சண்டிகார், ஏப்.29- விசாவில் வந்த பாகிஸ்தானியர்களுக்கான காலக்கெடு முடிந்ததால், அட்டாரி எல்லை வழியாக கடந்த 3 நாட்களில் 509 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர். அவர்களை இந்திய உறவினர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பினர்.
காலக்கெடு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது . பல்வேறு விசாக்களில் வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது.
‘சார்க்’ விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26ஆம் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27ஆம் தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29ஆம் தேதிக்குள்ளும் வெளியேற கெடு விதிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 25, 26 மற்றும் 27ஆம் தேதிகளில் ஏராளமான பாகிஸ் தானியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள அட்டாரி எல்லை வழி யாக பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றனர்.
509 பேர் வெளியேற்றம்
25ஆம் தேதி, அந்த வழியாக 191 பாகிஸ்தானியர் வெளியேறினர். 26ஆம் தேதி 81 பாகிஸ்தானியர் வெளியேறினர்.
முதல் 2 நாட்களை விட நேற்று அதிகமானோர் வெளி யேறினர். 27.4.2025 அன்று 237 பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக வெளியேறினர். எனவே, 3 நாட்களில் மொத்தம் 509 பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் திரும்பிச் சென்றுள்ளனர். இவர்களில் 9 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும், சாதாரண அதிகாரிகளும் அடங்குவர். விமானம் மூலம் வேறு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களது எண்ணிக்கை தெரியவில்லை.
தாய் இல்லாமல்
திரும்பும் குடும்பம்
27.4.2025 அன்று பாகிஸ்தானியர் களை வழியனுப்ப அட்டாரி எல் லையில் அவர்களின் இந்திய உறவி னர்கள் கண்ணீர் மல்க திரண்டனர். இதனால், அட்டாரி எல்லை உணர்ச்சிமயமாக காணப்பட்டது.
பாகிஸ்தானை சேர்ந்த சரிதா என்ற பெண்ணின் கதை சோகமயமாக இருந்தது. அவர் கூறிய தாவது:-
நான், என் தந்தை, சகோதரர் ஆகியோர் பாகிஸ்தானியர். என் தாய் இந்தியர். என் பெற்றோருக்கு 1991ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி நடக்கும் ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக, 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்தோம்.
ஆனால், திருமணத்தில் பங்கேற்காமலேயே பாகிஸ்தானுக்கு திரும்புகிறோம். என் தாயார் இந்திய கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பதால், அவரை எங்களுடன் அனுப்ப அதிகாரிகள் மறுத்து விட்டனர். மறுபடியும் அவரை எப்போது நேரில் பார்ப்போம் என்று தெரிய வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு
ஜெய்சால்மரை சோந்த ஒருவர் கூறியதாவது:-
எங்களை பார்ப்பதற்காக எங்கள் தாய் மாமா, அத்தை, அவர்களின் பிள்ளைகள் ஆகி யோர் 36 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து வந்தனர். 45 நாட்கள் விசாவில் வந்தனர். எல்லா உறவினர்களையும் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் திரும்பிச்செல்ல வேண்டியதாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியர்கள்
இதுபோல், பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இந்தியர்கள் வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, கடந்த 3 நாட் களில் அட்டாரி எல்லை வழியாக 745 இந்தியர்கள் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களில் 14 தூதரக அதிகாரிகளும், அதிகாரிகளும் அடங்குவர்.