புதுடில்லி, ஏப்.27 இந்த ஆண்டில் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெறும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் சீன நாடுகள் தரப்பில் ராணுவப் படையினரை எல்லையில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (26.4.2025) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை திட்டத்தை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒருங்கிணைக்கும்.
இந்த ஆண்டு தலா 50 யாத்ரீகர்களைக் கொண்ட 5 குழுக்கள் உத்தராகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும், 10 குழுக்கள் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
இந்து கடைகளில் மட்டும் பொருள் வாங்குங்கள்
மகாராட்டிரா பிஜேபி அமைச்சர் மதவெறி பேச்சு
மும்பை, ஏப்.27 ‘கடைகளில் பொருட்களை வாங்கும் முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன என்று கேட்டு அனுமன் சலிசாவை கூறச் சொல்லுங்கள்’’ என மகாராட்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே கூறியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்மாமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளிடம் மதம் என்ன? என்று கேட்டு இஸ்லாமிக் நம்பிக்கையை வெளிப்படுத்தும் ‘கல்மா’ வை கூறும்படி கூறியுள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள தபோலி நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ரானே பேசியதாவது:
காஷ்மீரில் இந்துக்களை சுட்டுக் கொல்வதற்கு முன் மதம் என்ன? என தீவிரவாதிகள் கேட்டுள்ளனர். அதேபோல் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு முன் கடைக்காரரிடம் அவரது மதம் என்ன? என இந்துக்கள் கேட்க வேண்டும். அவர்கள் இந்து என பொய் சொல்லலாம். அவரிடம் அனுமன் சலிசாவை கூறும்படி சொல்லுங்கள். அவருக்கு அனுமன் சலிசா தெரியவில்லை என்றால் அவரிடம் பொருட்கள் வாங்காதீர்.
முகலாய மன்னர் அவுரங்கசீப் தனது தந்தை மற்றும் சகோதரனை கூட விட்டுவைக்கவில்லை. அவர்கள் தந்தையும், சகோதரனையும் மதிக்காத போது உங்களை எப்படி மதிப்பர். அவர்களிடம் நீங்கள் பொருட்கள் வாங்கி அவர்களை ஏன் பணக்காரர்கள் ஆக்க வேண்டும்? ஆகையால் எப்போதும் கடைக்கு சென்றாலும், இந்து கடையில் பொருட்கள் வாங்குங்கள். இவ்வாறு நிதேஷ் ரானே கூறினார்.