நேற்றைய (26.4.2025) தொடர்ச்சி…
“ஏழை மக்கள்” – வறிய மக்கள் அறியாமையில் அழுந்தி உண்மை விளங்காது பலபல துறைகளிலும் இன்னல்களுக்கு உட்பட்டு தவிக்கின்றார்கள். இது ஒரு காட்சி. இப்படி தவிக்கும் ஏழை மக்களுக்கு – வறிய சகோதரர்களுக்குக் கண்களைத் திறந்து விடாமல் புத்தியைத் துலக்காமல் – வழி காட்டாமல் வேறு சில சகோதரர்கள், அவர்களை மிரட்டி – அதட்டி – பயப்படுத்தி – ஏய்த்துப் பொருள் பறிக்கின்றார்கள். இது மற்றொரு காட்சி. இவ்விரண்டு காட்சிகளையும் கண்டு மனம் பொறாது – உள்ளம் உடைந்து இவை களை யகற்ற – வழிதேட – இச்சீர்கேடான நிலையைச் சீர்படுத்த அருள் நோக்கங் கொண்ட – அறிவிற் சிறந்த பெரியோர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பித்திருக்க வேண்டும்; ஆரம்பித்தார்கள். அன்பு – அறிவுடைய எவரும் இந்தக் காட்சிகளைக் கண்டால் இந்த நிலையைப் பார்த்தால் – இதைப்பற்றி கேள்விப்பட்டால் சும்மா இரார். எப்படி இருக்கமுடியும்?
அறியாமையின் விபரீதங்கள்
மனம் பதைத்து “அந்தோ! அறியாமையின் விபரீதங்கள் எவ்வளவு கொடியன? இப்படிப்பட்ட அநியாயங்களும் அழும்புகளும் உண்டா? இவை களை அகற்றுவதற்கு வழியொன்றும் கிடையாதோ. என ஆழ்ந்து யோசிக்காமல் இரார். இந்த யோசனை உதித்த ஒருவர்க்கு ஆற்றலுமிருந்தால் இயக்கம் ஒன்றில் முற்பட்டு தொண்டு செய்யாமல் இரார்.
தன்னைப் போன்ற உயிர்கள் இன்னலுற்று வாடி வதங்கி ஏங்கி நிற்கும் போது கல் நெஞ்சம் படைத்தவர்களாய் சாத்திரங்கள் காட்டி உதவி செய்ய முன்வராமல், வாதம் புரிபவனும் மனிதனாமோ? சொல்லுங்கள்” மேற்கூறிய தலைவர் பேச்சில் உள்ள உண்மையை சிந்திக்கும் எவரும் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்ய முன்வராமல் இருக்கமுடியுமா? அவ்வாறு ஏழை மக்களுக்காகக் கஷ்டப்படும் – மக்களுக்காக – அடிமையாகிக் கிடக்கும் மக்களுக்காக உண்மையாக உழைக்க விரும்புகின்றவனுக் காகவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது என்பதை மேற்கூறிய உண்மை உரைகளை கொண்டு தெளிவாக உணரலாம்.
விருதுநகர் மகாநாடு
“விருதுநகர் மகாநாட்டுத் தீர்மானத்திற்கு இணங்க நமது இயக்கத்திற்குச் சங்கம் அமைக்க வேண்டும். அதன் சட்ட திட்டங்களும், கொள்கைகளும், நமது இயக்க நோக்கங்களுக்கு இணங்க அவசியம் நேரிடும் பொழுது மாற்றியமைத்துக் கொள்ளக் கூடியனவாக இருத்தல் வேண்டும். அதற்குப் பெரு நிதி திரட்டல் வேண்டும். வளம் நிறைந்த ஓரிடத்தில் சுயமரியாதைப் பல்கலைக் கழகமும், தலைச்சங்கமும் நிறுவ வேண்டும். மேல்நாட்டு கிறிÞதவ மிஷின்களைப் போல பொருளீட்டுவதும் மக்கள் முன்னேற்றமே கருதி உழைக்க முன் வரும் ஆசிரியர்களையும், தோழர்களையும், இளைஞர் களையும் ஒன்று சேர்க்கவும் வேண்டும். நமது கொள்கைகளுக்கேற்ற வாழ்க்கை முறையும் சகலவிதமான கலைகளும், கைத் தொழில்களும், விவசாய அபிவிருத்தி முறைகளும், அவ்விடத்தில் போதிக்கப்பட வேண்டும். அக்கழகம் நாட்டில் நாம் என்ன மாறுதல்களை விரும்புகிறோமோ அவற்றில் உண்மையையும், மேன்மையையும் வாழ்க்கையில் அனுஷ்டிப்பது மூலமாக விளக்கிக் காட்டுவதாக இருக்க வேண்டும்.
என்று கூறியிருக்கும் விஷயம் எல்லோருடைய கவனத்தையும் தற்சமயத்தில் கவர்ந்து நிற்கும் ஒரு விஷயமாகும். இது சம்பந்தமாக பலமுறை பேசப்பட்டும் தீர்மானங்கள் செய்யப்பட்டும் வருகின்றனவேயொழிய இன்னும் ஒரு காரியமும் செய்யப்பபட வில்லை. ஆனால் இதனால் நமது வேலைகள் ஒன்று தடைப்பட்டு விடவில்லையென்பது மாத்திரம் நிச்சயம், நமக்கென்று ஒரு சரியான Þதாபனத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலே தனிப்பட்ட சிலருடைய உழைப்பினாலும் செல்வாக்கினாலும் நமது இயக்கம் நடைபெறுகிறது என்று பிறர் சொல்லக்கூடிய நிலைமை இருந்தாலும், நமது நாட்டில் சங்கங்களும், சட்ட திட்டங்களும் உள்ள இயக்கங்கள் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்து ஏழைமக்களுக்குச் செய்திருக்கும் நன்மையைக் காட்டிலும், நமது இயக்கம் எவ்வளவோ மாறுதலை யும், உணர்ச்சியையும் குறுகிய கால மாகிய இந்த 7 ஆண்டுகளுக்குள் தேசத்தில் உண்டாக்கி யிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும் நமக்கென ஒரு Þதாபனம் வேண்டியது அவசியம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆகவே இவ்விஷயம் வெளிநாட்டிலிருக்கும் நமது தலைவர்கள் வந்தவுடன் செய்யப்படும் என்று உறுதியாக நம்பலாம். இம்மகா நாட்டில் முக்கியமாகச் செய்யப்பட்டிருக்கும் தீர்மானம் ஒன்றேயாகும். அது:-
தற்போது ஜில்லா அதிகாரிகளான, ஜில்லா கலெக்டர், ஜில்லா நீதிபதி, ஜில்லா வைத்திய அதிகாரி, தேவ கோட்டை சப் கலெக்டர் முதலிய வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாயிருப்ப தனாலும், தேவக் கோட்டைக்கடுத்த கிராமங்களில் அடிக்கடி ஆதி திராவிடர்கள் தாக்கப்பட்டு கொள்ளை யடிக்கப்படுவதனாலும் இந்த ஜில்லாவிலுள்ள பிராமண அதிகாரிகளை மாற்றி பிராமணரல்லாத அதிகாரிகளையே நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு இம் மகாநாடு கேட்டுக் கொள்ளு கிறது. என்னும் தீர்மானமாகும். இந்த தீர்மானத்தைக் கொண்டே அப்பக்கங்களில் ஏழைமக்கள் படும் துன்பத்தை அறியலாம். சாதாரணமாகவே, பணக் காரத் தன்மையும், பார்ப்பனியமும் மிகுந்த உறவுடையது என்பது கண்கூடான விஷயம். பணக்காரர்கள் நிறைந்த நாட்டில் ஏழைமக்கள் சுதந்திரம், வேண்டுமென்று பேச வாயெடுத்தாலே அவர்கள் பாடு கஷ்டத்தில் முடியும். அதோடு பார்ப்பனியத்தை மேற்கொண்ட அதிகாரிகளும் நிறைந்திருப்பார்களானால் அந்த நாட்டு மக்களின் நிலையை நாம் என்னவென்று சொல்ல முடியும்? ஆகவே இத்தீர்மானம் மிகமிக அவசியமான ஒரு தீர்மானமாகும் என்பதில் அய்யமில்லை.
சுயமரியாதை மகாநாடு
இத்தகைய பார்ப்பனியமும் பணக்காரத் தன்மை யும் மூடப்பழக்க வழக்கங்களும் நிறைந்துள்ள நாட்டில் வெற்றியாக நடந்த சுயமரியாதை மகாநாடு குறிப்பிடத் தக்கதொன்றன்றோ? இம் மகாநாட்டை நடத்துவதில் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட வாலிபர்களின் ஊக்கத்தையும், உழைப்பையும், தைரியத்தையும் பாராட்டுகின்றோம். அதோடுங்கூட செட்டிநாட்டை சீர்திருத்த இது போல் ஆண்டுக்கொரு மகாநாடு நடத்துவது மட்டும் போதாதென்றும், நாள் தோறும் மகாநாடுகளும் பொதுக் கூட்டங் களும் சங்கிலித் தொடர் போல் நடத்திக் கொண்டே யிருந்தால் தான் அந்நாட்டில் உள்ள பார்ப் பனியத்தை அடியோடு விரைவில் ஒழிக்க முடியும் என்பதையும் ஞாபகப்படுத்துகின்றோம்.
நிறைவு
குடிஅரசு – தலையங்கம் 24.07.1932