புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் – கோட்டக்குப்பத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்

viduthalai
3 Min Read

அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

சென்னை. ஏப்.17  ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் அரங்கம் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று பதிலளித்த அமைச்சர் நேற்று (16.4.2025) சட்டப் பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில்,

* தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர், நூல் பல படைத்துள்ளவர், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைவராகத் திகழ்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவுபெறுவதை தொடர்ந்து அவர்தம் தொண்டுகளைப் போற்றி அவரது நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

* இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் தொண்டாற்றிய தமிழ் இசைப் பாடகர், திராவிட இயக்கக் கொள்கைகளை தனது தனித்துவமிக்க குரல் வளத்தால் இசைப் பாடல்களாக பாடியவர், “இசை முரசு” என முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்டவர். இத்தகைய பல்வேறு பெருமைகள் கொண்ட இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி அன்னாரின் நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

* புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும். பாரதிதாசன் (1891-1964) தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் அழைக்கப்பட்டார். அவர் “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969இல் சாகித்திய அகாடமியின் விருது பெற்றவர். அவரது இலக்கியப் பணிகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.

*  வேலூர் அண்ணா கலையரங்கம் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக புனரமைக்கப்படும். வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சி அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கமானது, 1969ஆம் ஆண்டு சிறுவர் அரங்கமாகச் செயல்பட்டு, 1971ஆம் ஆண்டில் அண்ணா கலையரங்கமாகப் பெயர் மாற்றப்பட்டது. வேலூர் மாநகர மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்ற அரங்கமாகத் திகழ்ந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட வேலூர் அண்ணா கலையரங்கத்தினைக் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்தம், புதிய கழிப்பறைகள், ஜெனரேட்டர் வசதி, நவீன எல்.இ.டி. மின் விளக்குகள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

* குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் நூற்றாண்டினை யொட்டி அன்னாருக்கு நாகர்கோவில் நகரில்  சிலை நிறுவப்படும். சுதந்திரப் போராட்டத் தியாகி கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான போராட்டத்தில் மார்ஷல் நேசமணி போர்ப்படைத் தளபதியாக விளங்கியவர், திருவிதாங்கூர் கொச்சி சட்டமன்றப் பேரவைக்கு இருமுறையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு மும்முறையும் தேர்தெடுக்கப்பட்டவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக விளங்கியவர். இத்தகைய பல்வேறு பெருமைகளைப் பெற்றிருந்தாலும் எளிமையாக வாழ்ந்து ஏழை மக்களின் குரலாய் ஒலித்து, மக்கள் நெஞ்சில் மறையாமல் வாழ்பவர். குமரிக் கோமேதகம் எனப் போற்றப்பட்ட பெருமைக்குரிய ஆர்.பொன்னப்ப நாடார் நூற்றாண்டு நிறைவுபெறுவதையொட்டி, அவர் தொண்டுகளைப் போற்றி அவருக்கு நாகர்கோவில் நகரில் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சிலை நிறுவப்படும்.

* தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *