சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என். நேரு விளக்கம்
சென்னை, ஏப்.22 திருச்சியில், குடிநீரில் கழி வுநீர் கலந்ததால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், அங்கு நடந்த கோவில் திருவிழாவில் வழங்கப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்பானத்தை குடித்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் சட்டப் பேரவையில் கே.என். நேரு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (21.4.2025) எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவசர பொது முக்கியத்துவம் குறித்து பேசியதாவது:-
4 பேர் உயிரிழப்பு
திருச்சி உறையூர் பகுதி 10-ஆவது வார்டில் மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு, நெசவாளர் தெரு. காமாட்சியம்மன் தெரு, காளையன் தெரு, லிங்கநகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்துள்ளது. அதை உபயோகித்த மின்னப்பன் தெரு முரளியின் 4 வயது குழந்தை பிரியங்கா மற்றும் அங்குசாமியின் மனைவி மருதாம்பாள் (75), கோவிந்தராஜன் மனைவி லதா (32) மற்றும் சுப்பிரமணியன் (54) ஆகிய 4 பேர் உயிரிழந்துவிட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக மக்கள் புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்யவில்லை. அந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அதிகாரிகள் குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். கோடை காலத்தில் குடிநீரை மக்கள் அதிகமாக பயன்படுத்துவதால், தமிழ்நாடு முழுவதும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை வழங்க உத்தரவிட வேண்டும்.
இழப்பீடு
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவ கட்டணத்தை அரசே வழங் கவும் உத்தரவிட வேண்டும். இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் நடை பெறாதபடி அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத் தில், எம். எல்.ஏ.க்கள். வேல்முருகன், எஸ்.எஸ்.பாலாஜி, நாகை மாலி, ஜி.கே.மணி, பிரின்ஸ் ஆகியோரும் பேசினர்.
தமிழ்நாடு முழுவதும் கழிவுகளை கையாள்வதற்காக தனித்துறையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் அரசுக்கு வைத்தனர். அவர்களுக்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
சிறப்பு முகாம்
குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் அந்தப் பகுதியில் மாநக ராட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உறையூர் பகுதியில் 286 சுகாதாரப் பணியாளர்கள் கொண்ட குழு உடனடியாக அமைக்கப்பட்டு, 1,492 வீடுகளில் வசிக்கும் 6,416 மக்களுக்கு தொற்றுநோய் மற்றும் நோய் கண்டறிதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் 53 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்,
வார்டு எண் 8 மற்றும் 10-இல் 9 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மூலம் 28 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர். அதில் 5 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் 11 ஆயிரத்து 875 பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார துறையின் மூலம் 6 இடங் களில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தொற்று நோய் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுப்பாட்டில் உள்ளது
குழந்தை பிரியங்கா இறந்த பிறகு அவரது உடல் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. முதல் பரிசோதனைப்படி, அவர் வயிற்றுப் போக்கு காரணமாக இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பத்திரிகையில் வெளிவந்த 3 பேர் மரணம் என்ற செய்தி முற்றிலும் தவறானது. தற்போது அந்த பகுதியில் மக்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
நீர் ஆய்வு செய்யப்பட்டு, அது குடிக்கத் தகுதியான நீர்தான் என்று தகவல் வந்த பிறகுதான் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அந்தப்பகுதியில் நோய் பரவுதல் முற்றிலும் தடுக்கப்பட்டு, முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. சுகாதாரரத் துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
நீர்மோர், குளிர்பானம்
அருகே இருக்கக்கூடிய கோவில் திருவிழாக்களில் குளிர்பானம் வழங்கப்பட்டு உள்ளது. நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கியதால் தான் அப்பகுதியில் நோய் ஏற்பட்டு இருக்கிறது. குளிர்பானம் வழங்கியது யார்? என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய்கள் மூலம் அனுப்பப்பட்ட நீரினால் இந்த மரணம் நிகழ வில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குளிர்பானத்தின் மாதிரி சேகரிக்கப் பட்டு, யார் அதை வழங்கினார்கள் என்பது கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கி றோம். குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக கூறும் சம்பவம் அந்த பகுதியில் நடக்கவில்லை. அதற்கு மருத்துவரின் சான்றிதழும் உள்ளது. அந்தப் பகுதி எனது தொகுதிக்கு உட்பட்டது. தற்போதுதான் ரூ.40 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. எனவே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் இந்த மரணம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.