சென்னை, ஏப்.29– புரட்சிக்கவிஞரின் நூற்றாண்டு விழாவில்கூட இல்லாத ஒரு தனிச் சிறப்பு, இவ்வாண்டு! தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளிலே புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள், ‘‘தமிழ் மொழி வார வளர்ச்சி நாளாக’’ சிறப்பாகக் கொண்டாடப்படும்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2025) அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
புரட்சிக்கவிஞரின் நூற்றாண்டு விழாவில்கூட இல்லாத ஒரு தனிச் சிறப்பு, இவ்வாண்டு!
நமது ஒப்பற்ற புரட்சிக்கவிஞர் என்று தந்தை பெரியாராலும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும், கலைஞர் அவர்களாலும் சிறப்பிக்கப்பட்ட நமது ஒப்பற்ற புரட்சிக்கவிஞர் அவர்களுடைய 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்ற இந்த ஆண்டு, இதுவரையில் இல்லாத, ஏன் அவருடைய நூற்றாண்டு விழாவில்கூட இல்லாத ஒரு தனிச் சிறப்பை தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்‘ ஆட்சி, அதனுடைய நாயகர் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தாண்டு உருவாக்கியிருக்கிறார்.
அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகத்தினர், மிகவும் நன்றி தெரிவித்து, வாழ்த்தி, பூரிப்போடு, மகிழ்ச்சியோடு அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வாரம் தமிழ் மொழி வார வளர்ச்சி நாளாகக் கொண்டாடவேண்டும்!
காரணம் என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள், பகுத்தறிவு அமைப்புகள் அத்துணையும் புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை, ஒவ்வொரு ஆண்டும், ஒரு வாரம் – தமிழ் மொழி வார வளர்ச்சி நாளாகக் கொண்டாடவேண்டும்; அதனுடைய வளர்ச்சிக்கு வரக்கூடிய எதிர்ப்பலைகளுக்குத் தடுப்பணைகளை உருவாக்கவேண்டும் என்ற திட்டத்தோடு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பதுதான் புரட்சிக்கவிஞரின் இந்த ஆண்டுப் பிறந்த நாளின் பெருஞ்சிறப்பாகும்.
இதற்குப் பல்வேறு அமைப்புகளுடைய பாராட்டுகளையும், சிறப்புகளையும், வாழ்த்துகளையும் ‘திராவிட மாடல்‘ ஆட்சி பெற்றிருக்கிறது.
இந்த சிறப்பு நமது புரட்சிக்கவிஞருக்கு இதுவரையில் கிடைக்காத ஒன்றாகும்.
‘திராவிட மாடல்’ அரசின் பிரகடனம்!
எப்படி, கலைஞருடைய ஆட்சியில் தமிழ் மொழி செம்மொழித் தகுதி பெற்றதோ, எப்படி எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சியில், பெரியார் நூற்றாண்டு விழாவில், தமிழ்ச் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தாரோ, அதேபோலத்தான், இந்த ஆண்டும் மிகப்பெரிய அளவிற்கு, உலகம் முழுவதும் ஒரு நாள் அல்ல; ஒரு வாரம் கொண்டாடக் கூடிய அளவிற்குச் செய்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர்.
இன்றைக்குத் தமிழ் மொழிக்கு ஏற்பட்டு இருக்கின்ற மிகப்பெரிய ஆபத்துகள், அறைகூவல்களையெல்லாம் சமாளிப்பதற்கு ‘திராவிட மாடல்’ அரசினுடைய இந்தப் பிரகடனமே போதுமானதாகும்.
எங்கள் சிந்தையெல்லாம் பூரிக்கிறது; உள்ளமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனவே, முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டபடி, ஒரு வாரம், தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலக நாடுகளிலே இந்த விழா சிறப்பாக நடைபெறும்.
தமிழை ஏதோ கொத்திக் கொண்டு போகலாம் என்று நினைக்கின்ற வான் பருந்துகளுக்கு இனி இடமில்லை. அதனுடைய இறக்கைகள் முறிக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு தெளிவான அறிவிப்பாகும்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.