மயிலாப்பூர், ஏப். 17- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில் 03.04.2025 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில், மாவட்ட இளைஞர் அணி செயலாளர், பெரியார் யுவராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திணிப்பை கண்டித்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மய்யக் குழு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வி. சாரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர்
எஸ்.கே.சிவா, கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.
மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரை யாற்றினார். கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக பேச்சாளர் தே.நர்மதா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றும் போது; இந்த மயிலாப்பூர் பகுதி சிறப்பு வாய்ந்த பகுதியாகும். இங்கேதான் இரண்டு வகையான மக்கள் குடி இருக்கிறார்கள். இங்கே இருக்கக்கூடிய டீகடை வைத்திருப்பவர்கள், மளிகைக்கடை வைத்திருப்பவர்கள், காய்கறி கடை வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களில் அனைவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களே ஆகும். டீக்கடை நடத்தும், மளிகைக்கடை நடத்தும், தள்ளு வண்டியிலே காய்கறி விற்பனை செய்யும், ஆட்டோ ஓட்டும் எந்த நபராவது பார்ப்பனர்களாக இருக் கிறார்களா? இருக்க மாட்டார்கள்! அவர்கள் உயர் பதவிகளிலே தான் இருப்பார்கள்.
நாம் கேட்கிறோமா?
ஒன்றிய அரசே பட்டியல் வெளி யிட்டுள்ளது. அதில் நூற்றுக்கு மூன்று பேராக இருக்கக்கூடிய பார்ப்பனர்கள், நூற்றுக்கு 97 விழுக்காடு உயர் பதவி களில் இருக்கிறார்கள். இதை யார் கேட்க வேண்டும்? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவரான நாம்தான் கேட்க வேண்டும். ஆனால் நாம் கேட்கிறோமா?
தந்தை பெரியார் ஒருவர் தான் போர்க் குரலை உயர்த்தினார். எந்த உயர் பதவிகளையும் வகிக்காமல் சாதனைகளை செய்து காட்டினார்.
அன்று கல்வி ஒரு சிலருக்கு மட்டுமாகவே, அதுவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமாகவே இருந்தது. கிறித்தவ மதம் கல்வியில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு பரப்புரையின் காரணமாக மக்கள் விழிப்படைந்து கல்வியில் பெரும் முன் னேற்றத்தைக் கண்டு சமூக தர நிலையை பெற்றனர்.
குலக்கல்வித் திட்டம் விரட்டப்பட்டது
தந்தை பெரியார் என்ன செய்து விட்டார் என்று சிலர் கேட்கிறார்கள்;
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில் முன்னேறுவதை தடுப்ப தற்காக அப்பொழுது முதலமைச்சராக இருந்த இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். தந்தை பெரியார் போராட்டங்களை முன்னெடுத்து குலக் கல்வி திட்டத்தை விரட்டியடித்தார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோ ரின் கல்வி வேலைவாய்ப்புக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை தடை செய்த போது; தந்தை பெரியார் வெகுண்டெழுந்து போராட்டங்களை நடத்தி, இந்திய அரசமைப்புச் சட்டத் தையே முதல் முதலாக திருத்த வைத்தவர் தந்தை பெரியாரும்,திராவிடர் கழகமும்தான்.
69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆபத்து வந்தபோது, பார்ப்பனர்களான பிரதமர், குடியரசுத் தலைவர், முதலமைச்சர் ஆகியோரைக் கொண்டே சட்டத்தை திருத்த வைத்து பாதுகாப்பைப் பெற்று தந்தது திராவிடர் கழகம்! தமிழர் தலைவர் ஆசிரியர்! யாரோ ஒருவர் மட்டுமே படித்துக் கொண்டிருந்த போது; அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தபோது; எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று போராடியது தான் திராவிடர் கழகம் – பெரியார்!
தமிழர்கள் படிக்க கூடாது என்பதற் காகவே திட்டமிட்டு அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார்; தந்தை பெரியார் போராடியதன் பயனாக இராஜகோபாலாச்சரியை ஒடவிட்டு, குலக்கல்வியை விரட்டி அடித்து அனைவரும் படிக்க வழி வகுத்தது திராவிடர் கழகம்!’நான் தமிழை ஆதரிப்பதற்கு காரணம், தமிழர்களின் முற்போக்குக்கு தமிழ் பயன்படுவதால் தான்’ என்றார் பெரியார்.
உயர்கல்வியில் முதலிடம்
ஆங்கிலம், ஆங்கிலேயர்களின் மொழி; ஆனால் ஆங்கிலம் நம்மை அந்நியப்படுத்திய மொழி அல்ல. ஹிந்தியும், சமஸ்கிருதமும் தான் நம்மை அடிமைப்படுத்தியது, அந்நிய படுத்தியது.
தமிழையும் ஆங்கிலத்தையும் மட்டுமே படித்த தமிழ்நாடு எந்த வகையில் தாழ்ந்து போனது! இந்தியாவிலேயே தமிழ்நாடு தானே, உயர்கல்வியில் முதல் இடத்தில் உள்ளது. இதை ஒன்றிய அரசே பட்டியலிட்டு கூறியுள்ளதே!
இன்று வக்பு திருத்த சட்டம் மூலம் இசுலாமியர்களிடம் கை வைத்திருக்கிறார்கள். நாளை கிறித்தவர்கள் மீது கை வைப்பார்கள் அதற்கு அடுத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மீது கை வைப்பார்கள். ஆகையால் அனைவரும் விழிப்புடன் இருந்து பிஜேபி யை எதிர்க்க வேண்டும். வலிமை வாய்ந்த திராவிடர் கழகம் சொல்கிறது; ஒத்திசைவு பட்டியலுக்கு எடுத்துச் சென்ற கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
ஒழிக்கும் வரை ஓய்வில்லை
திராவிடர் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அம்பேத்கர் இயக்கங்களையும், பொதுவுடைமை இயக்கத்தையும் நசுக்க நினைத்தால், உங்களை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம்!
நீட் தேர்வை தீவிரமாக எதிர்த்து போராடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்,திராவிட மாடல் அரசையும் வெகுவாக பாராட்டுகிறோம்’ என்று கூறி எழுச்சியுரையாற்றி முடித்தார்.
பங்கேற்றோர்
மாமன்ற திமுக உறுப்பினர் அ.ரேவதி, மயிலாப்பூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் எஸ்.முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதி திமுக செயலாளர், நந்தனம் மதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் கி.குமரப்பா, மண்டல செயலாளர் ரூதர்,கார்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் து.கா. பகலவன் ஆகியோர் பங்கேற்றனர்.
125ஆவது வட்ட திமுக செயலாளர் அ.தவநேசன் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சா.தாமோதரன், ச.மாரியப்பன், இராயப்பேட்டை கோ.அரிஹரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு, அ.அன்பரசன், ச.துணைவேந்தன், ச.சந்தோஷ், வி.வளர்மதி, ஜெ. சொப்பன சுந்தரி, க.விசயராசா, பி.அஜந்தா, மு.பவானி, மு.பாரதி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி,ஜெயசங்கரி, பெரியார் மணிமொழியன், டைலர் கண்ணன், உதயா, மயிலாப்பூர் பாலு, கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, வே.பாண்டு, க. தமிழ்ச் செல்வன், சு.மோகன்ராஜ், சோ. சுரேஷ், வை.கலையரசன், மு.பசும்பொன், மு.செல்வி, செ.பெ. தொண்டறம், பெரியார் மாணாக்கன், உடுமலை வடிவேல், சு.அன்புச்செல்வன், பா.சிவகுமார், ச.தாஸ், சி.சண்முகம், சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சு.திலீபன், சோ.பாலு, அ.நாகராஜன், பரணி, கோ.தர்மன்,
ந. அய்யனார், ஆவடி நாகராசன், மேனாள் மாமன்ற உறுப்பினர் மு. தம்பிதுரை, ஆர். கிருஷ்ணவேணி, வி. சவுமியா, எ.லலிதா, ஜி.சோமு,ஆர். ஞானபிரபு, கே. சுகுமார், எ.குமாரி, தெ.கோ. வேலன், எம்.புகழேந்தி, கே. நித்தியானந்தம்,
கே.பாஷா, அ.மாதன்குமார், ம.நவந்துன், விசு, ஜி.சண்முகம், சி.தங்கசாமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஹிந்தி திணிப்பு, மும்மொழித்திணிப்பு மற்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்கான விளக்கங்களை செவிமடுத்து எழுச்சியுடன் சென்றனர். முன்னதாக அறிவுமானனின் சிறப் பானதொரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து நன்றியுரையாற்றினார்.
ஆங்காங்கே நெகிழித்திரைகளும், பரவலாக கழகக்கொடிகளும் நடப் பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி ஆதலால் பயணிப்போர் செவிமடுத்துச் சென்றனர்.