அட்சய திருநாளா?- மின்சாரம்

viduthalai
8 Min Read

மக்கள் மண் புழுவா, மண்ணாங் கட்டியா? அவர் களிடம் அறிவு இல்லையா – ஆற்றலில்லையா?

அவர்களிடம் உழைப்பு இல்லையா – உயர்வதற்கு மார்க்கம்தான் இல்லையா?

எல்லாமும் இருக்கிறது. பின் ஏன் அவர்களை மூடத்தனத்தின் குழியிலே தள்ளுகிறார்கள்? பிறகு ஏன் அவர்களிடத்தில் பேராசை ஊட்டி சோம்பேறித்தனம் என்னும் பெரு நோய் பிடிக்கச் செய்கிறார்கள்?

மனிதனின்மீது மதிப்பும், சமுதாயத்தின்மீது அக்கறை யும் உள்ளவர்கள் இவைபற்றிச் சிந்திக்க வேண்டாமா?

தந்தை பெரியார் ஒருவர் மட்டும் இதில் மகத்தான அளவு சிந்தித்தார்கள். இந்த மக்களை கடவுள் என்னும் முகமூடி அணிந்தும், மதமென்னும் மயக்க மருந்து தூவியும் வஞ்சிக்கிறார்களே மாபாதகர்கள் என்பதை மனம் பதைபதைக்கத் துடி துடித்தார்.

தனி ஆவர்த்தனம்

அறிவாளிகள் என்று கூறப்பட்டோர் பலரும்கூட இந்தச் சகதிக்குள் தலைப்பிரட்டையாகத் தான் கிடந்தார்கள் – உண்மையை உணர்ந்திருந்தவர்களும் – நமக்கு -ஏனிந்த வீண் வம்பு என்று தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டு இருந்தனர்.

வெகு மக்கள் எதிர்ப்பு ஏன் என்று வெகுதூரம் விலகிச் சென்றோர் சிலர்.

இந்த நிலையில் எதிர்ப்பு வந்தாலும் சரியே இவர்களை சிந்திக்க வைக்க வேண்டும்! ஆபத்து வரினும் சரியே இவர்களின் அறியாமையைப் போக்கிதான் தீர வேண்டும் என்கிற தீவிர முடிவில் தீரச் செயலில் ஈடுபடுவது என்ற முடிவுக்கு வந்த ஒரே ஒரு தலைவராகத் தந்தை பெரியார் தான் இந்தச் சமூகத்துக்குக் கிடைத்தார்.

நாள் தவறாமல் விரதங்கள், வாரம் தவறாமல் பூஜைகள், மாதம் தவறாமல் பண்டிகைகள்!

பல்லி கத்தினால் பஞ்சாங்கம் தேட வேண்டும். பூனை குறுக்கே ஓடினால் போச்சு, போச்சு எல்லாம் போச்சு என்ற புலம்பல்!

எண்ணெய்க்காரன் எதிரே வந்து விட்டான். இன்று போகிற காரியம் கரைதேறாது என்ற கவலை!

இன்று என்ன கிழமை? ஓ. கிழக்கே சூலம், கெட்டு விடும் காரியம்.

வருடம் அய்ந்தாயிற்று, மருமகளுக்குப் பிள்ளை உண்டாகவில்லை. ஏதாவது தோஷம் கீஷம் இருக்கும். மாமரத்து மேடை மகாதேவ அய்யரைச் சந்தித்து சாந்தி கழித்தால் சரியாகப் போய்விடும்.

மதக் கறையான்கள்

அவளுக்குச் செவ்வாய்த் தோஷம் செவ்வாய்த் தோஷம் உள்ள ஒரு தடியனைத் தேடினால்தான் சரியாக இருக்கும். பிள்ளை பிறந்த நேரம் சரியில்லை சமயபுரம் சென்று முடி காணிக்கை கொடுக்க வேண்டும் அப்படியே ஆத்தாளுக்கு வெள்ளியால் காணிக்கை செய்துவர வேண்டும்.

தொழில் நட்டம் எல்லாம் வாஸ்து கோளாறு, வீட்டு வாசலைக் கொல்லைப்புறமாக்கி, கொல்லைப் புறத்தை வாசலாக்கி வழி காண வேண்டும் பத்து லட்சம் ஆகும் வட்டிக்குக் கடன் வாங்கியாவது செய்து தான் ஆக, வேண்டும் – வாஸ்து என்றால் சாதாரணமா!

இப்படி மனிதனை அணு அணுவாக அரித்துத் தின்னும் மதக் கறையான்கள், கடவுள் நம்பிக்கை கிருமிகளை நாம் வளர்த்துக் கொண்டிருக்கும் வரை நாம் உருப்படுவது ஏது? கரையேறுவதுதான் எக்காலம்?

உழை – முன்னேறு என்று உரைப்பவர்கள் யார்? எல்லாம் தலை எழுத்து, கர்மபலன், இன்னும் மூன்று வருஷத்துக்குப் போதாத காலம் என்று சுருண்டுப் படுத்துக் கொண்டால் சுகம் எங்கிருந்து குதிக்கும்?

கொஞ்சம்கூட வெட்கமின்றி வன்புணர்வுக் கடவுள் சமாச்சாரங்களை சாங்கோ பாங்கோமாக பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே!

திருமணஞ்சேரி கோயிலுக்கு வாருங்கள் திருமணம் நடக்கும் என்று களிமண்ணை மண்டைக்குள் வைத்துக் கொண்டு கட்டுரைகளைத் தீட்டுகிறார்களே!

பிள்ளை வரம் கிடைக்கும் பேராவூரணி கோயிலில் என்று கிறுக்குகிறார்களே! கருத்தரிக்காததற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் உண்டு என்று தெரியாதவர்களா இவர்கள்?

தொழிலில் தோற்றுப் போனதற்கான காரணங்களை அனுபவத்தில் அறியாதவர்களா இவர்கள்?

மூடத்தனத்திற்கு முடிவு

இந்த மக்களைத் திருத்த வேண்டும் என்று யோக்கியமாக நினைக்கும் எவனும் இந்த மூடத் தனங்களை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்குத்தானே வர வேண்டும்?

வெட்கக்கேடு இந்தக் கேவலங்களுக்குச் சப்பைக் கட்டும் மனிதர்கள்தான் இந்த நாட் டில் பெரிய மனுஷர்கள் உபந்நியாசிகள். சான்றோர்கள்?

மனித சமூகத்திற்குக் கேடு செய்யும் இந்தத் தீமைகளை ஒழிக்க முற்படுபவன் மோச மானவன் ஆபத்தானவன், நாஸ்திகன், இராட்சசன் அரக்கன் இத்தியாதி இத்தியாதி பட்டங்கள்

மனித சமூகத்துக்கு உண்மையான தொண்டு செய்பவன் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது என்று தந்தை பெரியார் கூறியதன்  அருமையைக் கொஞ்சம் நினைத் துப் பார்க்க வேண்டாமா?

அயோக்கியர்களிடத்திலும், மூடர்களிடத்திலும் நல்ல பெயர் வாங்க நினைக்கலாமா?

பகுத்தறிவுப் பயணம்

தன்னைச் சுற்றியும் உள்ள ஆசாமிகள் சமூக அமைப்புகள் தமக்கு எதிராக இருந்தும் வேல் கம்பு, அரிவாள் சகிதமாகத் தாக்கு வதற்குக் குறி பார்த்துக் கொண்டு கிடத்தும் அவர்களைத் துச்சமாக மதித்து, தூர நோக்குடன் பகுத்தறிவு பயணம் கிளம்பிய அந்தப் பகலவன் பெரியாரை நினைத்தால் ஆச்சரியம்! ஆச்சரியம்!! ஆச்சரியந்தான்!!

சில ஆண்டு காலமாக ஒரு நாள்  அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறது. அந்த நாள் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

இந்த நாளைப் பற்றிய ஆன்மீகப் படப்படிப்பு என்ன? அட்சயம் என்றால் பூரணத்துவம் பெற்ற அள்ள அள்ளக் குறையாத வளரக்கூடிய வல்லமை பெற்றது என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும். புத்தாண்டு துவக்க மாதமான சித்திரையில் திருதியை திதியில் வரும் நாளே அட்சய திருதியையன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாக மாறும் என்பது ஜோதிட மொழியாகும்.

காசி, விளாங்குளம், திருக் சோற்றுத்துறை, திருப்பரங் குன்றம், முழையூர் ஆகிய தலங்கள் அட்சய திருதியைத் தலங்கள் என்பர்.

புராணக் கதை

திரவுபதி சூரிய பக வானை வேண்டிப் பெற்ற அட்சயப் பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தை தானம் செய்து புண்ணியம் பெற்றாள் என்கிறது மகாபாரதம் ஒரு முறை கிருஷ்ணபரமாத்மா திரவுபதியைக் காண பசியுடன் வந்தார். அந்நேரம் அட்சயப் பரத்திரம் கழுவி கவிழ்க் கப்பட்டிருப்பினும், அதில் ஒட்டியிருந்த ஒரு கீரை மட்டும் கண்டு விஷ்ணுவை பிரார்த்திக்க மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்கு பரிமாறி பசியாற் றியதோடு. அதிதிதேவோ பவா, எனும் உயர்ந்த அற மான விருந்தோம்பலும் நிறைவேறப் பெற்ற புனித நாளும் அட்சய திருதியை யாகும் என கூறப்படுகிறது.

வறுமையில் குசேலர்   பால்ய நண்பன் கண்ண பிரானை பிடி அவலுடன் காணச் சென்றார். அந்த அவலை கண்ணபிரான் மகிழ்ந்து உண்டு அய்ஸ்வர்யம் பெருக செய்ததும் இந்நாளே. விஜய சாமுண்டீஸ்வரி மகிசா சுரனை வதம் செய்த நாளாகக் கொண்டப்படுவதும் இந்நாளே.

