சென்னை, ஏப்.21- தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது. வேலூரில்104 டிகிரி பதிவாகி உள்ளது.
8 இடங்களில் சதம் அடித்தது
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பகல் பொழுதில் வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது. இதனால், மதிய பொழுதில் வெளியே செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் நேற்று (20.4.2025) 8 இடங்களில் 100 டிகிரி ஃபார்ன்ஹீட்டை தாண்டியதாக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, வேலூரில் 104 டிகிரி, மதுரை மாநகரம் மற்றும் கரூர் பரமத்தியில் தலா 103 டிகிரியும், ஈரோடு, திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 102 டிகிரியும் சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் நேற்று (20.4.2025) 104.36 டிகிரி வெயில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வானிலை:
மேலும், தமிழ்நாட்டின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலை வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
22-04-2025 முதல் 24-04-2025 வரை தமிழ்நாட்டில் அதிகப்பட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசுப் பணியாளர்கள் நூல்கள் வெளியிட அனுமதி தேவையில்லை
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஏப்.21- அரசு ஊழியர்கள், புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருத்தங்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973இன் கீழ் அரசு ஊழியர்கள் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். மேலும், இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை மற்றும் கவிதை பற்றிய புத்தகங்களை எழுதும் அரசு ஊழியர்கள், பதிப்பகத்தாரிடமிருந்து ஊதியம் பெறும்போது உடனடியாக நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.
தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த விதியில் தமிழ்நாடு அரசு சில திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள், அரசின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகள் தொடர்பான புத்தகங்களைத் தவிர, இலக்கியம், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை மற்றும் தொழில் முறை மற்றும் கல்வி சார்ந்த புத்தகங்களை எழுதி வெளியிடுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிடலாம்.
சுய அறிவிப்பு
அந்த புத்தகத்தில் மாநிலத்திற்கு எதிரான எந்தவொரு விமர்சனமோ, தாக்குதலோ இல்லை மற்றும் புத்தகத்தில் மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்த வொரு ஆட்சேபனைக்குரிய உரையோ, உள்ளடக்கமோ இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சுய அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் புத்தகம் மூலம் பதிப்பகத்தாரிடம் இருந்து ஒருமுறை தொகை அல்லது ராயல்டி பெறுவதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டும்.
அரசு ஊழியர் தனது அலுவல் நேரம் அல்லது பதவி செல்வாக்கை பயன்படுத்தி புத்தக விற்பனையை ஊக்குவிக்கக்கூடாது. இந்த புத்தகம் அரசின் கொள்கை, செயல்பாடுகளை எதிர்க்காமல், சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தம் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 8 இடங்களில் வெயில் சதம் அடித்தது வேலூரில் 104 டிகிரி பதிவு

Leave a Comment