கோலாலம்பூர், ஏப். 19- மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் முக்கிய குடியிருப்பு பகுதியான மேடான் இம்பியில் சட்டவிரோத குடியேறிகள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
இந்தப் பகுதியில் அதிகளவிலான சட்ட விரோத குடியேறிகள் இருப்பது குறித்து குடி நுழைவுத் துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
4 மாடிகளைக் கொண்ட 6 தொகுதி களைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்றில் மொத்தம் 895 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 506 பேர் பல்வேறு குடிநுழைவு விதிமீறல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டனர், அதில் 58 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானா, குஜராத், மத்திய ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் சொத்துக்களை எல்லாம் விற்று எப்படியாவது வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் என்ற மோகத்தில் இதுபோன்ற சட்டவிரோதமான செயல் களில் ஈடுபடுகின்றனர்.
அமெரிக்காவில் மிகவும் அதிக கெடுபிடிகள் துவங்கி விட்டதால் தற்போது மலேசியாவை குறிவைத்து அங்கிருந்து ஆஸ்திரேலியா மற்றும் அய்ரோப்பாவிற்கு செல்ல முயல்கின்றனர். கைது செய்யப்பட்டவர் களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகளைக் கண்டதும் அந்த குடியிருப்பு வளாகத்தின் மேற்கூரைகளில் பலர் தஞ்சமடைந்ததாகவும், சிலர் சுவர் ஏறி குதித்து தப்பியோடியதாகவும் அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிலர் அருகில் உள்ள வணிக வளாகங்களில் புகுந்து கொண்டு வாடிக்கை யாளர்கள் போல் தங்களை காட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.