ஜெய்ப்பூர், ஏப்.25 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 23 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவரின் பெயர் ரோஷன் சர்மா என்பதும், அவர் டில்லி துக்லகாபாத் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் கோட்டா நகரில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் சமீப காலமாக ரோஷன் சர்மா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அண்மையில் அவரது பெற்றோர் கோட்டா நகருக்கு சென்று ரோஷன் சர்மாவை தங்களுடன் வந்துவிடுமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர்களுடன் செல்ல ரோஷன் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், கோட்டா நகரில் ரயில்வே தண்டவாளம் அருகே ரோஷன் சர்மாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் அங்கு வந்து ரோஷன் சர்மாவின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ்காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கோட்டா நகரில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த 2-ஆவது தற்கொலை சம்பவமாகும்.
முன்னதாக 22.4.2025 அன்று பீகாரை சேர்ந்த 18 வயது மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் கோட்டா நகரில் தங்கியிருந்து போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 30ஆம் தேதி வரை
நாடு முழுவதும் வெப்பம் அதிகமாக இருக்கும்
வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப்.25- அடுத்த சில நாட்கள் நாட்டில் நிலவும் வெப்ப அலைகள் பற்றி இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல்களை வெளியிட்டு உள்ளது. வருகிற 30-ஆம் தேதி வரை வெப்ப அலைகள் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள் ளது. குறிப்பாக மேற்கு மத்திய பிரதேசத்தில் 30-ஆம் தேதி வரை, கிழக்கு மத்திய பிரதேசத்தில் 27-ஆம் தேதி வரை, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளத்தில் 26ஆம் தேதி வரை, பஞ்சாப், அரியாவில் 29-ஆம் தேதி வரை வெப்பம் காட்டமாக இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சத்தீஷ்கர், தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் இன்று (25.4.2025) வெப்பம் மிக கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் காரைக்காலில் நாளை வரை வெப்பம் மற்றும் ஈரமான வானிலை நிலவும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. குஜராத்தில் இந்த நிலை 30-ஆம் தேதி வரை நீடிக்கும். டில்லியில் 27-ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும்.
இந்த வெப்ப அலையின் அளவுகளை கணக்கிட்டு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மய்யம் விடுத்துள்ளது.