புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல், மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் செய்த அறிவிப்பு என்பது, தொல்காப்பியர் சொல்லும் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் வாழ்ந்து வரும் “தமிழ் கூறும் நல்லுலகம்” மட்டும் அல்லாது. தாய்க் கழக தலைவராம் ‘தமிழர் தலைவர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலையில் தமது பாராட்டு அறிக்கையில் 22.4.2025 குறிப்பிட்டு எழுதியது போல் “திராவிடர் இயக்க ஆட்சி வரலாற்றில் இது ஓர் இணையற்ற புதிய பொன்னேடு. உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பெரும் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கிறார் முதலமைச்சர்” என்றார் ஆசிரியர்.
தமிழினத்தின் வளர்ச்சிக்காகவும் – மீட்சிக்காகவும். மூடநம்பிக்கையற்ற சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும். குறிப்பாக காலங் காலமாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட பெண்ணினத்தின் விடியலுக்காகவும் கவிதை பாடி மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெரும் கவிஞன்.
“பெற்றநல் தந்தைதாய் மாரே,-நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண் கல்வியாலே,-முன் னேறவேண் டும் வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!
பெண்களால் முன்னேறக் கூடும்-நம் வண்தமிழ் நாடும் எந் நாடும்!” என்று, பெண் கல்வியின் இன்றியமையாமை பற்றி புரட்சிக் கவிஞர் பாடினார்.
“கடுகளவு அறிவுள்ளவன்கூட, அவர் கவிதையைப் படித்தால் முழு பகுத்தறிவு வாதியாகி விடுவான்; அவ்வளவு புரட்சிகரமான கருத்துகள் அவர் கவிதை ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. அதனால் தான் அவரை புரட்சிக்கவிஞர் என்று அழைக்கின்றோம்” என்று புரட்சிக்கவிஞரின் சிறப்பை தந்தை பெரியார் விடுதலை ஏட்டில் பொறித்தார். ( 22.4.1970)
அப்படிப்பட்ட இணையற்ற புரட்சிக்கவிஞரின் பிறந்தநாளை வார விழாவாக கொண்டாடப்படும் என்ற தித்திப்பான அரசின் அறிவிப்பு கண்டு அகம் மகிழ்ந்தோம். இன்றைய இளம் தலைமுறை கவிஞரின் படைப்புகளை இனம் கண்டு தேடிப் படித்து பயன்பெற கலங்கரை விளக்கானது முதலமைச்சரின் அறிவிப்பு.
“வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்றார் புரட்சிக்கவிஞர். கவிஞர் விரும்பிய எழுச்சியை ‘சமூகநீதி காத்த சரித்திர நாயகர்’ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்தம் தலைமையிலான ஆட்சியில் காணுகிறோம் என்றால் அது மிகையல்ல.
நாளும் தமிழர் தம் மனங்களில் தேனூறும் திட்டங்களை வகுத்து நிறைவேற்றி வருகிறார் அல்லவா?
« தமிழில் மட்டுமே இனி அரசாணைகள் வெளியிட வேண்டும்:
«வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
«கலைஞரின் பிறந்த நாளான ஜூன்- 3 செம்மொழி நாளாக கொண்டாடப்பட உள்ளது.
« பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை பரப்பக் கூடாது.
« ரூபாயை குறிப்பிடுவதற்கு மீண்டும் தமிழ் எழுத்து ‘ரூ’ பயன்படுத்தப்படும்.
புதுமைப்பெண் – தமிழ்ப் புதல்வன் – நான் முதல்வன் – முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்று ‘மனிதா்களின் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள்’ தந்து
செம்மொழியான தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்திப்பிடித்து சமத்துவ சமுதாயம் காண சமூக நீதிப் பாதையில் நாளும் உழைக்கிறார் நம் முதலமைச்சர்.
துணை கொள்வோம் !
துணை நிற்போம் !!
வாழ்க வாழ்கவே – வாழ்க வாழ்கவே வளமாறு எமது ‘திராவிட மாடல் அரசு’
வாழ்க புரட்சிக்கவிஞர் !
-செந்துறை மதியழகன்