காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது துப்பாக்கி சூடு 28 பேர் உயிரிழப்பு

viduthalai
2 Min Read

பஹல்காம், ஏப்.23  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று (22.4.2025) துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

ராணுவ உடையில் தீவிரவாதிகள்

ஜம்மு காஷ்மீரில் தற்போது கோடை சுற்றுலா தொடங்கி யுள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். அங்குள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள், தெளிவான நீரோடைகள், பரந்த புல்வெளிகள் இருப்பதால், இது ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இதனால் பஹல்காம் பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல முடியாது. கால்நடையாக அல்லது குதிரைகள் மூலமாக மட்டுமே செல்ல முடியும். இங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் மதியம் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை தீவிரவாதிகள் கேட்டு துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை. இத்தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்துரு என்ற சுற்றுலாப் பயணியும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தார். ‘‘எனது கணவரை தீவிரவாதிகள் தலையில் சுட்டனர். பலர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல உதவுங்கள்’’ என பெண் ஒருவர் அழுதபடி வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் 2019-இல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் தீவிரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் வழியாகவும், கந்தர்பால் மாவட்டத்தின் பால்தால் வழியாக வும் நடைபெறும். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *