நாகர்கோவில்,ஏப்.20- நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப் பட்டு வரும் நிலையில், நெடுந்தூரம் செல்லும் வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.
இதையடுத்து தெற்கு ரயில்வே சார்பில் 16 பெட்டிகளுடன் 823 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கி.மீ ஆகும். இதற்கான சோதனை ஓட்டம் முடிக்கப் பட்டுள்ளது. இந்த ரயில்கள் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்த நிலையில், தற்போது தாமதமாகிறது.
நாட்டில் முதல் கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 10 இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது. வடக்கு ரயில்வேயில் முதல் ரயில் இயக்கப்படும்.
தெற்கு ரயில்வேயில் 16 பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட உள்ளது. திருவனந்தபுரம் –- மங்களூரு தடத்தில் முதலில் இந்த ரயில் இயக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதர மண்டலங் களுடன் இணைத்து இயக்கப்படுகின்ற ரயில்கள் வரிசையில் திருவனந்தபுரம் –-பெங்களூரு, கன்னியாகுமரி -சிறீநகர் (கொங்கன் வழி) தடத்தில் இயக்க வாய்ப்புகள் உள்ளது.
சென்னையில் உள்ள அய்சிஎப்பில் வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் தயார் செய்யப்படுகிறது. ரயிலில் பெட்டிகள் இணைப்பை பொறுத்து 1,128 பேர் வரை பயணிக்க இயலும். தற்போது வந்தே பாரத் ரயிலில் 8, 16, 20 சேர் கார் வசதி உள்ளது.
சென்னை அய்சிஎப்பில் உள்ள 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் செயர் கார் 10 பெட்டிகள் எடுத்து ஸ்லீப்பர் பெட்டிகள் மாற்றப்படுகிறது.
10 வந்தே ஸ்லீப்பர் தவிர மேலும் 50 ரயில்களுக்கான பெட்டிகள் தயார் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 2026-2027இல் வெளியாகும்.
வந்தே ஸ்லீப்பர் ரயிலில் படுக்கை வசதிகள் நவீன முறையில் இடம் பெறும். பெட்டியில் இன்டீரியர் வசதி, படிப்பதற்கு வசதியாக சிறப்பு வெளிச்சம் உள்ள தனி வசதி, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய எல்இடி டிஸ்பிளே, சிறப்பு உதவி தேவைப்படுவோருக்கான படுக்கை வசதி, கழிப்பறைகள், ஆட்டோ மேட்டிக் வாசல்கள், கவச் வசதியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இந்த பெட்டியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.