“மறைந்து 51 ஆண்டுகள் ஆகியும், தமிழ்நாட்டின் அரசியலை
இன்றும் அவர்தான் தீர்மானிக்கிறார்” என்பதே பெரியாரின் சிறப்பு!
கோவை, ஏப். 29– கோவையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஒருங்கிணைத்த `சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாடு’ 2 நாள் மாநாடாக நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சரும் தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார்.
அப்போது அவர், ‘மறைந்து 51 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டின் அரசியலை இன்றும்அவர்தான் தீர்மானிக்கிறார், என்பதே பெரியாரின் சிறப்பு என்றும்’ `திராவிட இயக்கக் கொள்கைகளைக் காக்க, சுயமரியாதை உணர்வுடன் தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – பாசிஸ்ட்டுகளை வீழ்த்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
துணை முதலமைச்சரும் தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய எழுச்சிமிகு உரையின் விவரம் வருமாறு:
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாக, நடைபெறுகின்ற `சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா’ மாநாட்டில் பங்கேற்று, உங்களை எல்லாம் சந்தித்து உரையாற் றுவதில், மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
வரலாற்றில் இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள். திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியான தென்னிந் திய நல உரிமைச் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிட்டி.தியாகராயர் அவர்களின் 173ஆவது பிறந்த நாள் இன்று (27.04.2025) . இத்தகைய சிறப்புக்குரிய நாளில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா இங்கு மிகச் சிறப்பாகவும்,எழுச்சியோடும் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
முக்கியம் வாய்ந்த மாநாடு!
அண்ணன் சுப.வீ அவர்கள் இந்தச் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு மாநாட்டை சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். கோவையில், இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதை, மிக மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக நான் பார்க்கிறேன். கோவை என்பது, இன்று, நேற்றல்ல என்றென்றும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை நிரூபிக்கின்ற வகையில் இந்த மாநாடு, இன்றைக்கு இவ்வளவு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கோவை மண்டலத்திற்கும் திராவிட இயக்கத்திற்கும், நீண்ட நெடிய வரலாறு உண்டு. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் இளமைக்காலத்தில் இந்த கோவையில்தான் திரைக்கதை ஆசிரியராகப் பணியாற்றி வசித்து வந்தார். பக்கத்தில் இருக்கின்ற திருப்பூரில்தான் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் முதன்முறை யாகச் சந்தித்தார்கள். இப்படி திராவிட இயக்கம் சார்ந்து பல்வேறு வரலாறுகளைத் தாங்கி நிற்கின்ற பகுதிதான் இந்த கோவை. சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாடு, இந்த கோவை மண்டலத்தில் இருக்கின்ற ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றது. அந்த வகையில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு மாநாடு, இன்று கோவையில் நடத்தப்படுவது மிக மிக பொருத்தமாக இருக்கிறது.
கனிமொழி கருணாநிதி எழுச்சிமிகு உரை!
எப்பொழுதுமே ஒரு நிகழ்ச்சியில் கடைசியாகப் பேசுவது கொஞ்சம் கடினமான ஒன்று. மிகப்பெரிய பேச்சாளர்கள் எல்லாம் இங்கு பேசி இருக்கிறார்கள். அதிலும் இது இரண்டு நாள் மாநாடு. மாநாட்டை தொடங்கி வைத்து, தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அத்தை கனிமொழி கருணாநிதி அவர்கள் எழுச்சிமிகு உரை ஆற்றியிருக்கிறார்கள். அதேபோல் மாநாட்டில் பல்வேறு அரங்கங்கள். நம் தலைவர்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பலர் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக, கருஞ்சட்டை அரங்கத்தில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் அய்யா கலி பூங்குன்றன் பேசினார். தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள், தி.மு.கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சகோதரர் எழிலரசன் அவர்கள், மாணவர் அணிச்செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் இங்கு உரையாற்றி இருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள்.
புலவர் செந்தலை கவுதமன், தங்கை மதிவதனி, கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் என ஏராளமானோர் பல்வேறு தரப்புகளில் இரண்டு நாட்கள் உரையாற்றி இருக்கிறார்கள். இன்று மாலை உரிமை முழக்கப் பேரணி மிக எழுச்சியோடு நடைபெற்று முடிந்திருக்கிறது. நான் மாலை 3 மணிக்கு கோவைக்கு வருகை புரிந்தேன். மாலை 3 மணியிலிருந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், தி.மு. கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்கெல்லாம் சென்றுவிட்டு, கிட்டத்தட்ட 6.45 மணியளவில் இங்கு வந்தேன். கோவையில் எங்கு சென்றாலும் ஆங்காங்கே கருப்புச் சட்டை அணிந்த இளைஞர்கள், குழந்தைகளைப் பார்க்க முடிந்தது. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுதே இந்த மாநாடு எவ்வளவு பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.
மிக முக்கியமான கடமை!
இங்கு அக்கா அருள்மொழி அவர்கள் பேசும்பொழுது சொன்னார்கள். நாளை சட்டமன்றம் இருக்கிறது. கேள்வி பதில் நேரம் இருக்கிறது. கேள்வி கேட்பார்கள் அங்கு பதில் சொல்ல வேண்டும். எவ்வளவு பெரிய கடமை பொறுப்பு, அதையும் மீறி இங்கு வந்திருக்கிறார் என்று சொன்னார். நிச்சயமாக அது மிகப்பெரிய பொறுப்புதான் ஆனால், அதைவிட மிக மிக முக்கியமான கடமையாக, பொறுப்பாகக் கருதுவது இன்றைக்கு இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றது. எனவே. இந்த வாய்ப்பை அளித்த அண்ணன் சுப.வீ அவர்களுக்கும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு தமிழ்நாடு அடைந்துள்ள அத்தனை வளர்ச்சிக்கும் அடித்தளம் அது நம் சுயமரியாதை இயக்கம்தான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய காலத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இயக்கத்தின் கொள்கைகளை, தந்தை பெரியார் அவர்கள், பலத்த எதிர்ப்பை மீறித் தான் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். பெரியார் அவர்கள் வாழ்நாளில் பயணம் செய்த மொத்த பயண தூரம் 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் பிரச்சாரம் செய்து இருக்கிறார். இன்றைக்கு இருப்பதுபோல சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள் எல்லாம் அப்போது கிடையாது.
இருந்தாலும், அந்த காலத்திலேயே பெரியார் இவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாளில் 10,700 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளின் நேரம் மொத்தமாக தொகுத்து பார்த்தோம் என்றால் 21 ஆயிரத்து 400 மணி நேரம் பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். தான் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புகூட பொதுக்கூட்ட மேடையில் முழங்கியவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
அவர்தான் தீர்மானிக்கிறார்!
தந்தை பெரியாரைப் போல தன் கொள்கைக்காக உழைத்த தலைவர் உலக வரலாற்றிலேயே எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார். பெரியார் இறந்து 51 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ்நாட்டின் அரசியலை இன்றும் அவர்தான் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அதுதான் பெரியாரின் சிறப்பு.
இன்னும் பெருமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு உங்களின் அழைப்பை ஏற்று வந்து இருக்கிறேன். தி.மு.க–வின் இளைஞர் அணிச் செயலாளராக வந்திருக்கிறேன், அது பெருமைதான். நீங்கள் எல்லோரும் சொன்னதைப்போல் விளையாட்டுத்துறை அமைச்சராக வந்திருக்கிறேன், அதுவும் பெருமைதான். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக வந்திருக்கிறேன், அதுவும் பெருமைதான். ஆனால், அவை எல்லாவற்றையும்விட மிகப் பெருமையாக நான் கருதுவது என்னவென்றால் உண்மையான பெரியாரின் கொள்கைப் பேரனாக இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறேன். அதனால்தான் பெரியாரின் தொண்டர்கள் மத்தியில் பேசும்பொழுது எனக்கு தனி விதமான ஓர் உத்வேகம் ஏற்படுகிறது. தனித் தெம்பு வருகிறது. அதற்குக் காரணம் என்னவென்றால், உலக வரலாற்றிலேயே தந்தை பெரியாருக்கு கிடைத்த தொண்டர்களைப் போல வேறு எந்த இயக்கத்திற்கும், எந்தத் தலைவருக்கும் கிடைத்தது கிடையாது.
பெருமை வாய்ந்த தொண்டர்கள்!
அரசியல் கட்சியாக இருந்தால், அது என்றைக்காவது ஒருநாள் தேர்தலில் நிற்கும். போட்டி போடலாம், ஏதாவது ஒரு பொறுப்பு கிடைக்கும். ஆனால், பெரியாரின் தொண்டர்கள், அவர்களின் கொள்கையை கொண்டு செல்வதற்காக, அடிபட்டார்கள், மிதிபட்டார்கள், வெட்டப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஏன் இன்னும் சொல்லப் போனால் கொலைகூட செய்யப்பட்டார்கள், அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தொண்டர்கள்தான் பெரியாரின் கொள்கைத் தொண்டர்கள்.
இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு, இன்றைக்கு பெரியாரின் கொள்கைகள் ஒவ்வொன்றாக வெற்றிபெற்று வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்ட அம்சங்களை, பேரறிஞர் அண்ணா அவர்கள், அதன்பிறகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், அவர்கள் வழியில் வந்த இன்றைய நம் முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து, அதை சட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள்தான் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தார். பெண்களுக்கு குடும்பச்சொத்தில் சம உரிமை உண்டு என்று 35 ஆண்டிற்கு முன்பு சட்டம் ஆக்கினார், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இவைவெல்லாம் பெரியாரின் கொள்கைகள், பெரியாரின் ஆசைகள்.
அதேபோல், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும்விதமாக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் சட்டம் ஆக்கினார். பெண்கள் ஆண்களைப்போல வேலை செய்ய வேண்டும், படிக்க வேண்டும் என்று சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைக்கு நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தொழில்முனைவோர்களாக உருவாகி வருகிறார்கள். பெண்களும் படிக்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம்!
பெண்கள் பள்ளிக்கூடம் படித்தால் மட்டும் போதாது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதுதான் புதுமைப்பெண் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து, உயர் கல்வி படிக்க எந்தக் கல்லூரிக்குச் சென்றாலும் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 3.5 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதலமைச்சர் அவர்கள்.
தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தபோது தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களின் பெயரின் பின்னால் அவர்களின் ஜாதி பெயர் இருக்கும். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபோது, தமிழ்நாட்டின் யாருடைய பெயரின் பின்னும் ஜாதி பெயர் போட்டுக் கொள்வதில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்தியாவில் இருக்கின்ற எந்த மாநிலத்தையாவது நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஜாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளாத மக்கள் இருப்பது, தமிழ்நாட்டில் மட்டும்தான். இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் மிகப்பெரிய வெற்றி.
பா.ஜ.க.வின் கனவு பலிக்காது!
இன்றைக்கு இவையெல்லாம் நடைமுறைக்கு வந்திருக் கிறது என்றால், கழகம் ஆட்சி அமைக்கும்போதெல்லாம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள்தான் காரணம். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், தமிழ்நாட்டை எப்படியாவது ஆக்கிரமிக்க வேண்டும் என்று பாசிஸ்டுகள் வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். நம் தி.மு.க.வை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பெரியாரின் தொண்டர்களின் மத்தியில் நின்றுகொண்டு, நான் உறுதியோடு சொல்கிறேன். கருப்பு சிவப்பு வேட்டி கட்டி இருக்கின்ற தி.மு.க.–வின் கடைசித் தொண்டன் இருக்கின்ற வரை பா.ஜ.க.வின் கனவு, என்றைக்கும் பலிக்கவே பலிக்காது.
விதை, தமிழ்நாடு போட்டது!
2025–ஆம் ஆண்டு பிறந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. இந்த நான்கு மாதங்களில் நடைபெற்றதை மட்டும் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். எவ்வளவு வேகமாக நம் தமிழ்நாட்டை, தமிழ்ப் பண்பாட்டை, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறார்கள் என்பதற்கு, இந்த நான்கு மாதமே சிறந்த எடுத்துக்காட்டு.
முதலில் புதிய கல்விக் கொள்கை என்று ஒன்றை எடுத்து வந்தார்கள். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தி தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் ஹிந்தித் திணிப்பைக் கொண்டுவர முயற்சித்தார்கள். இன்றைக்கு தமிழ்நாடு ஆரம்பித்து, மகாராட்டிரா, கருநாடகா, கேரளா என நாடெங்கும் ஹிந்தித் திணிப்புக்கு எதிரான குரல்கள் ஆரம்பித்து இருக்கின்றன என்றால், அதற்கு முதலில் விதைபோட்டது நம் தமிழ்நாடு.
மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்றால், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்குத் தர வேண்டிய ரூ.2,152 கோடியைத் தர மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் சொன்னார். பதிலுக்கு நம் முதலமைச்சர் என்ன சொன்னார்? நீங்கள் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தால்கூட நான் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொன்னவர் நம் முதலமைச்சர் அவர்கள். அவை மட்டுமல்ல, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு, நம் மாநிலத்திற்குக் கொடுக்க வேண்டிய நான்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. உத்தரப் பிரதேசத்திற்கும், மத்தியப் பிரதேசத்திற்கும், பீகாருக்கும் கொடுக்கப்படுகின்ற 100 நாள் வேலை வாய்ப்பு நிதி தமிழ்நாட்டில் மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புயலோ, வெல்லமோ, மழையோ வந்தால், கொடுக்க வேண்டிய நிவாரண நிதியைக் கொடுக்கிறார்களா? அதையும் ஒன்றிய அரசு தடுத்து நிறுத்துகிறது.
சமீபத்தில், தொகுதி மறுவரையறை என்று சொல்லி, நம் மாநில உரிமைகளைப் பறிக்கிறார்கள். இப்பொழுது 39 தொகுதிகள் இருக்கின்றன. 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து சென்று இருக்கிறார்கள். இந்தத் தொகுதி மறு வரையறை மட்டும் வந்தது என்றால், 8 மக்களவைத் தொகுதிகள் குறையும். அந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கையில் எடுத்திருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறைக்கு எதிராக, நம் தலைவர் அவர்கள் இந்திய அளவில் அனைத்துத் தலைவர்களையும் அழைத்து, சென்னையில் ஒரு மிகப்பெரிய மாபெரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக்காட்டினார்.
உங்களுக்குத் தெரியும்!
பாசிஸ்டுகளின் இந்த சூழ்ச்சிகளை ஒழித்து, மாநில சுயாட்சியை நிலைநாட்ட, நம் முதலமைச்சர் அவர்கள் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்திருக்கிறார்கள். சட்டப் பேரவையில், இந்த அறிவிப்புவந்ததும் பாசிஸ்டுகள் கதற ஆரம்பித்து விட்டார்கள், தவிக்கிறார்கள். அதன் காரணத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பா.ஜ.க.வுடன் சேர்ந்து, அடிமை அ.தி.மு.க.–வும் கத்துகிறார்கள், கதறுகிறார்கள் துடிக்கிறார்கள். அதற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியும்.
ஒரு எட்டு மாதத்திற்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க–வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? எந்த காலத்திலும், 2024–இல் மட்டுமல்ல, 2026–லும் பா.ஜ.க.வுடன் எந்த உறவும், கூட்டணியும் கிடையாது என்றுசொன்னாரா இல்லையா? ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை. ஒரேயொரு ரெய்டுதான் நடத்தினார்கள். இன்றைக்கு பா.ஜ.க–வின் காலடியில் விழுந்து கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றக்கூடிய ஒரே தலைவராக நம் முதலமைச்சர் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு நம் முதலமைச்சரின் குரல், இந்திய ஒன்றியம் முழுவதும் எதிரொலிக்கிறது. அதனால்தான் இன்றைக்கு நம் முதலமைச்சரின் பெயரைக்கேட்டால், அவர்களுக்கு எல்லாம் பயம் வருகிறது.
பா.ஜ.க–வை இந்தியாவிலேயே நேருக்கு நேர் நின்று, நெஞ்சை நிமிர்த்தி எதிர்க்கின்ற ஒரே இயக்கம் நம் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை, எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்று பாசிஸ்டுகள் இன்றைக்கு என்னென்னமோ திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள். நான் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா கூறிய ஒன்றை மட்டும் இங்குநினைவுபடுத்த விரும்புகிறேன். `பதவி என்பது தோளில் கிடக்கின்ற துண்டு. ஆனால் கொள்கை என்பது இடுப்பில் கட்டி இருக்கின்ற வேட்டி’ என்று சொன்னார் அண்ணா அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினர், என்றைக்கும் பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்கள்.
வேட்டைக்காடு இல்லை!
இரண்டு வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைக் கொடுத்தது. அதாவது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற மசோதாக்களுக்கு, ஆளுநரும், குடியரசுத் தலைவரும் மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றுக் கொடுத்தவர் நம் முதலமைச்சர் அவர்கள். சுதந்திர நாள் விழாவில், நாம் கொடியை ஏற்றுவதற்கு எல்லா மாநில முதலமைச்சர்களுக்கும் உரிமை பெற்றுக் கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் இன்றைக்கு நம் தலைவர் அவர்கள், இந்திய ஒன்றியத்தின், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும், அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் நம் முதலமைச்சர் அவர்கள்.
எனவே, மாநில உரிமைகளை மதச்சார்பின்மையைப் பாதுகாக்கின்ற நமது பயணம் இன்னும் உறுதியோடு தொடர்கிறது. இந்தப் பயணத்தில் நாம் வெற்றி பெற பாசிஸ்டுகளையும், அடிமைகளையும் 2026–இல் கட்டாயம் மீண்டும் வீழ்த்தியாக வேண்டும். இது அமித்ஷாவின் வேட்டைக்காடு இல்லை, நம்முடைய தமிழ்நாடு என்பதை, நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் எனும் போரில் நாம் வெற்றிபெற்றாக வேண்டும். இந்த போருக்கான பாசறையை இப்பொழுதே நாம் தயார்படுத்த வேண்டும்.
ஒரு பாசறை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று அதற்கும் பேரறிஞர் அண்ணாதான் சொல்லியிருக்கிறார். பாசறையில் பலவிதமான போர்க்கருவிகளும், வீரர்களும் இருப்பார்கள். போர் கருவிகளின் வகையையும், அவற்றின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போகும். பாசறையில் வெறும் வாள்களை மட்டும் வைத்திருந்தால் போதாது, கேடயங்களும் இருக்க வேண்டும். இந்த ஆயுதங்கள் மட்டும் போதாது, இதை எல்லாவற்றையும் பயன்படுத்த பயிற்சி பெற்ற ஒரு வீரர் வேண்டும். வீரர்கள் மட்டும் இருந்தால் போதாது, அந்த வீரர்களை எல்லாம் வழி நடத்திச் செல்ல வீரமிக்க ஒரு படைத் தளபதி இருக்க வேண்டும்’ என்று, அண்ணா அவர்கள் சொல்லியிருக்கிறார்.
நாம் வீழ்த்திக் காட்டுவோம்!
இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பாசறையும் அண்ணா சொன்னதைப் போல, தொடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. நம் பாசறையில் இளை ஞர்கள், மாணவர்கள், மகளிர் என அத்தனை பேரும் இருக்கிறார்கள். பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். கருப்பு சிவப்புக் கொடிக்காக தங்களின் உயிரையே கொடுக்கக்கூடிய கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். நம்மை எல்லாம் வழிநடத்திச் செல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் முதுகெலும்புள்ள படைத்தலைவரும் நமக்கு இருக்கிறார். அவரின் தலைமையில் இன எதிரிகளையும், துரோகிகளையும் நிச்சயம் நாம் வீழ்த்திக் காட்டுவோம்.
நம் தலைவர் அவர்கள் இட்ட கட்டளையின்படி, நிச்சயம் 200–க்கும் அதிகமான தொகுதிகளில் நம் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும். 200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்றால், இந்த கோவை மாவட்டத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு இந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும். `தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று சொல்லி, இந்த சிறப்பான வாய்ப்பு அளித்த அண்ணன் சுப.வீ அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு துணை முதலமைச்சர்ர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.