சென்னை, ஏப்.25– ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. ஆட்சியில் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் காரணமாக யு.பி.எஸ்.சி. தேர்வில், தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் பெற்ற பலனும், வெற்றியும் அபரீதமானது.
“நான் முதல்வன் திட்டம்’’, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு 01.03.2022 அன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவுவது ஆகும். குறிப்பாக, இந்திய ஆட்சிப் பணி (அய்ஏஎஸ்) போன்ற ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு “நான் முதல்வன்” திட்டம் மிகவும் முக்கியமான வாய்ப்பாகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அமைந்தது.
“நான் முதல்வன்” திட்டத்தின் மூலம்
அய்ஏஎஸ் தேர்ச்சி அதிகரித்ததற்கான பின்னணி –
போட்டித் தேர்வுப் பிரிவு மற்றும் கட்டமைப்பு
அய்ஏஎஸ் தேர்ச்சி அதிகரித்ததற்கான பின்னணி –
போட்டித் தேர்வுப் பிரிவு மற்றும் கட்டமைப்பு
“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், யுபிஎஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளுக்காக தனித்ததொரு போட்டித் தேர்வுப் பிரிவு அமைக்கப்பட்டது.
இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்தப் பிரிவு, ரயில்வே, வங்கி, மாநில அரசுப்பணிக்கான போட்டித்தேர்வு மற்றும் ஒன்றிய அரசுப்பணிக்கான யுபிஎஸ்இ தேர்வுகளுக்காக ஆறு மாத உறைவிடப் பயிற்சி, இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் தரமான வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து, பயிற்சி நிறுவனங்களைத் தேர்வு செய்ய டெண்டர் மூலம் தரமான பயிற்சியாளர்களை உறுதி செய்கிறது.
57-இல் 50 பேர் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தால் சுவைத்த வெற்றிக்கனி!
2024 ஆம் ஆண்டு யுபிஎஸ்இ தேர்வில், தமிழ்நாட்டி லிருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றனர், இதில் 50 பேர் “நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இது கடந்த அய்ந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்
இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் (2022), 47 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றனர், மேலும் ஆறு பேர் முதல் 100 இடங்களில் இடம்பெற்றனர். இது முந்தைய ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும்
தரமான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்
– இத்திட்டம் மாணவர்களுக்கு யுபிஎஸ்சி தேர்வின் மூன்று நிலைகளான துவக்கநிலை(Preliminary), முதன்மை (Main) மற்றும் நேர்காணல் (Interview) ஆகியவற்றுக்கு விரிவான பயிற்சி அளிக்கிறது
ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற மொழிகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், ஆளுமைத் திறன் வளர்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுத் தயாரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.
தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், மாணவர்களுக்கு உத்வேகமும், வழிகாட்டுதலும் கிடைக்கின்றன.
எல்லோருக்கும் எல்லாம்
“நான் முதல்வன்” திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களையும் உள்ளடக்கியது. இலவச மற்றும் குறைந்த கட்டணப் பயிற்சிகள் மூலம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக முடிகிறது.
தொடர் கண்காணிப்பு மற்றும் ஆதரவு
பயிற்சி பெற்றவர்களின் தேர்வு நுணுக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பும் இத்திட்டத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவில் குழுக்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதால், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
‘‘திராவிட மாடல்’’ ஆட்சிக்கு முன்பு
பயிற்சி வசதிகளின் பற்றாக்குறை
பயிற்சி வசதிகளின் பற்றாக்குறை
“நான் முதல்வன்” திட்டத்துக்கு முன்பு, யுபிஎஸ்சி தேர்வுக்குத் தேவையான தரமான பயிற்சி மய்யங்கள் தமிழ்நாட்டில் குறைவாக இருந்தன. 2011 ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை அரசு பயிற்சி மய்யங்கள் கடமைக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நம்பிக்கை இழந்த பெரும்பாலான மாணவர்கள் பயிற்சிக்காக புதுடில்லி, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது, இது பொருளாதார ரீதியாக சவாலாக இருந்தது. இதனால் கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்களின் அய்ஏஎஸ் கனவு நிறைவேறாமலேயே இருந்தது.
விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் இன்மை
யுபிஎஸ்சி தேர்வு குறித்த விழிப்புணர்வு, குறிப்பாக கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களிடையே மிகவும் குறைவாக இருந்தது. மேலும் தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் தேர்விற்கான தயாரிப்பு குறித்த வழிகாட்டுதல் பற்றாக்குறை இருந்தது.
பொருளாதார மற்றும் சமூகத் தடைகள்
யுபிஎஸ்சி தேர்வு தயாரிப்புக்கு நீண்ட கால பயிற்சி மற்றும் பொருளாதார ஆதாரங்கள் தேவை. தமிழ்நாட்டில் ஏராளமான திறமையான மாணவர்கள் இதற்குத் தேவையான நிதி ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தொடர முடியாமல் தவித்தனர். சிறிய நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணகான தாழ்த்தப்பட்ட பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவினருக்கு சரியான வாய்ப்புகள் மற்றும் படிப்பதற்கு எதைத் தேர்வு செய்யவேண்டும் என்ற ஆலோசனைகள் கிடைக்காமல் தவித்தனர்.
“நான் முதல்வன்” திட்டத்துக்கு முன்பு, தமிழ்நாட்டிலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. எடுத்துக்காட்டாக திட்டம் தொடங்குவதற்கு முன்பு இந்தியா முழுவதும் 2021–ஆம் ஆண்டு தேர்வானவர்களில் 3% பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் முதல் 100 இடங்களில் ஒருவர் கூட இடம்பெறவில்லை. திமுக ஆட்சிக்கு முன்பு தமிழ்நாட்டு இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி மற்றும் யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதில் மிகவும் பெரும் தடை இருந்தது.
“நான் முதல்வன்” திட்டத்தின் தாக்கம்
“நான் முதல்வன்” திட்டம், மேற்கூறிய தடைகளை அகற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வைப்பதற்கு மிகவும் சிறப்பான ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
கட்டணமில்லா பயிற்சி, தரமான வழிகாட்டுதல், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் வரை ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணித் தேர்விற்குத் தயாராகின்றவர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தவும், அவர்களது. குறைபாடுகளை களையவும், தேவையான உதவிகளைச் செய்யவும் குழுக்கள் அமைத்து தீவிரமான கண்காணிப்பு மேற்கொண்டது இந்த வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாகும்
இதன் விளைவாக, தமிழ்நாடு யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முன்னிலை வகிக்கும் மாநிலமாக மாறியுள்ளது.
“நான் முதல்வன்” திட்டம், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறமை, மேம்பாடு மற்றும் போட்டித் தேர்வு வெற்றிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. இதற்கு முன்பு இருந்த பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் பொருளாதாரத் தடைகளை இத்திட்டம் களைந்து, 2022 முதல் அய்ஏஎஸ் தேர்ச்சி விகிதத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.