புதுடில்லி, ஏப்.20 ‘‘உ.பி.யில் 80 விழுக்காடு வக்ஃபு நிலங்கள் மாநில அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளன’’ என்று மஜ்லீஸ்-எ-உலாமா-ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மவுலானா கல்பே ஜவேத் புகார் தெரிவித்துள்ளார்.
உ.பி. தலைநகர் லக்னோவின் பழம்பெரும் ஆசீபீ மசூதி இமாமாக கல்பே ஜாவேத் இருக்கிறார். இவர் நேற்று (19.4.2025) செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
வக்ஃபு நிலத்தில் 80 சதவீதம் மாநில அரசின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதை சட்டப்பூர்வமாக்கவே புதிய வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. லக்னோவில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள இந்திரா பவன், ஜவஹர் பவனும் வக்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சியின்போது வக்ஃபு நிலத்தில் அதிகபட்ச அரசு ஆக்கிரமிப்பு நடந்துள்ளது. வக்ஃபு நிலங்களை ஆக்கிரமிப்பதில் காங்கிரஸ் ஒரு குருவாக செயல் பட்டது. அதன் சீடராக தற்போது பாஜக செயல்படுகிறது.
வக்ஃபு திருத்த சட்டம் ஏழைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது, ஆனால், அதன் பலன் என்ன என்பதை அரசு கூறவில்லை. எத்தனை ஏழைகள் பயனடைந்துள்ளனர் என்பதை அரசு கூற வேண்டும். இஸ்லாமியர்களின் உசைனாபாத் அறக்கட்டளை கடந்த 24 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கான வருவாய் உள்ளது. ஆனால், எந்த முஸ்லிமும் இதனால் பயனடையவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வை இருந்தபோதிலும் அறக்கட்டளையில் இருந்த தங்கம்,வெள்ளி பொருட்கள் விற்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.