சிங்கப்பூர், ஏப். 15- சிங்கப்பூரில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கக் (சிங்கப்பூர் பிரிவு) கலந்துரை யாடல் கூட்டம் 28-03-2025 வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரை சிங்கப்பூரில் உள்ள one people sg என்ற இடத்தில் நடைபெற்றது.
பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரண்டு வாரம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பும் போது, சிங்கப்பூரில் நடைபெற்ற பல்கலைக் கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் (சிங்கப்பூர் பிரிவு) கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பழைய மாணவி கி.குடியரசி அவர்கள் வரவேற்புரை ஆற்றும் போது,
பெண்கட்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்கு கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே!
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கூற்றை உண்மை ஆக்கியவர் தந்தைபெரியார் அவர்கள். அவருக்கு பின்னும் அவரது கொள்கைகளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பரப்பி தொண்டாற்றிவரும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர், கி.வீரமணி அவர்களை கல்லூரியின் பழைய மாணவிகள் சிங்கப்பூர் பிரிவின் சார்பாக நாங்கள் வரவேற்பதில் பெருமை கொள்கிறோம்.
தன்னுடைய இடை விடா சுற்றுப் பயணத்திற்கு இடையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி குறுகிய நேரத்தில் நாம் அழைத்ததை மகிழ்வோடு ஏற்று எங்களது நிகழ்வை சிறப்பிக்க வந்து இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
கரோனா தொற்று காரணமாகவும், அத்துடன் தற்போதைய தலைவர் கமலகண்ணன் நிரந்தரமாக இந்தியாவிற்கு சென்று விட்டதாலும் நமது அமைப்பின் செயல்பாட்டில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால் புதிய செயலவை உறுப்பினர்களை நியமனம் செய்யவும், இந்த ஆண்டிற்கான செயல்பாட்டு தீர்மானங்களை உறுதிப் படுத்தவும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ததாக கூறினார்.
சிறப்புரை
பெரியார் பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை ஒரு குடும்பத் தலைவரின் கலந்துரையாடலாக மிகுந்த மகிழ்ச்சியாக நடந்தது. ஆசிரியர் அவர்கள் பேசத் தொடங்கும்போது கலந்துகொண்ட பழைய மாணவிகளை ஒவ்வொருவரையும் தங்களை அறிமுகப்படுத்தி பேசச் சொன்னார்கள். அதன்படி மாணவிகள் பேசும்போது ஒவ்வொரு மாணவியரும் தங்கள் ஊரின் பெயரைக் கூறும் போது ஆசிரியர் அவர்கள் அந்த ஊரின் சிறப்புகளைக் கூறியது மாணவிகளை பெரிதும் வியப்படையச் செய்தது.
மாணவிகள் பேசும்போது, மகள் அப்பாவிடம் பேசும் உணர்வுடன் மிகவும் இயல்பாக அவர்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டு, பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி என்பதனால்தான் எங்கள் பெற்றோர்கள் எங்களை சேர்த்தார்கள். அங்கு படிக்கும் போது பெற்ற தன்னம்பிக்கை உணர்வுதான் இன்று எங்களை சிங்கப்பூரில் தனியாக குடும்பத்தை, அலுவலகத்தை துணிச்சலுடன் நிர்வகிக்க முடிகிறது, எல்லா பிரச்சினைகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகிறது அதற்கு காரணம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் படித்ததுதான் என்று கூறினார்கள். ஆசிரியர் அவர்கள் பேசும் போது, அப்போது நம் கல்லூரி பெண்களுக்கான பொறியியல் கல்லூரி என்பதால் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வந்து பயின்றார்கள். அது மேலும் ஒரு தனி சிறப்பு என்று கூறினார். எப்போதும் பெண்கள் எதையும் எதிர் கொள்ள தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்று கூறினார்.
மேலும் நம் கல்லூரியின் பழைய மாணவர்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள், பல பேரை நான் வெளிநாடு செல்லும்போது விமான நிலையங்களில் சந்தித்துள்ளேன் – அவர்கள் ஆர்வமாக என்னிடம் வந்து பேசி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒளிப்படம் எடுத்துக்கொள்வார்கள் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நம் கல்லூரி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் நிறையப் பேர் இங்கு இருப்பார்கள், அவர்களை எல்லாம் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து தொடர்ந்து சிங்கப்பூரில் இயங்குங்கள் என்று கூறினார்.
ஆசிரியர் பேசிமுடிந்த உடன் பல்கலைக் கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் பிரிவு) புதிய செயலவை உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டார்கள்.
புதிய செயலவை உறுப்பினர்கள்
தலைவர் : கி.குடியரசி
துணைத் தலைவர்: செல்வகுமாரி
செயலாளர் : வள்ளிகண்ணு
பொருளாளர்: ச.கவிதா
ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.
புதிய செயலவை உறுப்பினர்களுக்கு ஆசிரியர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
புதிய செயலவையின் இந்த ஆண்டுக்கான தீர்மானங்களாக
1. Registration of Periyar Maniammai University, Singapore chapter
2. Volunteer service to Singapore organizations
2. SG60 Run with பெரியார் சமூக சேவை மன்றத்துடன் இணைந்து செய்யலாம்.
3. குடும்ப விழா
4. Alumni உறுப்பினர்களை அதிகப்படுத்துவது.
என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பழைய மாணவி கவிதா ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். குடியரசி Lee Ek Tieng: The Green General of Lee Kuan Yew என்ற புத்தகத்தினை ஆசிரியர் அவர்களிடம் நினைவுப் பரிசாக வழங்கினார். சுந்தரமீனாள் கவிதைப் புத்தகத்தினையும், அதியமான் நெடுமான் அஞ்சி சிங்கப்பூரின் மணிமகுடம் என்ற புத்தகத்தினையும் அன்பளிப்பாக கொடுத்தார்கள்.
இறுதியாக பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி பழைய மாணவி வள்ளி கண்ணு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன், ஆடிட்டர் நா.மாறன், செயற்குழு உறுப்பினர் ராஜராஜன், பெரியார் பாலிடெக்னிக் பழைய மாணவிகள் தமிழ்ச்செல்வி, கவிதாமாறன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
குடியரசி அதியமான் அவர்களின் பேரன் அகரன் (3 வயது) திருக்குறள் கூறி அய்யாவிடம் சிங்கை வெள்ளி பரிசாக பெற்றான்.
அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
செய்தி: கி.குடியரசி, சிங்கப்பூர்.