புதுடில்லி, ஜூலை 3 – வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.8 உயர்ந்துள்ளதால், வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக உருளை மற்றும் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
பன்னாட்டு சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூலை மாதத்திற்கான வணிக உருளையின் விலை 8 ரூபாய் உயர்ந்து 1,945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 1,118 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு உருளை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டது. மூன்று மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளையின் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதால், வணிகர்கள் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.