பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக ஆய்வக நாள் மற்றும் புத்தக நாள் சிறப்புக் கருத்தரங்கம்

viduthalai
3 Min Read

திருச்சி, ஏப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக ஆய்வக நாளான  நேற்று (23.04.2025) மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறையின் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறையின் தலைவர் பேராசிரியர் க.உமாதேவி வரவேற்புரையாற்றினார். துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. முனைவர் சுல்தானா ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும் கல்லூரியின் மேனாள் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறை மாணவருமான திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் எம்.கண்ணன்  உலக ஆய்வக நாள் குறித்த பல்வேறு கருத்துகளை சிறப்பாக எடுத்துரைத்தார்.

தமிழ்நாடு

அவர் தமது உரையில் மிக எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாம் கற்ற கல்வியால் அரசுத்துறையில் பணியாற்றி வருவதாகவும் பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெற்ற சுயமரியாதை உணர்வும் ஏன், எதற்கு என்று கேள்விகள் கேட்கும் துணிச்சலும் வாழ்க்கையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களைப் பெற்று தந்ததாகவும் உரையாற்றினார்.

ஏழை, எளிய மக்களுக்காகவே பாடுபட்டவர் தந்தை பெரியார்

மிகப் பெரிய பொருளாதார வசதிகளும் வாய்ப்புக்களும் இருந்த போதிலும் மக்களின் உரிமைகளுக்காக மூத்திரச் சட்டியை கையில் ஏந்தி தம்முடைய இறுதிக்காலம் வரை ஏழை, எளிய மக்களுக்காகவே பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களுக்கு முன் நாமெல்லாம் மிகவும் சாதாரணம் என்றும், அத்தகைய தலைவரின் பெயர் தாங்கிய கல்லூரியில் பயின்றதால்தான் விதைப்பந்துகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஆறு, குளங்கள் சீரமைத்தல் மற்றும் தொழில்நுட்பனரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல் போன்ற சமுதாயப் பணிகளில் தம்மால் ஈடுபட முடிந்தது என்றும் உரையாற்றினார்.

மேலும் நாம் எந்தத் துறையை தேர்வு செய்தாலும் அந்தத் துறைச் சார்ந்த அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் பணி என்பது உயிர் காக்கும் பணியில் முதன்மையான பணி. நம்முடைய மருத்துவ பரிசோதனைகளின் அறிக்கைகளைக் கொண்டே மருத்துவர் சிகிச்சைகளை தொடங்குவார்.

அப்படிப்பட்ட முதன்மையான பணியில் நாம் செய்யும் சிறிய தவறுகள் கூட உயிரை பறிக்கும் அளவிற்கு சென்றுவிடும். ஆகையால் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு

உயிர் மருத்துவக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டியதும் தொழில்நுட்பனரின் தலையாய கடமை என்றும் இரத்தம், சிறுநீர் போன்ற பல்வேறு மாதிரிகளை சேகரிக்கும் போது நோயாளிகள் செய்யக்கூடிய தவறுகள், மாதிரிகளை பரிசோதிக்கும் போது தொழில்நுட்பனர்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக்காட்டி அது போன்ற தவறுகள் நிகழாமல் துல்லியமான மருத்துவ அறிக்கைகளை வழங்குவது ஒவ்வொரு மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனரின் கடமை என்றும் உரையாற்றினார்.

மேலும் வளரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மருத்துவ பரிசோதனை கருவிகளை பயன்படுத்தும் தொழில் நுட்ப அறிவையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிறப்பு நிலை மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பனராக இருப்பவர்கள் பெரும்பாலும் நமது பெரியார் மருந்தியல் கல்லூரியில் பயின்றவர்கள் என்று தற்போது அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பதாகவும் உரையாற்றி கல்லூரிக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தார்.

உலக புத்தகம் மற்றும்
பதிப்புரிமை நாள்

இந்நிகழ்ச்சியில் உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாளினை (23.4.2025) முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரியின் கலைஞர் கருணாநிதி நூலகம் சார்பில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி நூலகத்திற்கு
ரூ.3,500 மதிப்புள்ள 7 புத்தகங்கள் கண்ணனிடம் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை வழங்கி சிறப்பித்தார்.

மேலும் பெரியார் கல்விக் குழுமங்களின் சார்பாக பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அரசு பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டிற்கான அறிவுசார் பணியாக ரூ. 13,781 மதிப்புள்ள 192 புத்தகங்களை பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் நன்கொடையாக முதல்வரிடம் வழங்கி சிறப்பித்தனர்.

ஆய்வகம் தொடர்பான போட்டிகள்

அதனைத் தொடர்ந்து ஆய்வகம் மற்றும் புத்தக நாளினை மய்யப்படுத்தும் விதமாக ஒலி, ஒளிக்காட்சிகள், கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் மாணவி செல்வி ஜாக்லின் நன்றியுரையாற்றிய இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *