* ஹிந்து மதத்தில் ஜாதி பேதங்களுக்கெல்லாம் இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுவது உண்மையா?
* மனுதர்மம், புருஷ சூக்தத்தில் வர்ணம், ஜாதி பற்றிக் கூறப்பட்டுள்ளதா, இல்லையா?
* ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கர், எதிரிகள் என்று கூறியது யார் யாரை?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ஹிந்து மதத்தில் ஜாதி பேதத்திற்கு இடமில்லை என்று சொல்லுவது எல்லாம் உண்மையா? என்று ஆதாரங்களை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு:
‘ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு மிகவும் தனித்தன்மையானது’ என்று அவர்கள் கூறுவார்கள்.
எதில் ‘தனித்தன்மையானது’ தெரியுமா?
‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும்’ (Open Agenda, Hidden Agenda) இரட்டை நாக்குத் தனத்தில்தான் தனித்தன்மை!
‘ஓநாய்கள் ஒருபோதும் சைவமாகிவிட முடியாது’ – அது ஜீவகாருண்ய மாநாட்டிற்குத் தலைமை தாங்கினால்கூட!
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் அப்பட்டமான பொய்யுரை!
அதற்கு, கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில், அதன் பேச்சுகள் – எழுத்துகள் – நடத்தைகளே மறுக்க முடியாத சான்றாவணங்களாகும்!
அந்த அமைப்பின் இன்றைய தலைவர் மோகன் பாகவத் அவர்கள் புதுடில்லியில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில், பேசியுள்ளதாக ஏடுகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அதில் அவர்,
‘‘ஹிந்து சித்தாந்த நூல்களில் தீண்டாமை போதிக்கப்படவில்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாரும் கிடையாது. இது சிறிய வேலை; இது பெரிய வேலை என்று தெரிவிக்கப்படவில்லை. மற்றவர்களை உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்று பார்ப்பது அதர்மமாகும். அது கருணையற்ற நடவடிக்கை’’ என்றெல்லாம் பாசாங்குப் பேச்சு பேசி, மலைபோன்ற ஹிந்து மதத்தின் வர்ணாசிரம ஜாதிமுறையை நியாயப்படுத்திட, அது ஆண்டவனால் செய்யப்பட்டது என்றெல்லாம் காலங்காலமாக அவர்கள் சொல்லி வந்ததை, எவ்வளவு எளிதாக, ‘சிறிய வேலை – பெரிய வேலை அல்ல’ என்றெல்லாம் சாதாரணமாகப் பொய்ப் பேசி ‘‘சாதிக்க’’ நினைக்கிறார்கள் பாருங்கள்.
அவருக்கு நாம் வைக்கும் சில கேள்விகளுக்கு விடையளிக்க முன்வந்தால் நல்லது!
ஜாதி, பேதம் இல்லையென்றால், புருஷ சூக்தத்தில் – விராட புருஷன் படைத்தது என்று ரிக் வேதம், பத்தாவது மண்டலத்தில் உள்ளதே!
சமஸ்கிருதம் கற்றுத் தேர்ந்த அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
டாக்டர் அம்பேத்கர் போன்ற சமஸ்கிருதம் அறிந்த பெருமக்களே அப்பகுதியை பலமுறை சுட்டிக்காட்டி, ‘‘தீண்டாமையின் வேர், வர்ணாசிரம ஏற்பாடே!’’ என்று தொடர்ந்து கூறி, அதை மாற்றிட ஹிந்து ஸநாதனிகளுக்குப் போதிய அவகாசமும், அறைகூவலும் விடுத்தார்களே, அது எதற்காக? அந்த அவகாசம் பயன்பட்டதா?
மனுதர்மம் என்பது வேதத்தினையொட்டிய ‘‘ஸ்மிருதி’’தானே!
அதில், வர்ணாசிரமத்தில் தொடங்கி, தீண்டா மையை ஓரிடத்தில் அல்ல பல பிரிவுகளில் வற்புறுத்தியுள்ளதோடு,
‘சண்டாளர்கள்’, ‘தஸ்யூக்கள்’, ‘தாசி புத்திரர்கள்’ போன்ற இழிச்சொற்கள் உள்ளனவே.
வர்ணக் கலப்பு ஏற்படுமானால், சங்கர ஜாதி, சண்டாளர்கள் உருவானதெப்படி – எல்லாம் மனுநீதியில் உள்ளனவே!
பலமான வகையில் எங்கும் பிரச்சாரம் செய்யப்படும் ‘பகவத் கீதை’ (பாரதக் கதையில், தொடக்கத்தில் இல்லாவிட்டாலும், பிறகு இடையில் சொருகப்பட்ட (Interpolation) இடைச்செருகல் – சொருகல் என்று ஆய்வாளர்கள் கூறும் நிலையில்) வர்ணம் பற்றி என்ன எழுதப்பட்டுள்ளது? ‘‘வர்ணக் கலப்பு கூடாது; எனவே, ‘‘சகோதரர்களாக இருந்தாலும், வர்ண தர்மத்தைக் காப்பாற்ற அவர்களைக் கொல்லுவதற்கும் தயங்காதே’’ என்று கூறுகிறது. அது ஹிந்து மதத்தின் முக்கிய சித்தாந்தங்களைப் போதிக்கும் நூல் அல்லவா?
இப்படி அடுக்கடுக்காக நம்மால் ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.
அவ்வளவு தூரம் போவானேன்?
கோல்வால்கர் ‘எதிரிகள்’ என்று சொன்னது யார் யாரை?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத் தத்துவ கர்த்தாக்களில் முக்கியமானவராகக் கூறப்படும் மாதவ் சதாசிவ கோல்வால்கர் எழுதி, வெளியிட்ட ‘ஞானகங்கை‘ (Bunch of Thoughts) புத்தகத்தில்,
(i) ஜாதியைக் கண்டிப்பவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளதோடு,
(ii) (ஆரியத்தின் எதிரிகளாக) ‘‘நம் எதிரிகள்’’ என்ற தலைப்புகளில்,
- முஸ்லீம்
- கிறித்தவர்கள்
- கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள்
என்று வரிசைப்படுத்தி உள்ளாரே, அது ஹிந்து மத, ஹிந்துராஷ்டிரம் அமைக்க வழிகோலும் சித்தாந்த நூல் அல்லாமல், நவீன புதினமா?
காசி ஹிந்து பல்கலைக் கழக ஸநாதன விளக்கப் பாடப் புத்தகத்தில் வர்ணாசிரம தர்ம – ஜாதி தர்மப் போதனைகளை விளக்கி இடம்பெற்றுள்ளதை மறுக்க முடியுமா?
உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்று பேதப்படுத்தியது மட்டுமா?
அவர்களுக்குக் (பெண்களும் இதில் அடக்கம்) கல்வி மறுப்பு, அறிவுப் பணிகள் மறுப்பு, வாய்ப்பு மறுப்பு என்று ஒடுக்கியது பற்றியெல்லாம் ஏதோ ‘‘விண்வெளியிலிருந்து மீண்டவர் புதிதாய் காணும் ஒரு புவி’’ என்பதுபோல ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியது எவ்வகை?
கேள்விக்கு என்ன பதில்?
‘நடிப்புச் சுதேசிகள்’ என்று பாரதியார் இத்தகை யவர்களைத்தான் குறிப்பிடுகின்றார் போலும்!
அறிவு நாணயத்தோடு பதிலளிக்கட்டும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அவர்கள்.
நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இக்கேள்விகளை முன்வைக்கிறோம்!
பதிலுக்குக் காத்திருப்போம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.4.2025