுக்காக நீங்கள் பணியாற்றவில்லை. சட்டப்பிரிவு மீது உங்களுக்கு அக்கறை இல்லையா?
சாலை விபத்துகளில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். பிரமாண்ட நெடுஞ்சாலைகளை கட்டி இருக்கிறீர்கள். ஆனால் அங்கு எந்த வசதியும் இல்லாததால், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானால், நெடுஞ்சாலைகளை அமைத்து என்ன பயன்?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திட்டம் தயார்
சாலை போக்குவரத்து அமைச்சக செயலாளர், வரைவு திட்டம் தயாரிக் கப்பட்டு இருப்பதாகவும், ஆனால், பொது காப்பீட்டுக் கவுன்சில் முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிவித்தார்.
விபத்து நடந்து, முதல் ஒரு மணி நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் கொண்டுவரப்படும் என்று ஒன்றிய அரசு தரப்பில் கூறியதை நீதிபதிகள் குறித்துக்கொண்டனர். விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்