பாரதிதாசன் ஒரு மக்கள் கவி. இது பாரதிதாசனுடைய எழுத்திலும், எண்ணத்திலும் வண்ணமென இழையோடிக் கிடப்பது ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதான சமத்துவ கொள்கை ஒன்றே அவர் உலக மக்களின் வாழ்வும் வளமும் ஓங்க வேண்டும் எனச் சங்கநாதம் முழங்கியவர்.
தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றேயென்னும்
தூயவுள்ளம், அன்புள்ளம், பெரிய உள்ளம்
உலக மக்களையெல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பரந்த உள்ளம், தூய உள்ளம், அன்புள்ளம், பெரிய உள்ளம் பாரதிதாசனுக்கு உரியது எல்லோரும் ஒன்றே’ இங்கு அனைவரும் சமமே’ எனும் கொள்கை எங்குப் புத்துயிர் பெறுகிறதோ, அற்றைக்கணமே அவ்விடம் பொதுவுடைமை பூத்துவிட்டது எனலாம் – அந்த நிலை இந்த நாட்டிலே மலர வேண்டும் எனத் தணியாத தாகம் கொண்ட மக்கள் கவிஞனாகப் பாரதிதாசன் விளங்கினார். எனவேதான் அவரது பாடல்களில் எல்லாம் அடிநாதமாக ஆணிவேராக அமைந்திருப்பது பொதுவுடைமையெனும் சித்தாந்தமே.
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி-ஒரு நொடிக்குள் ஒப்பொப்பர் ஆகிவிடுவார்.
எனும் அவரது பாடல் உறங்கிக் கிடக்கும் உலக மக்களுக்கெல்லாம் ஓங்கி ஒலித்த பொதுமைப்பாடல். மக்கள்தம் சுயநிலையை உணர வைக்கும் ஒரு சூரியப் பாடலாக அது சுடர்விடுகிறது. மேல்-கீழ், உயர்வு-தாழ்வு எனும் அனைத்தும் பொருளாதார ஏற்றத் தாழ்வு களால் ஏற்பட்ட சீர்கேடுகளே. பொருளாதாரம் சமத்துவம் எய்தி விட்டால், மக்கள் சமத்துவம் தானே மலர்ந்து விடும் என்பது பாரதிதாசனின் திண்மையான எண்ணம். இக்கருத்து அவரது ஒவ்வொரு காவியத்திலும், கவிதையிலும் மேன்மை பெற்றிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.
வீரத்தாய் நாடகமுடிவில் சுதர்மன் “எல்லார்க்கும் உடைமையெலாம்; எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே” என முழக்கமிடுகிறான். புரட்சிக் கவியில் செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டாருக்கே” என்ற கருத்து தலைமை பெறுகிறது. பாரதிதாசன் கவிதைகள் யாவற்றிலும் பொதுவுடைமை’ எனும் பூங்காற்றே வீசுகிறது.
பாரதிதாசன் தன்னுடைய ‘பாண்டியன் பரிசு எனும் காவியத்தில் ஒரு மக்கள் கவியாக ஒளிர்வதை அக்காப்பியத்தின் வழியே அறிய முற்படுகிறது இக்கட்டுரை பாண்டியன் பரிசு காவியத்தின் கதைச் சுருக்கம் வருமாறு;-
தலைவன் வேலன், திருடர்களின் தலைவன் வீரப்பனின் மகன். தலைலி அன்னம்: கதிர் நாட்டு இளவரசி, கதிர் நாட்டரசை வேழ நாட்டரசன் ஆளும் ஆசையில் படை யெடுக்கிறான். படைக்குத் தலைமை ஏற்றுச் செல்பவன் நரிக்கண்ணன். கதிர் நாட்டரசியின் அண்ணன். அன்னத்தின் தாய் மாமன். மைத்துனன் நாட்டின் மேலே படை எடுக்கிறான். வேழ நாட்டரசனையும், அரசியான தன் தங்கையையும் வஞ்சத்தால் கொல்கிறான். பின்னர் இவன் அன்னத்தால், கொல்லப்படுகிறான். “பாண்டியன் பரிசு” என்னும் பேழை களவு போகிறது. அது வேலனின் தந்தையிடம் சிக்குகிறது. இதன் வழி வேலன், அன்னம் காதல் “பாண்டியன் பரிசைக் கொண்டு வருபவர் யாராக இருந்தாலும் அன்னத்தை மணக்கலாம் எனப் பறையறிவிக்கப்படுகிறது. இதன் பொருட்டு அனைவரிடையேயும் போர்கள், வீரச் செயல்கள், சூழ்ச்சிகள் எழுகின்றன.
இறுதியில் வேலன் பரிசுடன் அன்னத்தை அடைகிறான். பிறகு வேலனுக்கு முடிசூட்டலும் மணவிழாவும் நிகழ்கிறது.
