சென்னை, ஏப்.29 ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் வாயிலாக உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இந்தியாவுக்கே அத்திட்டம் முன்மாதிரியாக உள்ளதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மருத்துவ சேவைகள் மட்டுமல்ல, அதன்வழியே சிறப்பான முடிவுகளையும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அளிக்கிறது. உயா் ரத்த அழுத்தத்தை 17 சதவீதமும், சா்க்கரை நோயை 16.7 சதவீதமும் கட்டுப்படுத்திப் பொது மருத்துவச் சேவையின் வெற்றிக்கான அலகுகோலை மாற்றியமைத்து வருகிறது.
மக்கள் மருத்துவமனைகளைத் தேடி வருவதற்காகக் காத்திராமல், மக்களின் வீடுகளை நாடிச் சென்று ஈட்டிய வெற்றி இது! இந்தியா முழுவதும் பொதுமருத்துவ சேவைக்கான மாதிரியாக இது மாறியுள்ளது என்று முதல்வா் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில்
437 சிலைகள் மீட்பு
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை, ஏப்.29 தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் 437 சிலைகள், கலைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தார்
பேரவையில் நேற்று (28.4.2025) நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், திமுக ஆட்சியில் மீட்கப்பட்ட சிலைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, அதாவது கடந்த 2021 மே 7 முதல் கடந்த மார்ச் 31 வரை 236 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
அதேபோன்று 98 கற்சிலைகள், 11 மரச் சிலைகள், 72 கலைப்பொருள்கள் உள்பட மொத்தம் 437 சிலைகள் மற்றும் கலைப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார் அவா்.
பாராட்டத்தக்க நடவடிக்கை மேல்பாதி கிராம கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல தடை விதிப்பதா?
ஊராட்சி மன்ற தலைவர்
உட்பட 50 பேர்மீது வழக்கு
விழுப்புரம், ஏப்.29 மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில், கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கிராமத்தின் ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபாடு நடத்தவும், கோயிலுக்குள் செல்வோரை தடுக்கும் விதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து, 22 மாதங்களுக்கு பிறகு, கடந்த 18-ஆம் தேதி வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு, கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கோயிலுக்குள் நாங்கள் செல்ல மாட்டோம் என்று கூறிவருகின்றனர். மேலும், வழிபாட்டுக்காக கோயிலுக்கு வந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவரான ரவி மற்றும் 19 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வளவனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதற்றமான சூழல் நிலவுவதால், கடந்த 18-ஆம் தேதி முதல் கோயிலைச் சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.