சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (3)
கி.வீரமணி
சிறைத் தண்டனை
இது மிகப் பெரிய வழக்காகி ஓராண்டுக்கும் மேல் ஈரோட்டில் வழக்கு நடைபெற்று மூவருக்கும் தலா 60 ரூபாய் அபராதமும், இரண்டு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் தோழர்கள் இருவரும் அபராதம் செலுத்திவிட்டனர். ஆனால், தோழர் ஈசுவரன் மட்டும் அபராதம் செலுத்த மறுத்துச் சிறை புகுந்தார். பின்பு உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, ஈசுவரன் விடுதலை செய்யப்பட்டார்.
இதையொட்டி பெரியார் ஈ.வெ.ரா. தாம் வகித்து வந்த ஈரோடு தேவஸ்தானக் கமிட்டி துணைத்தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது!
“ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் உயர்திரு ஈ.வெ.ராமசாமிப் பெரியாரவர்கள், தாம் வகித்து வந்த வைஸ்பிரசிடெண்ட் பதவியையும் மெம்பர் பதவியையும், இந்துக்கள் என்போர் எல்லோரும் ஜாதி வித்தியாசம் இன்றி இக்கமிட்டிக்குட்பட்ட ஆலயங் களில் போகலாம் என்று நிறைவேறிய தீர்மானம் இனி ரத்து செய்யப்படப் போவதாய்த் தெரிவதால் இராஜிநாமா செய்து விட்டார்.” (“நாடார் குல மித்திரன்” 22.07.1929) அதுமட்டுமா?
மகாராஷ்டிர தேசத்தில் சுயமரியாதைப் போர் முழக்கம்
1929 அக்டோபர் 13 ஆம் தேதியன்று தீண்டா ஜாதியார் ஒரு பட்டாளம் போல் அணிவகுத்து அம்மன் தரிசனம் செய்ய பார்வதி ஆலயத்துக்குச் சென்றார்கள். அவர்கள் பலாத்காரத்தில் இறங்காமல் சாந்தமாகவும் ஒழுங்காவும் நடந்து கொண்டார்கள். அவர்கள் ஆலயதரிசனம் செய்யப் போவதைப் பற்றி ஸ்தல போலீஸ் அதிகாரிகளுக்கும் மாஜிஸ்டிரேட்டுக்கும் முன்னறிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. ஜில்லா மாஜிஸ்திரேட்டு பரிவாரங்களுடன் பார்வதி ஆலய மிருக்கும் இடத்திற்கு வந்திருந்தார். தீண்டாதாரின் இந்நன் முயற்சியைத் தடுக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஜாதி ஹிந்துக்களும் பார்வதி குன்றில் திரளாகக் கூடியிருந்தார்கள். தீண்டாதார் ஆலயத்தண்டை சென்றவுடன் சமாதானப் பிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள் செருப்பு, குடை, செங்கல் முதலியவைகளைச் சத்யாக்கிரகிகள் மேல் வாரி வீசினார்கள்.
சத்தியாக்கிரகப் போரினால் உண்டாகக் கூடிய கஷ்டங்களைத் தாங்கத் துணிந்து நின்ற சத்தியாக் கிரகிகள் கூட்டத்தில் சில பெண்களும் இருந்தார்கள். பெண்ணைக் கண்டால் பேயும் இரங்குமென்பார்கள். ஆனால், ஜீவகாருண்யமுடைய பார்ப்பனர்களோ கடுகளவும் மனம் இரங்கவில்லை.
இம்மியளவும் மான, வெட்க உணர்ச்சியின்றிப் பார்ப்பனர்கள் கூச்சல் போட்டுக் கேலி செய்து ஆபாசமாக ஏசி மிகவும் தடாலடித் தனமாக நடந்து கொண்டதினால் மானத்தைப் பெரிதாக மதித்த மாதர்கள் அக்கூட்டத்தலிருந்து தப்பியோடி உயிர்பிழைத்தார்கள். ஏனைய சத்யாக்கிரக வீரர்கள் சிறிதளவும் பின்வாங்கவில்லை. அஞ்சா நெஞ்சு படைத்த வீரர்களைப் போல் தைரியமாக நின்றார்கள். தம் பக்கம் ஞாய பலமிருப்பதினால் உற்சாகம் கொண்டு மெல்ல மெல்ல குன்றின்மேல் ஏறத் தொடங்கினார்கள். வழி நெடுகப் பார்ப்பன இளைஞூர்கள் நின்று கொண்டு சத்தியாகிரகிகளைப் பார்த்து ஊளையிட்டுக் கொண்டும் கேலி செய்து கொண்டும் கூச்சல்களையும் பயமுறுத்தல்களையும் செய்தார்கள். சத்தியாக்கிரகிகள் அதை மதியாமல் முன்னேறிச் சென்று கொண்டே இருந்தார்கள். பார்த்தார்கள் பார்ப்பனர்கள்! சத்யாக்கிரகிகள் சிறிதள வேனும் அச்சமின்றி முன்னேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க அவர்களுக்குச் சகிக்கவில்லை. கடைசியாக சத்யாக்கிரகிகள் மேல் பாய்ந்து அடிக்கத் தொடங் கினார்கள். சத்தியாக்கிரகிகள் மேல் அடிகள் விழுந்த வண்ணமாகயிருந்தன. கல்மாரியும் கணக்கின்றிப் பெய்தது. நிலைமை நெருக்கடியாகப் போலீசாரும் மாஜிஸ்திரேட்டும் குறுக்கிட்டு அக்கிரமம் செய்த பார்ப்பனர்களில் சிலரைக் கைது செய்து சத்தியாக்கிரகி களையும் மேலேற வொட்டாமல் தடுத்து நிறுத்தினர்.
(‘திராவிடன்‘, 30.10.1929)
தமிழ்நாட்டின் ஆதரவு
பூனா சத்தியாகிரகிகளுக்கு ஆதரவாக சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள நேப்பியர் பார்க்கில் 22.10.1929 தேதி மாலையில் பூனாவில் பார்வதி ஆலயத்தில் நடக்கும் சத்தியாக்கிரகத்தை ஆதரிப்பதற் காகவும் தமிழ்நாட்டிலும் ஆலயப் பிரவேச விஷயமாய் ஏதாவது யோசனை செய்வதற்காகவும் உயர்திரு டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியன் அவர்கள் தலைமையில் ஒரு மகாநாடு கூடியது.
அக்கூட்டத்திற்கு திருவாளர்கள் சிவராஜ் பி.ஏ.பி.எல்.,எம்.எல்.சி., ராவ்சாகிப் ரங்கநாதம் செட்டியார், கவுன்சிலர் தர்மலிங்கம் பிள்ளை, பண்டித முனுசாமி, பாலகுருசிவம், வி.அய்.முனுசாமிப் பிள்ளை, எல்லப்ப வாத்தியார், சாமிசகஜானந்தம், ராமானுஜலு நாயுடு முதலிய அநேகர் வந்திருந்தார்கள்.
பெரியார் அவர்கள் “சகோதரர்களே! நமது தமிழ் நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8, 9 மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்து பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3, 4 மாதமே ஆகிவிட்டன. ஆனால், பம்பாய்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கிவிட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வடநாட்டில் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன. நாமோ மற்றொருவர் செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.
நிற்க, சிலர் நம்மை உங்களுக்குத்தான் இந்த மாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்று கேட்கின்றார்கள். ஆனால் சகோதரர்களே! நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப்போலவேதான். அதாவது, கோயிலில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய, அவை கடவுள்கள் அல்லவென்பதை தாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள்.
பாமரருக்குப் புரியாது
ஆனால், கடவுளை மனிதன் நினைக்க – ஞாபகம் வருவதற்காகவே கோயிலும் அதனுள் இருக்கும் கல், செம்பு, காரை, மரம், படம் முதலிய சிலை உருவங்களும், பெரியோர்களால் செய்துவைத்த ஏற்பாடுகளாகும் என்றும், பாமர மக்களுக்கு இதைச் சொன்னால் புரியாதென்றும், அதையே கடவுள் வீடு என்றும், உள்ளிருப்பவைகளே கடவுள்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது என்பதாக தத்துவார்த்தம் சொல்லுகின்றார்கள்.
இந்த தத்துவார்த்தம் சொல்லுகின்றவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கின்றேன் என்றால் – ஒன்று, இவர்கள் கடவுளை மிகக் கேவலப்படுத்துபவர் களாயிருக்க வேண்டும்; அல்லது கடவுள் தன்மை இன்னது என்பதை அறியாத மூடர்களாயிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் பொதுஜனங்களை ஏமாற்றும் அயோக்கியர்களாயிருக்க வேண்டும் என்பதேயாகும்.
ஏனெனில், எல்லாம் வல்லவரும் எங்கும் இருப்ப வரும். சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டுமென்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும் கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானேயானால். அவன் கடவுள் என்பதற்கு மேல்கண்ட எல்லாம் வல்ல சக்தியும் எங்கும் உள்ள சக்தியும் ஒப்புக் கொண்டவனாவானா என்று கேட்கின்றேன். (சிரிப்பும் கரகோஷமும்). ஆதலால், ஒரு சமயம் கோயில்கள் மூடர்களால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் நமக்கு ஆட்சேபனை இல்லை.
மனிதத் தன்மைக்கு பொருத்தமில்லாத
அப்படிக்கில்லாமல் கோயில்கள் அறிவாளிகளால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் கண்டிப்பாய் அந்த அறிவாளி என்பவர்கள் சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்தவர்களாகத்தானிருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கோயில்கள் இப்போது அந்த பெரியோர்கள் என்பவர்களின் ஆதாரப்படி (ஆகமப்படி) நடந்து வருவதாகவே இருக்கின்றது. அந்த ஆகமங்கள் என்பவைகளே மனிதன் அந்தக் கோயிலுக்குள் போகவும் அங்குள்ள சாமியை வணங்கவும் பல நிபந்தனைகளைக் கொண்டதாக இருக்கின்றது. அந்த நிபந்தனைகள் மனிதத் தன்மைக்குச் சிறிதும் பொருத்தமில்லாததாய் இருக்கின்றன.
அதில் ஒரு சிறிதும் ஒழுக்கத்திற்கும் பக்திக்கும் ஆதாரமானதும் கடவுள் ஞாபகம் வருவதற்கு ஆதாரமானதுமான காரியங்கள் இல்லவே இல்லை. அங்குள்ள கடவுள்களைப் பார்த்தால் கடவுள் ஞாபகம் வருமென்றால் அங்குள்ள தாசிகளைப் பார்த்தால் தாசிகள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன். மற்றும் அங்கு கடவுளை வணங்க வரும் மற்ற பெண்களைப் பார்த்தால் பெண்கள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன்.
அடிமைப்படுத்த…
உணர்ச்சியற்ற குழவிக் கல்லைப் பார்த்த மாத்திரத்தில் கடவுள் ஞாபகம் வருவதானால், உயிருள்ள ஜீவன்கள், பெண்கள், தங்களைப் பிறர் பார்க்கவேண்டுமென்று அலங்கரித்துக் கொண்டு வந்து நின்றால், ஏன் அந்த ஞாபகம் வராது? அன்றியும் அங்கு கடவுளுக்கு நடக்கும் மற்ற காரியங்களையும் பார்த்தால், ஏன் பார்க்கின்ற மனிதனுக்கு மற்ற ஞாபகமும் வராது என்று கேட்கின்றேன். கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாக பாதைக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும், மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும் உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டு சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும்.
முற்காலத்தில் இருந்த அரசர்கள் மூடர்களும் அயோக்கியர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக் கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆட்சியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும் அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காக பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். அவ்வித சூழ்ச்சியை ஒழிக்கவே நாம் எல்லோருக்கும் கோயில் பிரவேசம் கேட்கின்றோம்.
இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவை எல்லாம் ஒரு விதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருந் தாலும் இந்தக் கோயில்கள்தாம் சிறிது மாற்றுவதற்கு இடம் தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றன. ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோவிலுக்குள் போய்த் தீர வேண்டுமென்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவ மன்னிப்புக்காகவோ அல்லவே அல்ல. கோவிலில் சமத்துவமடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோவிலில் பிரவேசிக்க நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை.
ஜாதி வித்தியாசம்
இன்றைய தினம் எல்லோரும் கோவிலுக்குள் ஜாதி வித்தியாசமின்றி விடப்பட்டு விட்டார்கள் என்று ஏற்பட்டு விட்டால், நாளைய தினமே நான் அங்கு எதற்காகப் போகின்றீர்கள்? அங்கு என்ன இருக்கின்றது? அங்கு போனதால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படுகின்றது? ஏன் உங்கள் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் அறிவையும் பாழாக்கு கிறீர்கள்? என்று சொல்லித் தடுக்கவே முயற்சிப்பேன். ஏனென்றால், கோவிலில் உள்ள ஜாதி வித்தியாசம் காரணமாகவே சில மூடர்கள் கோயில்களைப் புனிதமான இடம் என்று கருதிக் கொண்டு தங்கள் பணத்தையும் புத்தியையும் பாழாக்கி வருகின்றார்கள்.
நம் நாட்டின் வறுமைக்கும் முட்டாள்தனத்திற்கும் கோயில் வரியும் புரோகிதர்கள் வரியும் ஆகமங்களுமே காரணமாகும் என்பது எனது உறுதியான எண்ணம். தரித்திரமும், ஜாதி வித்தியாசமும் ஒழிந்து நமது நாட்டில் அறிவும் செல்வமும், பெருக வேண்டுமானால் இந்தக் கோவில்களும் புரோகிதர்களும் அடியோடு அழிக்கப் பட்டாக வேண்டும். எனவே, இம்முயற்சிகள் பலாத்காரத்தின் மூலம் துவக்குவது என்பது எனக்கு ஒரு சிறிதும் நம்பிக்கை இல்லாததும் பிடிக்காததுமான காரியமாகும். ஏனெனில், நூற்றுக்குத் தொண்ணூறு மனிதர்கள் உண்மையாகவே தீண்டாமையை நம்பிக் கொண்டு ஆட்சேபிக்கும்படியான பாமரத்தன்மையில் இருக்கின்றார்கள்.
அவர்களிடம் பலாத்காரம் செய்வது நியாயமற்றதும் பாதகமானதுமாகும். சத்தியாக்கிரகத்தின் மூலம் இவர்களுக்கு தானாகவே தீண்டாமை என்பது புரட்டு என்று வெளிப்பட்டுவிடும். பிறகு பொதுஜன அபிப்பிராயம் நமக்கு அனுகூலமாக திரும்பிவிடும். அப்போதுதான் எதிரிகள் பலாத்காரமேற்பட்டுவிடுமோ என பயந்துவிடுவார்கள். நாம் இப்போது பலாத்காரம் ஆரம்பித்தால் பாமர மக்கள் தொல்லையும் சர்க்கார் தொல்லையும் எதிரிகள் சூழ்ச்சியும் நம்மை தோல்வியிலேயே கொண்டுபோய் விட்டுவிடும்.
எச்சரிக்கையாக
நாம் சத்தியாக்கிரகம் செய்வதில்கூட மிக்க ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில், நாம் எந்தக் கோவிலிலாவது சத்தியாக்கிரகம் ஆரம்பித்தால், அந்தக் கோயிலால் பொறுக்கித் தின்னும்படியான அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி, சாவியைக் கொண்டுபோய் நமது மூட சிகாமணி களாகிய தர்மகர்த்தாக்களிடம் கொடுத்து, உங்கள் பெரியவர்களால் கட்டப்பட்டு எவ்வளவோ சக்தியுடன் இருந்து வந்த கோயிலின் பெருமையை அழிக்க வந்துவிட்டார்கள்; அதை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும், இல்லாவிட்டால் உலகமே முழுகிப்போகும் என்று சொல்லி அவனுக்கும் நன்றாகச் சாவி கொடுத்துவிட்டுப் போய் விடுவார்கள், கடைசியாக தர்மகர்த்தாவாயிருப்பவன் பாமர மக்களை ஏவிவிடுவான். அவர்கள் முரட்டுத்தனமாய் பலாத்காரத்தில் இறங்கும் ஆத்திரத்துடன் வருவார்கள். அந்த சமயத்தில் நாம் ஜாக்கிரதையாய் இருந்து சிறிதும் பொறுமையை இழக்காமல் அவர்களால் ஏற்படும் துன்பங்களைச் சகித்துக்கொண்டு இருந்து விட்டோமேயானால் நாம் வெற்றி அடைந்துவிடுவோம் என்பது உறுதி.
தொடரும்