அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா ரத்து ஜெய்சங்கர் நடவடிக்கை எடுப்பாரா? – காங்கிரஸ் கேள்வி

2 Min Read

புதுடில்லி, ஏப். 20- பாலஸ்தீனத்துக்கு ஆதரவான போராட்டம், சட்ட மீறல்கள் போன்ற காரணங்களால், அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவா்கள் தங்கிப் படிக்க அளிக்கப்படும் எஃப்-1 விசாக்களை அந்நாட்டு அதிகாரிகள் ரத்து செய்கின்றனா். இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவா்கள் நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க குடியேற்ற வழக்குரைஞா்கள் சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க வெளியுறவுத் துறையும், குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க முகமையும் வெளிநாட்டு மாணவா்களை மூா்க்கமாக குறிவைத்து, அவா்களின் விசாவை ரத்து செய்தல், அவா்களை கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கி, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவில் போராட்டம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடாத மாணவா்களும் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை.
இதுகுறித்து வழக்குரைஞா்கள், மாணவா்கள், பல்கலைக்கழக ஊழியா்களிடம் 327 விவரக் குறிப்புகள் திரட்டப்பட்டன.

அந்த விவரக் குறிப்புகளை ஆராய்ந்ததில் விசா ரத்து செய்யப்பட்ட மாணவா்களில் 50 சதவீதம் போ் இந்தியா்கள், என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தச் செய்திக்குறிப்பை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக இல்லை.

இதுதொடா்பாக அச்சமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மார்க் ரூபியோவுடன் பேசுவாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மார்கரெட் மெக்லவுட்டிடம் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவா், ‘அமெரிக்காவில் குடியேற்றச் சட்டங்களை அதிபா் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டத்தை பின்பற்றினால், வாய்ப்புகளை அமெரிக்கா அள்ளி வழங்கும்.

சட்டத்தை மீறினால், அதற்கான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியா்கள், அவா்களின் குடும்பத்தினா் தாமாக தாயகம் திரும்பிவிட வேண்டும். கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்க்க அவா்களாகவே இந்தியா திரும்பிவிட வேண்டும்’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *