கி.வீரமணி
சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான அறிவுப் பிரச்சாரம் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் கால்கோள் விழா நடத்தப்பெற்றது. முதல் இதழ் 02.05.1925இல் வெளிவந்தது. அக்கால பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஈரோட்டில் துவக்கப்பெற்ற காலத்தில் காங்கிரசில் மும்முரமாக வகுப்புரிமை சமூக நீதிக்கான போராட்டத்தை, ஜாதிஒழிப்புப் பிரச்சாரத்தை நடத்திட தந்தை பெரியார் –
“ஈ.வெ.ராமசாமி நாயக்கராக” இருந்த நிலையிலேயே துவக்கப்பட்டது! இது தொடங்கப்பட்ட வரலாற்றினை தந்தை பெரியார் 15.05.1927 தேதியிட்ட “குடிஅரசு” ஏட்டில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:
சமத்துவம், சகோதரத்துவம்
நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கிக் “குடிஅரசு” என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில், சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம்.
அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள் “குடி அரசு” என்று ஒருவாரப் பத்திரி கை ம் “கொங்கு நாடு” என்று ஒரு மாதாந்திரமும் நடத்தப்போவதாய் 19.01.23 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
சுயமரியாதை இயக்கம்
“மனித சமூகத்தினிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை, அப்படிப்பட்ட சம தர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.
ஜாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும், பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும், ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரை மட்டமாக்கும் இயக்கம்.”
– தந்தை பெரியார்,
‘குடிஅரசு’, 30.07.1933
இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான்
திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையை கேட்ட வுடன் சந்தோஷப்பட்டு “இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான். அதற்கு நீ தகுதியானவன், நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக் கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால், அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படி யாவது அதை ஒழித்துவிடுவார்கள். ஆனாலும், நடந்த வரை லாபம், நடத்துங்கள்” என்றார்.
பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன். அவரும் மிகச் சந்தோஷப்பட்டு, சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும்படியும் சொன்னார்.
சி. ராஜகோபாலாச்சாரியார்
பிறகு ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர் “இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப்போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசிய மானது. ஆனதால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது” என்று சொல்லிவிட்டார். அதன் பேரில் அந்த எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு மறுபடியும் ஒத்துழையாமைக்காகவே உழைத்தேன். தற்செயலாய் வைக்கம் சத்தியாக்கிரகம் ஏற்பட்டது. ஸ்ரீமான் ஜார்ஜ்ஜோசப் அவர்களும், வைக்கத்திலிருந்து “என்னைப் பிடிக்கப் போகிறார்கள் நான் இதோ ஜெயிலுக்குப் போகிறேன் வேறு யாரும் இல்லை. நீ வந்து ஒப்புக்கொள்” என்று எழுதின கடிதமும் தந்தியும் என்னைக் குடும்பத்துடன் வைக்கத்திற்குப் போகும்படி செய்து விட்டது. அங்கு ஜெயிலில் இருக்கும்போதும் இதே எண்ணம்தான். அதாவது வெளியில் போனதும் பத்திரிகை நடத்த வேண்டும் என்கிற ஆவல் அதிகமாயிற்று. அது போலவே வெளியில் வந்ததும் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்துவிட்டேன்.
அதற்கேற்றாற்போல் திருப்பாப்புலியூர் ஞானியார் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞான சிவாச்சார்ய சுவாமிகளும் கோயம்புத்தூருக்கு வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, அவர்களை இங்கு அழைத்து அவர்களைக் கொண்டே ஆரம்ப விழா நடத்தி விடலாம் என நினைத்து, கோயம்புத்தூர் சென்று அழைத்ததும், யாதொரு ஆட்சேபணையும் சொல்லாமல் அவர்கள் ஒப்புக் கொண்டு, ஈரோட்டிற்கு வந்து ஆரம்ப விழா நடத்திக் கொடுத்தார்கள். அது சமயம் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும் படி ஞானியார் சுவாமிகளை கேட்டுக்கொண்டபோது –
கருத்துடைய பத்திரிகை
“அநேக பத்திரிகைகள் நமது நாட்டிடை இருந் தாலும் அவைகள் தங்கள் மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதை தெரிவிக்க அஞ்சுகின்றன. அதனால் தான் நான் இப்பத்திரிகை ஆரம்பிக்கிறேன். மற்றப் பத்திரிகை போலல்லாமல் மனதில் பட்டதைத் தைரியமாய்ப் பொது ஜனங்களுக்கு உள்ளது உள்ளபடி தெரிவிக்க வேண்டுமென்பது எமது நோக்கம்” என்று சொல்லி இருக்கிறேன். ஞானியார் சுவாமிகளும் பத்திரிகாலயத்தை திறக்கும்போது.
“நமது நாட்டில் பல பத்திரிகை இருந்தும் இப் பத்திரிகை போன்ற கருத்துடைய பத்திரிகை வேறொன்றுமில்லை”
“உயர்வு தாழ்வு என்கிற ஆணவம் மிகுந்திருக் கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும்.” “குடிஅரசின்” கருத்து இதுவே என நான் அறிந்து கொண்டேன்”
“சமயத்திலிருக்கும் கேட்டை முதலில் ஒழிக்க வேண்டும்” “இவை ‘குடி அரசி’ன் முதல் கொள்கையாய் விளங்கவேண்டும்” இப்பத்திரிகையில் ஸ்ரீமான் நாயக்கருக்கு எவ்வளவு சிரத்தை உண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு” என்று “ஆசீர்வதித் திருக்கிறார்”
என்று தெரிவிக்கிறார்.
மேலும் அதே தலையங்கத்தில், “இப்போது இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்ப இதழில் அதே தலையங்கத்துடன் ஒரு குறிப்பு எழுத ஆசைப்படுகிறோம். முதலாவதாக, ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறோம். அதாவது “குடி அரசு”க்கு ஆறு மாதத்தில் ஆயிரம் சந்தாதாரர்களும், ஒரு வருஷத்தில் இரண்டாயிரம் சந்தாதாரர்களும், இப்போது இரண்டு வருஷத்தில் நாலாயிரத்து அய்நூறு சந்தாதாரர்களும் இருப்பதால் கூடுமானவரையில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
“குடிஅரசின்”
வளர்ச்சியையும் பரவுதலையும்
வளர்ச்சியையும் பரவுதலையும்
ஆரம்பத்திலிருந்து இதுவரை முன்னே குறிப்பிட்ட கொள்கைகளில், அது ஒரு சிறிதும் தவறாமல் ஏற்றுக்கொண்டபடி நடந்து வந்திருக்கிறது என்பதையும் மெய்ப்பித்து விட்டோம். ஆகவே, “குடிஅரசு” குறைந்தது ஒரு பதினாயிரம் பிரதிகளா வது அச்சிட்டு வெளியாக வேண்டும் என்கிற ஆசை நமக்கு இருந்தாலும், இந்நாலாயிரத்து அய்ந்நூறைக்கொண்டு நான் சந்தோஷமடைகிறேனே தவிர, ஒரு சிறிதும் அதிருப்தி அடையவில்லை. அன்றியும், எமது விருப்பத்தை நிறைவேற்ற அநேக நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். 250 சந்தாதாரர்களை ஏற்படுத்திக் கொடுத்தும் இனியும் இருநூற்றைம்பது சந்தாதாரர்களை ஒரு மாதத்தில் சேர்ப்பதாய் வாக்களித்த சிங்கப்பூர் நண்பர்களுக்கும், மற்றும் 250 சந்தாதாரர்களை எதிர்பார்க்கும் மலேயா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். தமிழ்நாட்டிலும், ஊர்கள்தோறும் “குடிஅரசின்” வளர்ச்சியையும் பரவுதலையும் எம்மைவிட அதிகக் கவலை கொண்டு எதிர்பார்க்கும் நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அவர்கள் “குடிஅரசு”க்காக உழைத்து வந்ததற்கும், சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தற்காகவும் “குடிஅரசு”க் கொள்கைகளைப் பரப்பப் பாடுபட்டதற்கும், நான் மனப்பூர்வமாய் நன்றி செலுத்துகிறேன். “குடிஅரசு”க்கு இரண்டாவது வருடத்தில் நஷ்டமில்லை. முதல் வருஷத்தின் நஷ்டம் அடைபடவேண்டும். ஆனால் இன்னமும் கொஞ்சம் நல்ல இதழில் இன்னும் நான்கு பக்கம் அதிகப்படுத்த வேண்டும் என்கிற ஆவல் இருந்து வருகிறது. இக்காரியங்களுக்கு இப்போது ஆகும் செலவை விட இன்னமும் வருஷம் ஒன்றுக்கு 2000ரூ அதிகமாகச் செலவு பிடிக்கும். இனியும் கொஞ்சம் சந்தாதாரர்கள் அதிகமானால் இவைகளைச் செய்ய சௌகரியமாயிருக்கும். இவ்வருடம் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் அதிகமாய் இல்லை என்றே நினைக்கிறேன்.
என்று தெரிவிக்கிறார். இதன் மூலம் ‘குடிஅரசு’ ஏடு தொடங்கப்பட்ட வரலாறுத் தெளிவாக விளங்குகிறது.
‘குடிஅரசு’ ஏடு தொடங்கப்பட்டபோது இவ் வேட்டின் ஆசிரியர் தந்தை பெரியார் மட்டுமல்ல, ஈரோட்டின் வழக்குரைஞர்களில் ஒருவரான திரு.தங்கப்பெருமாள்(பிள்ளை) அவர்களும் கூட இணையாசிரியர். துவக்க காலத்தில் ‘குடிஅரசு’ ஏட்டில் (சுமார் 6 மாத காலம்) அவரே தலையங்கம் முதலியவற்றை புலவர் நடையிலேயே எழுதினார்.
முதல் ‘குடிஅரசு’ இதழில் இறைவனை வாழ்த்துவது போன்ற சில வாக்கியங்கள் அவற்றில் இடம் பெற்றதால், இது பற்றிய ஓர் சர்ச்சை உண்டு – பெரியார் கடவுள் நம்பிக்கையாளராக இருந்து பிறகு மாறினார் என்பது போன்ற கேள்விகள் எழுந்து சில “ஆய்வாளர்கள்” என்பவர்கள் அவ்விதைக்குத் தண்ணீர் பாய்ச்சி உரம்போட்டு வளர்த்து வந்தனர்.
தந்தை பெரியார் அவர்கள் முழுப் பொறுப்பில் – ஒரே ஆசிரியர் என்கிற நிலை ஏற்பட்ட பிறகு அவர்களது எழுத்துகள் தந்தை பெரியாரின் ஒப்பற்ற சுயசிந்தனைகளின் கலப்பற்ற வெளிப்பாடாக ‘குடிஅரசு’ என்ற கொள்கைப் பட்டறையில் வார்க்கப்பட்டன.
திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) தமிழ்த்திரு ஞானியார் அடிகள் அவர்களை அழைத்துத்தான் ‘குடிஅரசு’ வார ஏட்டின் துவக்க விழா, வெகு தடபுடலாக 1925 மே மாதத்தில் நடைபெற்றது. பரிணாம வளர்ச்சி போல் ஈரோட்டிலிருந்து வெளிவந்த பச்சை அட்டை ‘குடிஅரசு’ வார ஏட்டின் முகப்புகள் பல காலக்கட்டங்களில் பல்வேறு வகையில் அமைக்கப்பட்டு, மாற்றங்களுடன் காட்சியளித்தன. சுயமரியாதை இயக்கத்தின் போர்முரசாக ‘குடிஅரசு’ விளங்கிற்று.
அனைத்துயிரும் ஒன்றெண்ணும்
அதன் கொள்கையாக கீழ்க்கண்டவற்றை பிரகடனப்படுத்தியது:-
“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும்…”
“உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்.
இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி… நண்பரே ஆயினும் ஆகுக. அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்.”
1925 ஆம் ஆண்டு துவக்கப்பெற்று, 1927இல் 2-ஆம் ஆண்டு தலையங்கத்தில் தந்தை பெரியார் எழுதிய ஒரு பகுதி – அவரது லட்சியப் பயணம் என்பது இலக்கு நோக்கியதுதானே தவிர இடையில் இன்னார் இனியர் குறுக்கிடுகிறார்களே என்பதாலோ, அவப்பெயர் தன் மீது வசைச் சொற்களாக வாரி வீசப்படுகிறது என்பதாலோ, சிறிதும் விட்டுக்கொடுக்காத தன்மையது; கொள்கை சமரசம் காணாத முரட்டுப் பிடிவாதத் தன்மை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தன்மையது. இதுபற்றி பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இராமநாதன் எம்.ஏ., பி.ஓ.எல் குறிப்பிடுவதாவது:
பொதுவாக நமது பிரசங்கத்தினாலும் நம் ‘குடிஅரசு’வினாலும் நான் செய்துவந்த பிரச்சாரத்தில் அரசியல் இயக்கங்கள் என்பவற்றைக் கண்டித்தேன். அரசியல் தலைவர் என்பவர்களைக் கண்டித் தேன். மதம் என்பதைக் கண்டித்தேன். மதத் தலைவர்கள் என்பவர்களைக் கண்டித்தேன். மதச் சடங்கு என்பவற்றைக் கண்டித்திருக்கின்றேன். குருக்கள் என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். கோயில் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சாமி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். வேதம் என்று சொல்லுவதைக் கண்டித்திருக்கின்றேன். சாத்திரம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். புராணம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். பார்ப்பனியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஜாதி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். அரசாங்கம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். நியாயதிபதி என்பவர்களைக் கண்டித்திருக்கின்றேன். நிருவாக ஸ்தலங்கள் என்பவைகளைக் கண்டித்திருக்கின்றேன். ஜனப் பிரதிநிதித்துவம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். தேர்தல் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். கல்வி என்பதைக் கண்டித்திருக்கின்றேன். சுயராஜ் ஜியம் என்பதைக் கண்டித்திருக்கின்றேன். ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரத ராஜூலு நாயுடு, இராஜகோபாலாச்சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்திருக்கின்றேன். இன்னும் என்னென்னவற்றையோ – யார் யாரையோ கண்டித்திருக்கிறேன்; கோபம் வரும்படி வைதும் இருக்கின்றேன்.
(தொடரும்)