கோவை, ஏப்.27 கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு நடைபெற்றது. (25,26.4.2025) இந்த மாநாட்டை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசியதாவது: தேர்தல் வெற்றி, கட்சிப் பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், ‘என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் கனிமொழி மட்டும் திராவிடர் கழகம்’ என கலைஞர் கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். இதைவிடப் பெருமை எனக்கு வேறு எதுவாக இருக்க முடியும்! மனித வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடு சுயமரியாதை. அந்த சுயமரியாதை உணர்வை கட்டமைத்து தந்த இயக்கம் திராவிடர் இயக்கம்.
வாழ்நாள் முழுவதும் போராடிய
தந்தை பெரியார்
தந்தை பெரியார்
உலகம் முழுவதும் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஒருவர் பிறப்பதற்கு முன்பிருந்து இறந்த பின்னாலும் தொடரும் ஜாதியை மாற்ற முடியாது. யார் ஒடுக்கப்பட்டாலும் அவர்களுக்காக வாழ்நாள் முழுக்க போராடியவர் பெரியார். திமுக இந்து மக்களுக்கு எதிரானது என சிலர் சொல்கிறார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை.
பெரும்பான்மையான அரசு பொறுப்புகளில் 3 சதவீதம் மட்டுமே இருக்கும் பார்ப்பனர்கள் இருந்த நிலையை மாற்றி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அப்பணிகளில் தற்போது கோலோச்ச காரணம் திராவிடர் இயக்கம். முதலமைச்சர் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்பதால் தான், அவரைப் பார்த்தாலே சிலர் கொஞ்சம் நடுங்குகின்றனர்.
மக்கள் மீதான அக்கறை
கேள்வி கேட்பவர்களை நக்சல், தேச துரோகி என்கிறார்கள். ஆனால், மக்கள் மீதான அக்கறையின் பேரில் தான் முதலமைச்சர் கேள்வி கேட்கிறார். ஆளுநர் தேவையில்லை என பல காலமாக சொல்லி கொண்டு இருக்கிறோம். இப்போது உச்சநீதிமன்றத்தை கேட்க வைத்த இயக்கமாக திமுக இருக்கிறது. நமது வரலாற்றை, நமக்கு கிடைத்த உரிமைகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லி தர வேண்டும்.
சுயமரியாதை
பெண் விடுதலையை மறுப்பவர்கள் யாரும் சுய மரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் பெயருக்கு பின்னால் ஜாதி வால் இருக்காது. தற்போது தவறான அரசியலால் மீண்டும் தலைதூக்கும் ஜாதி வாலை வெட்ட வேண்டும்.
மத துவேஷத்தை மோதலை உருவாக்குபவர்கள் கையில் டில்லி ஆட்சி இருக்கிறது. ஒவ்வொரு மாசோதாவிலும் மாநில உரிமைகளை பறிக்கிறார்கள். இந்த சக்திகள் ஊடுருவாமல் நாட்டைக் காக்க வேண்டியது நம் கடமை.
மாறும் உலகு
ஹிந்தியை திணிப்பது அறிவியலுக்கு உகந்ததாக இல்லை. ஏஅய் தொழில்நுட்பத்தால் உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. தற்போது ஹிந்தி படி என்பது, சுமையாக தான் இருக்கும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்டு முடித்த சண்டையை மீண்டும் போடுகிறார்கள். அவர்களை இந்த மண்ணில் இருந்து ஓட ஓட விரட்ட வேண்டும் என்றார்.