சென்னை, ஏப்.18 அதிமுகவின் இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக வரும் 28-ஆம் தேதி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் இறுதி விசார ணைக்கு ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
இரட்டை இலை சின்னம்
அதிமுகவில், பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனது செல்லாது. அவர் நடத்திய பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லாது. கட்சி தலைமை பதவியை தொண்டர்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை பழனிசாமி மாற்றியது செல்லாது என ஓபிஎஸ், கட்சியில் தொண்டர்களாக இருந்த ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் உரிமையியல் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில், பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சூரியமூர்த்தி, ராம்குமார் ஆதித்யன், ஓபிஎஸ், புகழேந்தி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திலும் மனு அளித்துள்ளனர். அதன் மீது ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இதற்கிடையே, அதிமுக தொடர் பாக, தான் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வரும் 28ஆம் தேதி விசாரணை
அந்த வழக்கில், சூரியமூர்த்தி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் அனைத்தின் மீது விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அதேநேரம், இவர்கள் யாரும் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால், இவர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில், பழனிசாமி, பன்னீர் செல்வம், பெங்களூரு புகழேந்தி, ராம்குமார் ஆதித்யன், சூரியமூர்த்தி உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பி யுள்ளது. அதில், அதிமுக விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை ஏப்.28-ஆம் தேதி மாலை 3 மணிக்கு டில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதில் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி வழக்கு முடித்துவைப்பு
இதற்கிடையே, சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யக்கோரி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர்அடங்கிய அமர்வில் நேற்று (17.4.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கவுதம் குமார், ‘இரட்டை இலை சி்ன்னம் தொடர்பாக ஏப்.28-ஆம் தேதியன்று இறுதி விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவி்த்துள்ளது’ எனக்கூறி அதற்கான அறிவிப்பை தாக்கல் செய்தார். அதைப்பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.