மா கவி காளிதாசனும் தன்னுடைய உத்திரகாவாமா மிருதம் எனும் நூலில், திதியிலேயே மிகச் சிறந்தது அட்சியத் திருதியை என்பார். ஆராதனைக்கும், சுப நிகழ்ச் சிகளுக்கும் ஏற்ற நாள்.

அட்சய திருதியை நாளில் வெள்ளை, மஞ்சள் ஆடை உடுத்தி இஷ்ட தேவதையை வழிபடுவதும், மாதுளை முத்துக்களை சிவலிங்கத்திற்கு அர்ச்சித்தும், குபேர பூஜை செய்ததும். குண்டுமணித் தங்கம் குன்றளவு பெருகிட அட்சய திருதியை ஆராதிப்போம்.

கருத்து உண்டா?

இவைதான் புராண இதிகாசக் குட்டிச் சுவர் கதைகள்! இதில் எந்த ஒரு கதையிலாவது கடுகு அளவு கருத்து மலரின் மணம் உண்டா?

இந்த நாளில் குண்டுமணி அளவாவது தங்கம் வாங்க வேண்டுமாம் வாங்கினால் தங்கமாக வந்து குவியுமாம்!

இந்த நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 40 சதவீத மக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஒரே ஆண்டில் வறுமைக் கோட்டை குபீர் என்று தாண்டி முடிக்க அட்சய திருதியை நாளில் ஒரு குண்டுமணி தங்கம் வாங்கினால் போதுமா!

கடந்த ஆண்டு இதே நாளில் தங்கம் வாங்கியவர்கள் ஓர் ஆண்டுக்குள் எத்தனைப் பேர் குபேரர் ஆனார்கள்? புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூற முன் வருவார்களா?

தங்க வியாபாரிகள், தங்க வியாபாரத்துக்கு இப்படி ஒரு யுக்தியை மதக் காரணம் காட்டி சுண்டி இழுத்து விடலாம் பக்தியில் மூழ்கிய மக்களை என்கிற சூழ்ச்சி தானே இதற்குக் காரணம்?

பொருளாதார கேடு

உண்மையைச் சொல்லப் போனால் தங்கம் என்பது  அரசாங்கத்தின் கஜனாவில் இருக்க வேண்டிய பொருளே தவிர கழுத்தில் மாட்டிக் கொண்டு மினுக்க வேண்டிய ஒன்றல்ல. இது ஒரு பொருளாதாரக் கேடு! இதனைக் கண்டிக்க  வேண்டியது அரசாங்கத்தின் கடமை  – கண்டித்தால் மக்களின் பக்தி அவர்களைச் சுட்டெரித்து விடுமே. அவர்கள் என்ன செய்வார்கள்!

இந்த நாளில் கடன் வாங்கியாவது பவுன் நகை ஒன்றை வாங்க வேண்டுமாம். தன் பக்தை கடன் வாங்காமல் நகை வாங்கும் அளவுக்கு அய்ஸ்வர்யம் அந்தக் கடவுள் ஏன் கொடுக்கவில்லையாம்? யாராவது அர்த்தத்தோடு இந்தக் கேள்வியை முன்வைப்பார்களா?

இதில் ஒரு கதையைக்’ கொஞ்சம் கவனியுங்கள். வறுமையில் வாடிய குசேலனின் பால்ய நண்பன் கண்ணபிரானைபிடி  அவலுடன் காணச் சென்றான். அந்த அவலை மகிழ்ந்து கண்ணபிரான் உண்டு. அய்ஸ்வர்யம் பெறச் செய்தான் என்று கயிறு திரிக்கின்றார் களே! இதைக் குறித்து பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கூறுவதைக் கொஞ் சம் கருத்தூன்றிப் படியுங்கள்.

குசேலருக்கு 27 பிள்ளை கள் பிறந்தன. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது.

குசேலர்   பெண் ஜாதி குறைந்தது வருசத்திற்கு ஒரு பிள்ளையாக பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருசமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27  வருசமாவது இருக்கும். ஆகவே, 20 வய துக்கு மேற்பட்ட பிள்ளைகள்
7 பேராவது இருந்திருப்பார்கள் ஒரு காசுகூட சம்பாதிக்காத, சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருசத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது “என்ன பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே. வெட்கமாக இல்லையா?” என்று கேட்கக்  கூடிய புத்தி இருந்திருக்காதா? (பெரியார் 84-ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் 1962, பக் 43)

தந்தை பெரியாரின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா? முடியாது என்றால் முணுமுணுக்காமல், இந்த மூடத்தனங்களை மூட்டை கட்டி மொத்தமாக ஓர் இடத்தில் குவித்து தீ வைத்து எரித்து விடுங்கள். முடக்கி வைத்த அறிவை கொஞ்சம் கூர் தீட்டிப் பயன்படுத்துங் கள் அதற்குப்பின் பாருங்கள் உங்கள் வாழ்வு வளம் பெறும்.

அதுதான் உண்மையான ‘அட்சய’ திருநாள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *