புதுடில்லி, ஏப்.22 அமெரிக்காவில் புதிதாக அமைந்துள்ள டிரம்ப் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்தியாவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதித்து வருகிறது. அப்படி அமெரிக்கா நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளில் முக்கியமானதாக இருப்பது அய்.டி. சேவைத் துறை தான். இதைவிட முக்கியமாக அய்.டி. ஊழியர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
டிரம்ப் அரசின் வர்த்தகத் தடைகள், வரிகள் ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கச் சந்தையின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, இந்தியத் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்குக் கிடைக்கக் கூடிய புதிய அய்.டி. சேவை ஒப்பந்தங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அய்டி நிறுவனங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இது அய்டி ஊழியர்களின் ஊதியத்தை நேரடியாகப் பாதிக்க உள்ளது.
ஊதிய உயர்வு தள்ளி வைப்பு
இந்தியாவில் தற்போது 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசன் என்பதால் முதல் கட்டமாக அய்டி துறை நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. முதலில் டிசிஎஸ் வெளியிட்ட நிலையில் விப்ரோ தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. விப்ரோ நிறுவனம் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும்போது, 2026 ஆம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு அளிப்பதைத் தள்ளிவைத்துள்ளது. இதேபோன்ற முடிவைத் தான் இந்தியாவின் முன்னணி அய்டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எடுத்தது. டிசிஎஸ் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட போதே அனைத்து அய்டி சேவை நிறுவனங்களும் ஊதிய உயர்வை ஒத்திவைக்கும் என கணித்தது போலவே தற்போது நடந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனமும் சரி, விப்ரோ நிறுவனமும் சரி, வர்த்தக சந்தையின் நிலையற்ற தன்மையின் காரணமாகவே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வைத் தள்ளி வைப்பதாகத் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுக்குப் பின்பு இந்திய அய்டி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய வேரியபிள் பே, ஊதிய உயர்வை அவ்வப்போது நிறுத்தி வைத்தும், ரத்து செய்தும் வருகிறது. இதனால் அய்டி ஊழியர்களின் நிதி நிலையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
நிச்சயமற்ற வர்த்தகச் சூழல்
மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த நான்காவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விப்ரோவின் தலைமை மனிதவள அதிகாரி சவுரப் கோவில், அடுத்த நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு குறித்து இப்போதே முடிவெடுப்பது சரியானதாக இருக்காது என்று கூறினார். தற்போதைய பொருளாதார மற்றும் வர்த்தக நிச்சயமற்ற சூழலில், ஊதிய உயர்வை எப்போது கொடுக்கப்படும் என்பதைக் கூற முடியாது. சரியான நேரத்தில் உரிய முடிவை நிர்வாகம் கட்டாயம் எடுக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், விப்ரோ நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழக்கமான நேரத்திற்கு முன்பே ஊதிய உயர்வை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு முந்தைய நிதியாண்டில் டிசம்பர் 2023 இல் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், குறுகிய கால இடைவெளியில் டிசம்பர் மாதத்திற்கு முன்கூட்டியே செப்டம்பர் 2024ல் மீண்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தகத் தடைகளை விதித்து வருவதால் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சம் அமெரிக்காவைக் காட்டிலும் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இது நிதிச் சந்தையில் அதிகப்படியான தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டால், பொருளாதார வளர்ச்சி மற்றும் நுகர்வோர் செலவினம் குறையும், இது அய்டி நிறுவனங்களுக்கான புதிய வர்த்தகத்தைப் பெறுவதை அதிகப்படியாகப் பாதிக்கும் என்ற அச்சத்தில் தான் டிசிஎஸ், விப்ரோ இத்தகைய முடிவுகளை எடுத்து வருகிறது.
நேரடிப் பாதிப்பு
இந்தியாவின் 4ஆவது பெரிய அய்.டி. சேவை நிறுவனமான விப்ரோ, தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது 2025 ஆம் நிதியாண்டிலிருந்து 2026 ஆம் நிதியாண்டுக்கான வர்த்தகம் மற்றும் வருவாய் outlook-கில் நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்கும் வர்த்தகத் தடைகளால் ஏற்படும் macro economic நிலையற்ற தன்மையே இதற்கு முக்கிய காரணம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வர்த்தகத் தடைகள் காரணமாக உலகளவில் இருக்கும் நிறுவனங்கள் அய்டி சேவைக்காகச் செலவிடப்படும் தொகை குறையலாம் என்றும், இது அய்டி நிறுவனங்களை நேரடியாகப் பாதிக்கும் என்றும் விப்ரோ தெரிவித்துள்ளது. மொத்தத்தில், அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகள் இந்திய அய்டி நிறுவனங்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றன. இதில் கொலாட்ரல் டேமேஜ் ஆக அய்டி ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்