அரூர், ஏப்.24- அரூர் கழக மாவட்டம், கம்பைநல்லூர் அருகில் உள்ள ஜெ.பாளையம் கிராமத்தில், 12.4.2025 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, மகளிர் அணி, மகளிர் பாசறை தோழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார்.
60க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகளும் 20க்கும் மேற்பட்ட மகளிர் தோழர்களும் கலந்து கொண்டனர்.
விழாவின் முதல் நிகழ்வாக மாணவ – மாணவிகளுக்கு கணித அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டது.
தொடர்ந்து மாணவ – மாணவிகள் தந்தை பெரியார் பற்றியும், அண்ணல் அம்பேத்கர் பற்றியும், கல்வி வள்ளல் காமராஜர் பற்றியும் பேசினார்கள்.
தருமபுரி மாவட்டத்தின் மகளிர் பாசறை செயலாளரும், அரசாங்க நல திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்ற பெ.கோகிலா நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் தோழர்களுக்கு என்னென்ன உரிமைகள், திட்டங்கள் உள்ளன என்பது குறித்து விளக்கினார்.
பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஆகியோருக்கு அரசாங்கத்தின் நலத்திட்டங்களை விரிவாக எடுத்துச் சொன்னார் ..
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தன்னுடைய வாழ்த்துரையில், இந்தியாவிலேயே அண்ணல் அம்பேத்கர் அவர்களையும், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களையும், அந்த இரு மாபெரும் கொள்கை நண்பர்களின் சித்தாந்தங் களையும் இணைத்து பேசுகின்ற தலைவராக தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திகழ்கிறார் என்பதை மாணவர்களிடம் விளக்கி பேசினார்.
அனைத்து சமூக மக்களுக்குமான கல்வியை போற்றி பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின், “என்னருந் தமிழ்நாட்டின் கண் எல்லோரும் கல்வி கற்று, என்ற பாடலையும், தமிழகம் எழுச்சி பெற வேண்டும் என்று பாடிய, “வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்” என்ற கவிதையையும் மாணவர்களிடத்தில் விளக்கி உரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச் செல்வன் தன்னுடைய வாழ்த்துரையில், பொட்டு வைத்தல், கயிறு கட்டுதல், படங்களுக்கு ஊதுபத்தி கொளுத்துதல், மாவிளக்கு எடுத்தல் போன்ற எந்த இந்துமத சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் பின்பற்றக் கூடாது என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர் என்றும் ,அதனை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி தன்னுடைய வாழ்த்துரையில், “இன்றைக்கு நாமெல்லாம் சாலைகளில் சுதந்திரமாக நடக்கின்றோம்! பேருந்துகளில் எல்லோரோடும் பயணிக்கின்றோம்! எல்லோரோடும் அமர்ந்து உணவருந்துகிறோம், எல்லா சமூக மாணவர்களோடும் வகுப்பறைகளில் அமர்ந்து படிக்கின்றோம்.
ஆனால் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மாணவராக படிக்கின்ற பொழுது எல்லா விதமான தீண்டாமை கொடுமைகளுக்கும் ஆளானவர்” என்றார்.
+2 படிக்கின்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவரின் “நீட் நுழைவுத் தேர்வு வேண்டாம் ஏன்? என்ற சிறிய நூல் வழங்கப்பட்டது.
நிகழ்வில் மகளிர் தோழர்கள் நவீனா, தனம், உமா, செல்லி, சந்திரா, மூவரசு, முருகம்மாள், பிரசாந்தி சுமித்ரா, கெலவல்லி முருகம்மாள், சரவணா, கோகிலா கிருத்திகா, சவிதா, சலிஜா, கமலா உள்ளிட்ட மகளிர் தோழர்கள் கலந்து கொண்டனர்.
60க்கும் மேற்பட்ட இருபால் மாணவர்களும் பங்கேற்றனர்.