ஜெனீவா, ஏப். 26 இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதா னத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அய்.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அய்.நா. பொதுச் செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், “அவர் (அய்.நா. பொதுச் செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
எனினும், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டு கோள் விடுக்கிறோம்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சி னையையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட் டினர் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் -இ-தொய்பா ஆதரவு அமைப்பான டிஆர்எப் பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் 2 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
பதற்றம்
இந்த சம்பவத்தை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இரு தரப்பிலும் பரஸ்பரம் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை வழங்கும் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித் துள்ளது. பதிலுக்கு, பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை உள்ளிட்ட தடைகளை பாகிஸ் தானும் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு நிலைமையை ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் சிறீநகர் மற்றும் உதம்பூ ருக்குச் செல்வார் என்றும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள மூத்த ராணுவத் தளபதிகள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்களின் அதிகாரிகளை அவர் சந்திக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.