புதுடில்லி, ஏப்.15- 100 நாள் வேலைத் திட்ட குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.400 ஆகவும், வேலைநாட்களை 150 நாட்களாகவும் உயர்த்துமாறு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் ஆய்வு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒன்றிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சப்தகிரி சங்கர் உலாகா தலைமையிலான அக்குழுவின் அறிக்கை, சமீபத்தில் நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட் டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
100 நாள் வேலைத் திட்டம் எவ்வளவு செயல்திறனுடன் செயல் படுகிறது என்பதை மதிப்பிடுவது அவசியம் அதற்காக அத்திட்டத்தை சுதந்திர மாகவும், வெளிப் படையாகவும் நாடு முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும்.
பணியாளர்கள் திருப்தியாக உள்ளார்களா? ஊதியம் தாமதமின்றி கிடைக்கிறதா? நிதி முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்பது பற்றி யெல்லாம் ஆய்வில் கவனம் செலுத்த வேண்டும்.
150 நாட்கள்
தற்போது, 100 நாட்கள் உத்தரவாதமாக வேலை அளிக்கப்படுகிறது. அந்த நாட்களை உயர்த்த வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக் கைகள் வருகின்றன.
கால மாற்றம், உருவாகி வரும் சவால்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வேலைநாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும்.
வனப் பகுதிகளில் வாழும் பழங் குடியினருக்கான வேலை நாட்கள் உச்ச வரம்பை 150 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.
ரூ.400 ஊதியம்
தற்போதைய ஊதியம், அன்றாட அடிப்படை செலவுகளுக்குகூட போதவில்லை. எனவே, தற்போதைய பொருளாதார யதார்த்தத்தை கருதி, மதிப்புவாய்ந்த ஊதியம் அளிக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.400 வழங்கப்பட வேண்டும்.
ஊதியம் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. தாமதமாக வழங்கப்படும் ஊதியத்துக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். ஆதாரில் இருப்பது போன்ற எழுத்துகளுடன் பெயர் இல்லாததால், லட்சக்கணக் கானோரின் வேலைவாய்ப்பு அட்டைகள் நீக்கப் பட்டுள்ளன. இதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.