சென்னை,ஏப்.27- முதல்வர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு 26.4.2025 அன்று வெளியிட்டுள்ளது. (Chief Minister Insurance Scheme)
முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டம் 2009 ஆம் ஆண்டு கலைஞர் காப்பீட்டு திட்டமாக தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தகுதியான நபருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளால் சுகாதார சேவை வழங்கப்படுகிறது.
1.43 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 1500 க்கும் அதிகமான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கல்லீரல், சிறுநீரகம், இதயம், கணையம், எலும்பு, விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை உட்பட எட்டு வகையான உயர்தர அறுவை சிகிச்சைகளும் இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
800க்கும் அதிகமான அரசு மருத்துவமனைகள், 900க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் என சுமார்1200 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டம் பொருந்தும் என அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற ஆதார் அட்டை மற்றும் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருப்பதற்கான சான்றிதழ்கள் அவசியம்.
தமிழ்நாட்டில் 834 காப்பகங்களில் 25,533 ஆதரவற்ற குழந்தைகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதார் அட்டை, வருமான சான்று ஏதுமின்றி முதல்வர் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
ஆனால் பெற்றோர் இருந்தும் அவர்களால் கைவிடப்பட்ட மற்றும் பராமரிக்க முடியாத நிலையில் காப்பகங்களில் வசித்து வரும் 15,092 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு பெற ஆதார் அட்டை வருமான சான்றிதழ் ஆகியவை தேவைப்படுகின்றன.
இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் ஆதார் அட்டையை தவிர்த்து குடும்ப அட்டை வருமான சான்றிதழ் அளிப்பதில் விலக்களித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இதன் வாயிலாக பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் தடையின்றி முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற முடியும். (Chief Minister Insurance Scheme)