மும்பை, ஏப்.24- காஷ்மீரின் பஹல்கா மில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியலே காரணம் என உத்தவ்– சிவசேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து உத்தவ் – சிவசேனா மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் நேற்று (23.4.2025) செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகள் மக்களை கொல்வதற்கு முன்பு அவர்களின் மதத்தைக் கேட்டிருந்தால், இதற்கு பாரதீய ஜனதாவின் வெறுப்பு அரசியலே காரணம். வெறுப்பு அரசியல் ஒரு நாள் நம்மையே திரும்ப வந்து தாக்கும். மேற்கு வங்காளத்தில் இருந்து ஜம்மு-காஷ்மீர் வரை பரவி வரும் வெறுப்பின் விளைவு இதுவாகும்.
பதவி விலகவேண்டும்…
ஆட்சியில் உள்ளவர்கள் எதிர்க்கட்சி அரசை கவிழ்ப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைப்பது போன்ற வேலைகளை 24 மணி நேரமும் மும்முரமாக செய்துவருகிறார்கள். அவர்களுக்கு எப்படி மக்களை காப்பாற்ற நேரம் இருக்கும்?
இந்திய வரலாற்றில் மிகவும் தோல்வி அடைந்த ஓர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவார். அவரது பதவி விலகலை முழு நாடும் எதிர்பார்க்கிறது. இனியும் ஒரு நாள் கூட அவர் பதவியில் நீடிக்க உரிமை இல்லை. தற்போது பீகார் தேர்தல் நெருங்கி வருவதால் அரசு “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடத்தி அரசியலில் ஈடுபடும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்த நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பயங்கரவாத சம்பவம் குறித்து பொய் கூறுகின்றனர். பயங்கரவாத சம்பவங்கள் பற்றிய தகவல்கள் பொது வெளியில் வர அவர்கள் அனுமதிப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.