மதுராந்தகம், ஏப்.20- இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறுநீரை உரமாக மாற்றும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் பழைமையான மார்வார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இங்கு 1956ஆம் ஆண்டு கல்வி பயின்ற மேனாள் மாணவரும், சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான முனைவர் அப்துல் ரஹ்மான் தான் படித்த அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பள்ளியில் புதியதாக தொடங்கபட்டுள்ள விவசாய பிரிவு பயிலும் மாணவர்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் வகையிலும் மாணவர்களின் சிறுநீரை உரமாக்கும் (தானியங்கி) திட்டத்தை தான் படித்த அரசுப் பள்ளிக்கு அமைத்து கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் இந்தப் பள்ளியில் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோன்று இப்பள்ளியில் 1984 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மேனாள் மாணவர்கள் சார்பாக ‘‘நான் முதல்வன்’’ உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மய்யமும் தொடங்கி வைக்கப்பட்டது.