சுயமரியாதை இயக்கமும் கோயில் நுழைவுப் போராட்டங்களும் (2)
கி.வீரமணி
சுயமரியாதைப் போர்
இம்முடிவைத் தெரிவித்தவுடன் பார்ப்பனர்கள் முகம் வாடிற்று. அவர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டார்கள். எதிரிகள் தம் அபராதத் தொகையைக் கட்டிவிட்டார்கள். பார்ப்பனரல்லாதார் திரு. கண்ணப்பர் கோர்ட்டிலிருக்கும் வரை கூட்ட மாய் மகிழ்ச்சிப் பெருக்குடன் கூடி நின்றார்கள். 2ஆவது எதிரி குப்புசாமிக் குருக்கள் ஆத்திரம் பொறுக்கமாட்டாமல் அபராதத் தொகையைக் கட்டும்போது “எங்களுக்கு என்ன நஷ்டம்? கோயில் பணத்தை தானே கட்டுகிறோம்” என்றார். உடனே கோர்ட்டில் இருந்த ஒருவர், “யார் வீட்டுப் பணமாயினும் அபராதம் அபராதம்தானே” என்றார். திருவண்ணாமலை முழுதும், அக்கிரகாரம் தவிர, கண்ணப்பர் சுயமரியாதைப் போரில் வெற்றி பெற்றதைப் பற்றி மகிழ்கின்றது.
ஆதித்திராவிடர்கள் ஒரு கூட்டமாக அன்றிரவு 9 மணிக்குக் கூட்டி, திரு.கண்ணப்பரை வாழ்த்தி, அவருக்கு பூமாலை சூட்டி ரயிலடிக்கு வந்து உபசரித்தார்கள். ரயிலடியில் திரு. கண்ணப்பருக்கு ஜே! என்ற கர கோஷத்தினிடையில் திரு. கண்ணப்பர் திருவண்ணாமலையின்றும் புறப்பட்டார்.
(‘குடிஅரசு’ 06.051928)
கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் (பின்னாளில் ‘முத்தமிழ்க் காவலர்’ என்று அழைக்கப்பட்டவர்) தலைமையில் 1927இல் சுமார் 1000 பேர் அனைத்து ஜாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் நுழையச் சென்றனர். நுழைவு வாயிலையும் கருவறையையும் கோயில் நிருவாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று “மணிக்கதவம் தாழ் திறவாய்” என்ற திருநாவுக்கரசர் பாடலைப் பாடினார். 12.08.1928 இல் திருவானைக் கோயிலிலும் 25.06.1928 இல் திருச்சி மலைக் கோயிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் அதே 1927 இல் பல இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தினார்.
திருச்சியில் கோவிலதிகாரிகள் பலாத்காரம்
திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குச் சுவாமி தரிசனத்திற்குத் திருவாளர்கள் ஜே.என். ராமநாதனும் மற்றும் அவர்களின் பல நண்பர்களும் சென்றதற்காகக் கோவில் அதிகாரிகள் காலிகளை வைத்து வழிமறித்து அடிக்கும்படி ஏற்பாடு செய்து நன்றாக அடித்துத் துன்பப்படுத்தி விட்டதாக, திரு.இராமநாதன் அவர்களால் திருச்சி நியாயஸ்தலத்தில் கோவிலதிரிகாரிகளின் மீது பிராது தொடரப்பட்டிருக்கிறது. இந்தப் பிராதுக்குப் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் பீசு இல்லாமல் ஆஜராகி வழக்கு நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவை மீறி நடப்பதற்காகவும் மேல்கண்ட விவகாரத்தை நடத்துவதற்காகவும் ஏற்படும் செலவுக்காகப் பொருளுதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
திருச்சியில் 144
திருச்சி மலைக்கோட்டைக் கோயிலுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்று திருவாளர்கள் ஜே.எஸ். கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை, ஜே.என். ராமநாதன் ஆகியவர்களுக்கு அவ்வூர் மாஜிஸ்திரேட் திரு.சீனிவாசராவ் என்கின்ற ஒரு பார்ப்பனரால் 114 ஆம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இவ்வுத்தரவு அக்கிரமமான உத்தரவானதால் அதை மீறிப் பிரவேசித்துச் சிறைபுகத் தீர்மானித்து, திருவாளர்கள் கண்ணப்பரும் தண்டபாணி பிள்ளையும் முடிவு செய்து விட்டார்கள். இன்று அல்லது நாளை திருச்சிக்குச் சென்று உத்தரவை மீறுவார்கள்.
(‘குடிஅரசு’, 24.06.1928)
25.06.1928 இல் திருச்சி மலைக்கோட்டை ஆலய நுழைவு நடைபெற்றது. அறங்காவலராக விளங்கிய காசிவிஸ்வநாதன் என்பவர் திருச்சி மலைக்கோவிலுள் தாழ்த்தப்பட்டவர்களுடன் நுழைவதைத் தடுக்க முயன்றார். 50,000 பேர் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். சுயமரியாதைத் தொண்டர்கள் தலைமையில் ஆலய நுழைவு நடைபெற்றது. 144 தடையை உடைத்து ஆலயத்தினுள் நுழைந்தனர். கடவுளை ஏற்காத சுயமரியாதையினர்தாம் தமிழகத்தில் முதன்முதலில் ஆலயங்களைத் திறந்து விட்டவர்கள் என்பது வரலாற்று உண்மை.
(ஆதாரம் : சுயமரியாதை இயக்கம், ந.க. மங்களமுருகேசன், பக். 230-231)
சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள்
1929, பிப் 17, 18 செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி,
ஜாதி பேதம்: (அ) மக்கள் பிறவியினால் உயர்வு – தாழ்வு உண்டு என்ற கொள்கையை இம்மகாநாடு அடியோடு மறுப்பதுடன் அதை ஆதரிக்கிற மதம், வேதம், சாஸ்திரம், புராணங்களையெல்லாம் பொது ஜனங்கள் பின்பற்றக் கூடாதென்றும்,
(ஆ) வருணாசிரமமென்ற கொடுமையான கட்டுப்பாட்டையும் சமுதாய முறையில் காணப்படும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் முதலிய ஆட்சேபகரமான பிரிவுகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்றும்,
(இ) மனித நாகரிகத்திற்கும், தேச முன்னேற்றத் திற்கும் தடையான தீண்டாமை என்பதை ஒழித்து எல்லாப் பொது ரஸ்தாக்கள், குளங்கள், கிணறுகள், பாடசாலைகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள், கோவில்கள் முதலிய பொது ஸ்தாபனங்களைத் தட்டுத் தடங்கலின்றி அனுபவிக்க, சகல ஜனங்களுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது.
(ஈ) இவை நிறைவேறச் செய்யப்படும் பிரசார மும், முயற்சியும் ஒரு சில சுயநல வகுப்பாரின் மத சம்பந்தமான பிடிவாதத்தினாலும், முட்டுக் கட்டையினாலும் போதிய அளவு சித்தி பெறாம லிருப்பதால், இதற்கான அராசாங்கச் சட்டம் அவசியம் என்று கருதுகிறபடியால், சட்டசபைப் பிரதிநிதிகளும், சர்க்காரும் தக்க ஏற்பாடு செய்து பொது ஜன முயற்சிக்கு உதவி புரிய வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
4. (அ) ஜாதிப்பட்டமும், மதக்குறியும்: மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டுவிட வேண்டுமென்று இம்மகாநாடு பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்கிறது.
(ஆ) ஜாதி அல்லது சமயப் பிரிவுகளைக் காட்டும் குறிகளை யாரும் அணிந்து கொள்ளக் கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறது.
கோயில் திறப்பு
ஏப்ரல் முதல் வாரத்தில் ஈரோடு தேவஸ்தான கமிட்டியில் ஆதி திராவிடர்களுக்குக் கோயில் திறந்துவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோழர்கள் குத்தூசி குருசாமி, பூவாளுர் பொன்னம்பலனார், மாயவரம் சி. நடராசன் ஆகியோர் முயற்சியால் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோயிலில், கோயில் நுழைவு செய்யத் திட்டமிட்டனர்.
சுயமரியாதை இயக்கத்தில் இருந்த ஈரோடு ஈசுவரன் என்பவரையும், ‘குடிஅரசு’ அலுவலகத்தில் தொழிலாளர்களாக வேலை செய்த கருப்பன், பசுபதி என்ற இரண்டு ஆதித்திராவிடர்களையும் 06.04.1929 அன்று கோட்டை ஈசுவரன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்,
ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும், ஆசாரமாகவும் ஆலயத்திற்குச் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டிவிட்டுப் போய்விட்டதும் பிறகு வெகு நேரம் குருக்கள் வராததால் கோவிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும், பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாள்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம்.
விசாரணை
இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ.295, 299, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்குப் போனவுடன் உடனே விசாரணை தொடங்குவதாய் மாஜிஸ்திரேட் சொன்னதாகவும், எதிரிகள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னது என்று தெரியக் கூட முடியாதபடி விசாரிப்பதன் இரகசியம் தெரியவில்லை ஆகையால், வாய்தா கொடுத்தாலொழிய, விசாரணையில் கலந்து கொள்ளமாட்டோம் என்று சொன்னார்களாம். அதற்கு மாஜிஸ்ட்திரேட் கோபமாகவும், ஆத்திரமாகவும் வாய்தா கொடுக்கப்படமாட்டாது என்றும், பிராதின் விபரம் தெரியவேண்டுமானால் விண்ணப்பம் போட்டால் நகல் உடனே கொடுக்கப்படும் என்றும், நாளையே விசாரணை செய்து கேஸ் முடிக்கப்படும் என்றும் சொன்னாராம்.
எதிரிகள் மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நீங்கள் ஒரு பார்ப்பனராயிருப்பதாலும் உங்கள் கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்த்தால் எங்களுக்கு உங்கள் மனப்பான்மை ஏற்கெனவே விரோதமாகக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றதாலும் உங்களிடம் இந்த வழக்கு நடப்பதன் மூலம் நியாயம் பார்க்க முடியாதென்றும், வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக் கொள்ள முயற்சிக்கப்பட வேண்டியிருப்பதால் வாய்தா கொடுங்கள் என்றும் விண்ணப்பம் கொடுத்துக் கேட்டார்களாம். உடனே மேஜிட்ஸ்ரேட்டுக்கு மயக்கமுண்டாகி அந்த விண்ணப்பத்தை ஏதோ சாக்குச் சொல்லி எதிரிகளிடம் கொடுத்துவிட்டு திங்கட்கிழமை வரை வாய்தா கொடுத்திருப்பதாக தாமே உத்தரவிட்டு விட்டு முச்சலிக்கை வாங்கிக் கொள்ளும்படி சொல்லி விட்டார்களாம். திங்கட்கிழமை தினமும் எதிரிகள் இவ்வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற விண்ணப்பம் போடுவார்கள் என்பதாகத் தெரியவருகின்றது!
மக்களின் ஆதரவு
ஊர் முழுவதும் எதிரிகளுக்கும் எதிரிகளின் செய்கைக்கும், அனுகூலமாகவும் குதூகுலமாகவும் இருக்கின்றது. கூட்டங்களுக்கு 1000, 2000 ஜனங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றார்கள். தினப்படி மீட்டிங்குகள் நடக்கின்றன. வழக்கை எதிர் வழக்காடாமல் விட்டுவிட்டு இதையே சத்தியாகிரகமாகச் செய்து தினப்படி ஜெயிலுக்கு ஆள்களை அனுப்பிக் கொண்டிருக்கலாம் என்பதாகச் சிலரும், எதிர் வழக்காடுவதன் மூலம் உரிமை உண்டா? – இல்லையா? என்பதை உணர்ந்து பிறகு வேறு ஏதாவது காரியம் செய்யலாம் என்பதாகச் சிலரும் கருதிக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
எதற்கும் திரு.ஈ.வெ.ராமசாமியார் இவ்விரண்டு வாரமும் வெளி ஊர்களிடையே இருந்திருப்பதால் அதாவது சென்னை, கோயமுத்தூர், பாலக்காடு, கொச்சி, ஆலப்புழை முதலிய இடங்களிலும் கோயமுத்தூர், திருச்செங்கோடு, சேலம் முதலிய இடங்களிலும் மகாநாடு காரியமாகவும் முன்னாலேயே ஒப்புக் கொண்ட படியும் போக வேண்டியிருந்ததால் இக்காரியங்கள் எதிலும் கலந்து கொள்ளவோ கலந்து யோசிக்கவோ முடியாமல் போய்விட்டது. ஆனாலும் சீக்கிரத்தில் கலந்து ஏதாவது ஒரு முடிவுக்கு வரப்படும். எதற்கும் தக்க முஸ்தீபுகளுடன் முன் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஒரு சமயம் தாராளமாகத் தொண்டர்களும் பணமும் வேண்டி இருந்தாலும் இருக்கும். அதோடு இவ்விஷயம் துவக்கப்பட்டுவிட்டால் சட்டசபை தேர்தல்களைப் பற்றி கவனிக்க முடியா மல் போனாலும் போகலாம். ஆதலால் தேர்தல் விஷயமான சகல பொறுப்பையும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் எடுத்துக் கொள்ளவிட்டுவிட்டு சுயமரியாதை இயக்கத்தார்களும், மற்றும் சீர்திருத்தக் கொள்கைக்காரர்களும் இதில் முனைந்து நிற்பதின் மூலம் தீண்டாமை விலக்கு பிரச்சாரம் செய்வதும் பொது ஜனங்களுடைய மனப்பான்மையை இன்னும் அதிகமாக நமக்கு அனுகூலமாக்கிக் கொள்ளும் விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்வதும் மேன்மையாகும். ஆலயபிரவேச உரிமையைப் பற்றி நமது நாட்டில் பார்ப்பனர்களின் வர்ணாசிரம மகாநாடு ஒன்று தவிர, மற்றபடி எல்லா ஸ்தாபனங்களும் இயக்கங்களும் இது சமயம் அனுகூலமாகவே இருக்கின்றன.
அதாவது சமய சம்பந்தமாக வைணவ சைவ சமய மகாநாடுகளும்,அரசியல் சம்பந்தமாக காங்கிரஸ்கள், சுய ராஜ்ய கட்சி, சுதந்திர தேசிய கட்சி பூரண, சுயேட்சை கட்சி ஹோம்ருல் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென்னிந்திய நல உரிமைக் கட்சி மற்றும் சமூக சம்பந்தமான எல்லா இயக்கங்கள், மகாநாடுகள், இந்து மகாசபை மார்வாடிசபை மற்றும் அநேக பொது கூட்டங்களும், கடைசியாக எல்லாக் கட்சியும் மகாநாடு என்பதும், நேரு திட்டம் என்பதும், மந்திரிகள் உபன்யாசங்களும் சைமன் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யதாஸ்துகளும் மற்றும் எல்லாத் தலைவர்கள் என்பவர்களும் பிராமணன் என்கின்ற பத்திரிகை தவிர, மற்றபடி எல்லாப் பத்திரிகைகளும் குறிப்பாக பிரஸ்தாப கோவில் சம்பந்தப்பட்ட தேவஸ்தான கமிட்டியும் அனுகூலமாக இருப்பதோடு அல்லாமல் தேவஸ்தான இலாகா மந்திரியினுடையவும் எண்டோமெண்ட்போர்ட் மெம்பர்களினுடையவும் அபிப்பிராயமும் கடைசியாக கவர் மெண்டினுடைய போக்கும் இச்செய்கைக்கு அனுகூலமாக இருப்பதுடன் ஆதரிப்பும் இருந்துவருகின்றது. இவ்வளவு ஆதரிப்பும் அனுகூலமும் இருப்பதோடு நமது நாட்டில் பணமும் தொண்டர்களும் தாராளமாய் கிடைக்கத்தக்க வண்ணம் தேசநிலையும் இருந்து வருகின்றது. எனவே, இம்மாதிரியான முயற்சிக்கு இனி இதைத் தவிர வேறு ஒரு தக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, இந்தக் காரியம் முக்கியமா அல்லது சட்டசபை தேர்தல் காரியம் முக்கியமா என்று யோசித்தால், தேர்தலை விட இதுவே முக்கியமென்று அநேகருக்கு தோன் றலாம் என்றே கருதுகின்றோம். ஆதலால் எதற்கும் பணக்காரர்களும் தொண்டர்களும் தயாராய் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
(‘குடிஅரசு’ – கட்டுரை – 21.04.1929)
(தொடரும்)