‘வீரத்தாய் ‘பில்கணியம்” போன்றவற்றில் பொதுவுடைமை யை முடிவாகக்காட்டும் கவிஞர் பாரதிதாசன், இக்காப்பியத்தில் முடியரசை முடியரசாகவே முடித்திருப்பது அவரது கொள்கைக்கு முரணானதாகத் தோன்றலாம். ஆனால் அது அவ்வாறு கொள்ளல் தகாது. ஏனெனில், அவர் எடுத்துக் கொண்ட கதைத்தளம் (Plot) வரலாற்று காலத்தது; வரலாற்று காலத்தில் நிகழும் ஒரு கதையைப் பொதுவுடைமைக் கொள்கையுடன் முடிப்பது என்பது பொருத்தமற்றதாகும் அவ்வாறு முடிப்பின் காலவழுவாக முடியும். இதனை எண்ணி கவிஞர் பாரதிதாசன் ஒரு புதுமையைக் கையாளுகிறார். சமுதாயத்தின் கடைநிலையில் உள்ளவனும் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவனுமான வேலனை கதிர் நாட்டரசனாக ஆக்குகிறார். இதன் மூலம் தன் கருத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்.
எல்லாரும் எல்லாம் பெறவேண்டும்’ எனும் கவிஞரின் வேட்கை, வேலன் எனும் கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுகிறது.
மீட்படையா மக்கட்கு மீட்பும், விழிப்படையா மக்கட்கு விழிப்பும்’ நல்க வேண்டும் எனும் கவிஞரின் எண்ணப்பாங்கே காவியமெங்கும் பரவிக்கிடக்கிறது.
அன்னம் தம் மூதாதையர் பரிசளித்த பாண்டியர் பேழையைக் கொண்டு வருபவருக்கு ‘நானும் என் நாடும் உரிமை’ என்கிறாள். இதைக் கேட்ட நரிக் கண்ணன் பரிசைக் கொண்டு வருவோன் நோயால் இடருற்றோன்’ என்றால் எனக்கேட்கிறான். அதற்கு அன்னம்
தனியரசு போக்காத நோயை நானே
தவிர்க்கின்ற பேறுபெற்றால் மகிழ்வேன்
எனக் கூறுகிறாள். இது தனியரசை நோயாகக் கருதும் ஆசிரியரின் கருத்தாக மலர்கிறது. இகழ்சாதி ஒப்புவதோ’ என அவனின் கேள்விக்கு இவ்வுலகில் எல்லோரும் நிகரே’ எனும் அன்னத்தின் மறுமொழியானது மக்கள் கவியின் சித்தாந்தத்தைச் சிறப்பித்துக் காட்டுவது எனலாம்.
அன்னம் காப்பியத்தலைவன் வேலனை பாண்டியன் பரிசை மீட்டு வர வேண்டுகிறாள். அப்போது வேலன்,
எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்
இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளாகும்
எனக் கூறுகிறான். சிறிதளவே நன்மை கிடைக்கும் எனில் அதற்காக நான் சாகிற நாளே என் வில் திருதாளாரும் என்பது கவிஞரின் மக்கள் நலப்பற்றை மதிப்புரை செய்வதாக உள்ளது.
இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே வாயடியும் கையடியும் மறைவதெந்தாள் சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றைச் சொத்தெல்லாம் தமக் கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத்தறிவே
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், அரச பரம்பரையின் பெயரால் மக்கள் படும் இகழ்ச்சிகளும் இன்னல்களும் போர்களும் கவிஞரின் இதயத்தைச் சுடுகின்றன. பகுத்தறிவு ஒன்றே அதனை நீக்கும் வழி எனக்கூறும் கவிஞர், பகுத்தறிவு’ என்பதைப் பொதுவுடைமை’ எனும் பொருளிலே குறிப்பதாகக் கொள்ளலாம்.
எல்லாருக்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம் கல்லாரைக் காணுங்கால் கல்வி தல்காக் கசடருக்குத் தூக்குமரம் அங்கே உண்டாம் இல்லாரும் அங்கில்லை; பிறன் நலத்தை எனதென்று தனியொருவன் சொல்லான் அங்கே நல்லாரே எல்லோரும் அவ்வையத்தில்
எல்லாருக்கும் எல்லாம்’ என்ற கவிஞரின் இலட்சியம் இங்கே முற்றுப் பெறுவதை அறியலாம். தான் பெற நினைக்கிற தன்னிகரில்லா உலகில் இல்லாரும் இல்லை, பிறன் பொருளைத் தனதென்று சொல்பவனும் இல்லை” எனும் கவிஞருடைய வரிகள் பொதுவுடைமையைச் சுட்டி நிற்பதை அறியலாம். பாரடையும் தீமையெலாம் விலகி நல்ல பயனடைய வேண்டுமெனில் ‘எல்லாருக்கும் எல்லாம்’ எனும் பொதுநிலை தோன்ற வேண்டும். அந்நாளே கவிஞருக்குப் பொன்நாள் என்பதையே இக்காவியம் எடுத்துரைக்கிறது.
. இக்கொள்கை பாரதிதாசனின் பாண்டியன் பரிசிலும் படர்ந்து நிற்பதில் வியப்பில்லை. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற பொதுமைக் கொள்கையைத் தனது கவிதைக் கொள்கையாக வாழ்க்கைக் கொள்கையாகக் கொண்ட புத்துலகக் கவிஞன் பாரதிதாசன் ஒரு ‘மக்கள் கவி’ என்பதில் மறுப்பேதும் இருக்க இயலுமோ?