செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

டிரம்பை எதிர்க்கும்
இந்திய, சீன மாணவர்கள்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக 3 இந்திய மாணவர்கள், 2 சீன மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னாட்டு மாணவர்களுக்கான F-1 மாணவர் தகுதியை அரசு சட்டவிரோதமாக ரத்து செய்வதால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல், அந்நாட்டில் குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பிஜேபி ஆளும் ராஜஸ்தானில்
இந்தக் கொடூரம்

ராஜஸ்தானில் 19 வயது தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர் மீது இரண்டு பேர் சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் தனியே வெளியே சென்றபோது வழிமறித்த இரண்டு பேர், இவரின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டதாக புகாரில் பதிவாகியிருக்கிறது. அப்போது, அவர்கள் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியிருக்கிறார்.

பள்ளிகளில் ஜாதி சின்னங்கள்
அரசு தடை

பள்ளி வளாகங்களில் மாணவர்களின் ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான சின்னங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜாதி அடையாளங்களை வைத்து மாணவர்கள் அடிக்கடி மோதுவதாகவும், ஆதலால் ஜாதிய பாடல்களை ஒளிபரப்பவோ, ஜாதியைக் குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியவோ அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.366 கோடியில் தமிழ்நாட்டில் 9 இடங்களில்
புதிய தொழிற்பேட்டைகள்

சென்னை, ஏப்.22 தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2025-2026ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம் மற்றும் நாயனுர், கரூர் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் -சூரியூர், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்-நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 398 ஏக்கர் பரப்பளவில் ரூ. 366 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (சிட்கோ) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 17,500 நபர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *