மும்பை, ஏப்.23- மராட்டியத்தில் 6-ஆவது வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. இந்தநிலையில் கடந்த வாரம் மாநில அரசு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கையை அமல்படுத்த உள்ளதாக அறிவித்தது. மேலும் மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் இந்தியை 3-ஆவது கட்டாய மொழி பாடமாக அறிவித்தது.இதற்கு கல்வியாளர்கள்,எதிர்க்கட்சியினர் மற்றும் பெற்றோர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக காங்கிரஸ், நவநிர்மாண் சேனா, உத்தவ் சிவசேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதேபோல மாநில அரசின் மொழி ஆலோசனை குழு தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் இந்தியை கட்டாயம் ஆக்கும் மாநில அரசின் உத்தரவை திரும்ப பெற தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற உத்தரவை மராட்டிய அரசு நிறுத்தி வைத்து உள்ளது. இது தொடர்பாக மாநில அரசு புதிய சுற்றறிக்கையை பிறப்பிக்கும் என மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் தாதா புசே கூறினார்.