‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’
சென்னை சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தீர்மானத்தை முன்மொழிந்தார்–
மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வழிமொழிந்த கண்கொள்ளாக் காட்சி!
சென்னை, ஏப்.16 ‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்!’’ என்ற தீர்மானத்தை சென்னை சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்மொழிந்தார்– மக்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வழிமொழிந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
அதன் விவரம் வருமாறு:
நேற்று (15.4.2024) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிடுகையில்,
‘‘உச்சநீதிமன்றம் கண்டித்துத் தீர்ப்பு வழங்கிய பிறகும், இன்னமும் திமிர் அடங்காமல், ஆணவத்தோடு தேவையில்லாமல் நேரிடையாக அரசியல் செய்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கூட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
இவ்வளவு மோசமாக ஓர் ஆளுநர் செயல்படுவதால், இந்த அரங்கம் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
‘‘உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டும் திருந்தாமல், மீண்டும் மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசை விமர்சனம் செய்வதும்; மதக் கலவரங்களைத் தூண்டுவதும்; அரசுக்கும், மக்களுக்கும் விரோதமான சர்ச்சைக்குரிய கருத்துகளையும் எடுத்துச் சொல்லுகின்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், உடனடியாக பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும்’’ என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்கவேண்டும்.
நீதிமன்றம் மதிக்கப்படவேண்டும்; மக்கள் மன்றம் மதிக்கப்படவேண்டும்.
ஆளுநர் அந்தப் பதவியிலிருந்து விலகவில்லையானால், அவரை விலக்கவேண்டும்; வெளியேற்றவேண்டும் என்பதே நாம் ஒருமித்துச் சொல்லக்கூடிய கருத்தாகும்.
நாளை முதற்கொண்டு, அடுத்து பல திட்டங்கள், இந்த ஆளுநரை வெளியேற்றும்வரையில் தமிழ்நாடு ஓயாது, ஒழியாது.
அந்தப் பணியை, அனைத்துக் கட்சியினரும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஜனநாயகத்திற்கு நம்பிக்கையுள்ளவர்கள் அத்துணை பேரும் செய்வோம், செய்வோம் என்று எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருடைய கரவொலியோடு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது’’ என்றார்.