தமிழ்நாடு மாத்திரமல்லாமல் கேரள நாட்டிலும் பரவி அங்கும் பலத்த உணர்ச்சியை சுயமரியாதை இயக்கம் உண்டாக்கியிருக்கிறது. இவை தவிர சென்னை மாகாணத்தில் மாத்திரம் இல்லாமல் சமீப காலமாக பம்பாய் மாகாணத்திலும் சுயமரியாதை இயக்கம் பரவி, பிரபலஸ்தர்களால் மகாநாடுகள் கூட்டப்பட்டு, அய்ம்பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடி, தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களை லிட மிகவும் முற்போக்கானதும் முக்கியமானதுமான தீர்மானங்களைத் தைரியமாகவும் தாரளமாகவும் நிறைவேற்றி இருக்கின்றார்கள்.
டாக்டர் அம்பேத்கர் தனது பிரசங்கத்தில் ‘இந்து சமூகத்தில் உள்ள உயர்வு-தாழ்வே மக்களின் சுயமரியாதையையும் ஆண்மையையும் பலத்தையும் கெடுத்து விட்டது. நல்வாழ்க்கைக்குச் சுயமரியாதை அவசியமானது. ஜாதிபேதம் வருணாசிரமம் ஆகியவைகளைச் சட்டம் மூலமும் அழித்தால்தான் மனிதத்தன்மை அடைய முடியும். இதற்குச் சுயமரியாதை இயக்கமே முக்கிய இயக்கமாகும்.”
(‘திராவிடன்’, 10.06.1929)