புதுடில்லி, ஏப்.24 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (24.4.2025) அதிகாலை டில்லி திரும்பினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 24.4.2025 அன்று பிற்பகல் பயங் கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் கொல்லப் பட்டனா்.
இந்தத் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு இன்று (24.4.2025) கூடுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனுக்கு கடந்த 19.4.2025 அன்று பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, தனது பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டில்லி திரும்பியுள்ளார்.
இன்று (24.4.2025) காலை 10 மணிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் செயற் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்து கொள்ள விருக்கிறார்.
ஏற்கெனவே, பஹல்காம் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு – காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா ஆகியோருடன் தொலைபேசியில் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
முன்னதாக, சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை பாதியில் முடித்துவிட்டு நேற்று (23.4.2025) காலை டில்லி திரும்பியது குறிப்பிடத்தக்கது.