அண்ணல் அம்பேத்கரை அணைத்து அழிக்கப் பார்க்கிறார்கள்;
நாம் எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம்!
புத்த மார்க்கத்தை அணைத்து அழித்ததுபோல, அண்ணல் அம்பேத்கரையும் ஆரிய சக்திகள் அணைத்து அழிக்கப் பார்க்கின்றன. எச்சரிக்கையாக இருந்து அதனை முறியடிப்போம் – இதுவே, அவரின் பிறந்த நாளில் நாம் எடுக்கும் உறுதிமொழி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உலகத் தலைவர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (14.4.2025).
உலகமெங்கும் உள்ள சமத்துவ விரும்பிகளும், சமூகநீதிப் போராளிகளும் தங்களது வழிகாட்டிகளாக தந்தை பெரியார், ‘பாபா சாகேப்’ அம்பேத்கரை ஏற்று, இன்றைய உரிமைப் போராட்டங்களுக்கு அவர்க ளையே வலிமைமிக்க பேராயுதங்களாக, போர்க் கருவிகளாகக் கொண்டு களப் பணிகளை மிகுந்த உற்சாகத்துடன் நடத்தி மகிழ்கிறார்கள்!
காரணம், பல்லாயிரம் ஆண்டு பழைமையான ஸநாதனத்தினை எதிர்த்து, சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர அறிவுள்ள மக்கள் சமூகத்தினை ஒருங்கிணைக்க இவ்விரு புரட்சியாளர்களை விட்டால், விடியலுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் (மகளிர் உள்பட) உரிமைக்கு வேறு யாரும் கிடைக்கவே மாட்டார்கள் என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்!
பவுத்தத்தையே அணைத்து
அழித்தவர்கள் எச்சரிக்கை!
அழித்தவர்கள் எச்சரிக்கை!
புரட்சியாளர் அம்பேத்கரை எதிர்த்து அழிக்க முடியாத காரணத்தால், ஆரியம் அதற்கே உரிய சூழ்ச்சித் திட்டமாகிய அணைத்து, புகழ்ந்து அழித்து விட ஆயத்தமாகி நிற்கும் பேரபாயம் நம்முன்னே உள்ளது!
எதிரிகளின் புகழ் வார்த்தைகள் – பாராட்டுரைகளை அம்பேத்கரின் உண்மைச் சீடர்கள் நம்பினால், இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ்சும்; தலைசிறந்த ஒழுக்க அறிவு மார்க்கமான பவுத்தத்தினை அணைத்து அழித்த வரலாற்றை – இந்திய மண்ணிலிருந்து விரட்டிய கொடுமையை – அதனை எவரே மறக்க முடியும்?
எனவே, ‘பாராட்டுகிறவர்கள்’ யார் என்பதை அறிந்து, அவர்களின் பாசாங்குத்தனத்தினைப் புரிந்து அம்பேத்கரை பரப்புவதைவிட முக்கியம் – தத்துவம், கொள்கை, லட்சிய ரீதியாக பாதுகாப்பதே முக்கியம்! வெகுமுக்கியம்!!
அண்ணலின் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தவர் நமது முதலமைச்சர்!
‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற நமது முதல மைச்சர், அம்பேத்கரின் பிறந்த நாளை ‘‘சமத்துவ நாளாக‘‘ அறிவித்து, உறுதிமொழி ஏற்கச் செய்துள்ள சாதனைக்கு – வரலாறு அவருக்கும், அவரது சிறப்புமிகு ஆட்சிக்கும் என்றென்றும் வாழ்த்துக் கூறும் என்பது நிச்சயம் – காரணம், அது ‘திராவிட ஆட்சியின் லட்சியம்’ அல்லவா! திராவிடர் இயக்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்!!
இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தானே!!!
வாழ்க அம்பேத்கர்! வாழ்க பெரியார்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
14.4.2025