செயற்கை நுண்ணறிவு வரவால் எதிர்காலத்தில் கடின உழைப்புக்கு தேவை இருக்காது

2 Min Read

மும்பை, ஏப். 22 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வரவால் கடின உழைப்பாளிகளுக்கான தேவை எதிர்காலத்தில் இருப்ப தற்கான வாய்ப்பில்லை என்று போர்ட்போலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் நிறுவனரும், சந்தை நிபுணருமான சவுரப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்த தசாப்தத்தில் இந்தியா ஒரு புதிய பொருளாதார கட்டத்தில் நுழைந்துள்ளது. அங்கு ஊதியம் பெறும் நடுத் தர வர்க்கத்தினருக்கான வேலை வாய்ப்பு படிப்படியாக அழிவை எதிர்கொள்ளும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எங்களின் பெற்றோர்கள் ஒரு நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய பழைய மாடல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது.

ஒயிட் காலர் பணிகள்

இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை கட்டியெழுப்பிய வேலை கட்டுமானம் இனி நிலை யானதாக இருக்காது. கடின உழைப்பாளிகளின் வர்க்கத்துக்கு மாற்றாக இனி ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பங்களின் பயன்பாடு பரவலாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒயிட் காலர் பணியாளர்கள் செய்ய வேண்டியவற்றில் பெரும்பாலானவை இப்போது ஏஅய் தொழில்நுட்பத்தால் செய்து முடிக்கப்படுகிறது. கூகுள் அதன் கோடிங் பணியில் மூன்றில் ஒரு பகுதியை ஏற்கெனவே ஏஅய்-யால் செய்து வருவதாக கூறியுள்ளது. இதேநிலைதான் இந்திய தொழில் நுட்பம், ஊடகம் மற்றும் நிதி ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் காரணமாக நடுத்தர அளவிலான தொழில்வாய்ப்புகள் தற்போது தனது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான நெருக்கடிகளை அதிக அளவில் சந்தித்து வருகின்றன.

ஊதியம் வாங்கும் நடுத்தர வர்த்தகத்தினரின் இடையே இருள், அழிவு நிலை சூழ்ந்துள்ளபோதிலும், அரசு குறிப்பிட்ட சில சாதனை களை சப்தமில்லாமல் செய்து முடித்துள்ளது. அதன்படி, ஜன்தன், ஆதார், மொபைல் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துள்ளது. இது வரவிருக்கும் தொழில்முனைவோர் அலைக்கு சிறப்பான களத்தை அமைத்து கொடுக்கும்.

கார்ப்பரேட் தொழில்களுக்கு காட்டிய புத்திசாலித்தனம் மற்றும் மன உறுதியை தொழில் முனைவோராக நாம் பயன்படுத் தினால் செழிப்பின் புதிய எந்திரமாக மாற முடியும். நிலைப்புத்தன்மை மற்றும் ஊதியத்துடன் தொடர் புடைய தத்துவங்களை இந்திய சமூகம் மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு சவுரப் முகர்ஜி தெரிவித் துள்ளார்.

புதிய வேலை வாய்ப்பு

இதுகுறித்து பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கூறுகையில், “ ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில் பணி செய்வது என்கிற நிலை மாறி பல ஆண்டுகள் ஆகின்றன. அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தவிர 60, 70 விழுக்காடு நிறுவனங்களில் இந்த நடைமுறை இல்லை.செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி மனிதர் களால் செய்யப்படும் பல்வேறு வேலைகளை மிகக் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் சிறப்பாக செய்ய முடியும். முன்பு கணினி வந்தபோதும் வங்கிகள் ரயில்வேகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகிவிடும் என்றார்கள். ஆனால், மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டும் இருக் கும் வரை புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும்” என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *