புதுடில்லி, ஏப்.17 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி பதவி ஏற்றார். அவர் மே 13-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு மூத்த நீதிபதி பெயரை பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதியிடம் ஒன்றிய சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது.
அதற்கு மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் பெயரை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார். அவரது பரிந்துரையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டால், மே 14-ஆம் தேதி நீதிபதி பி.ஆர்.கவாய், நாட்டின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். அவர் 6 மாதங்கள் மட்டுமே அப்பதவியில் இருப்பார். நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெறுவார்.
நீதிபதி பி.ஆர்.கவாய், மராட்டிய மாநிலம் அமராவதி யில் 1960-ஆம் ஆண்டு பிறந் தவர். 2003-ஆம் ஆண்டு நவம் பர் 14-ஆம் தேதி, மும்பை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீதிபதி ஆனார்.
காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்ததை உறுதி செய்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி கவாய் இடம்பெற்றிருந்தார்.
தேர்தல் பத்திர திட்டம் ரத்து, பணமதிப்பு இழப்பு திட்டத்துக்கு ஒப்புதல், தாழ்த்தப்பட்ட இனத்தினரை வகைப்படுத்தி, உள்ஒதுக்கீடு அளிக்க அனுமதி, எந்த கட்டடத்தையும் தாக்கீது அளிக்காமல் இடிக்கத் தடை உள்ளிட்ட தீர்ப்புகளை அளித்த அமர்வுகளில் இடம்பெற்றிருந்தார்.