கி.வீரமணி
சுயமரியாதை இயக்கம் – ஒரு மனித உரிமை இயக்கம் ஆகும். பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கேரள மாநிலத்தில் வைக்கத்தில் கோயில் உள்ள தெருக்களில் நடந்து செல்வதற்கு உரிமை கேட்டுப் போராட்டத்தைத் தொடங்கினார். 1925 நவம்பரில் காங்கிரசில் இருந்து விலகிய நிலையில் கல்பாத்தி, சுசீந்தரம் போன்ற இடங்களில் நடந்த மனித உரிமைப் போராட்டங்களை ஆதரித்தார். தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியபின், கோயில் ஒரு பொது இடம் என்பதை விளக்கி, கோயில் நுழைவுப் போராட்டங்களை தம் இயக்கத்தவர் மூலம் நடத்திக் காட்டினார்.
இருட்டடிப்பு
நீதிக்கட்சித் தொண்டர்களும், சுயமரியாதை இயக்கத்தினரும் நடத்திய கோயில் நுழைவுப் போராட்டங்கள் இன்றுவரை இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன.
சுயமரியாதை இயக்கம் சார்பில் 1926இல் டிசம்பர் மாதத்தில் மதுரையில் நடைபெற்ற பார்ப் பனரல்லாதார் மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. (அ) மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றும், சமூக வாழ்வில் எல்லோரையும் சமமாய்ப் பாவிக்க வேண்டும் என்றும் இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) தீண்டாமை என்னும் கொடிய வழக்கமானது, மனிதருக்கு மனிதரைப் பிரித்து வைக்கவும், நிரந்தரமாய் ஒற்றுமை இல்லாமல் செய்யவும், மனிதனின் பிறப்புரிமையான சுயமரியாதையைக் கெடுப்பதுமாய் இருப்பதால் இதை அடியுடன் ஒழிக்க வேண்டுமென்று இந்த மகாநாடு வற்புறுத்துகிறது.
2. பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்போர்கள் தங்களது மத சம்பந்தமான சுப – அசுப சடங்குகளுக்குத் தங்களைவிட மேல் வகுப்பாரைக் கொண்டு செய்து கொள்ளுவது நாமே நம்மைத் தாழ்ந்த வகுப்பார் என்று ஒப்புக் கொள்வதாயிருப்பதாலும், இவ்வித மனப்பான்மையே நமது சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாரமாயிருப்பதாலும், இனி இவ்வழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
3. (ஆ) இந்துக் கோவில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படும் எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகையிலும் சமவுரிமை உண்டென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.
(‘குடிஅரசு’, 06.01.1927)
1926 முதல் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் சமூகத் தடைகளை அகற்றுவதில் இணைந்தே பாடுபட்டு வந்தன.
தீண்டாமை ஒழிப்பு
1927 மே 7, 8 தேதிகளில் தஞ்சை மாவட்டப் பார்ப்பனரல்லாதார் மாநாடு மாயவரத்தில் நடைபெற்றபோது தீண்டாமை மற்றும் ஜாதி ஒழிப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் வருமாறு:
பிறப்பினால் உயர்வு தாழ்வு என்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிற வழக்கமானது நாட்டின் முன் னேற்றத்திற்கும் சுயராஜ்ஜியத்துக்கும் தடையாக இருப்பதால் அந்த ஜாதி வித்தியாசத்தை விட்டு விட வேண்டுமென்று பார்ப்பனரல்லாதாரைக் கேட்டுக் கொள்வதுடன் கலியாணங்களிலும் மற்ற சடங்குகளிலும் பார்ப்பனக் குருக்களை வைத்து நடத்தக்கூடாதெனவும் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சமுதாய உரிமை கொடுக்க வேண்டுமெனவும், கோவில்களில் சென்று கடவுள் வழிபாடு செய்யவும் பொது வீதிகளையும் குளம் கிணறுகளையும் எல்லா ஜனங்களும் உபயோகப்படுத்த அனுமதிக்க வேண்டுமென்றும் இம்மாநாடு கருதுகிறது.
(‘குடிஅரசு’, 15.05.1927)
மதுரையில் தனிப்பட்ட முறையில் தாமே பூஜை செய்ய முடியும் என்பது ஒரு கிளர்ச்சியாக 1927 ஜனவரியில் ஜே.என்.இராமநாதன் அவர்களால் நடத்தப்பட்டது.
ஆலயப் பிரவேசம்
அது குறித்த ‘குடிஅரசு’ பதிவு கீழே தரப்படுகிறது.
மதுரை, பிப்ரவரி, 1- நேற்றிரவு 8-மணி முதல் நடுராத்திரி 12-மணி வரை சிறீமீனாட்சியம்மன் கோயிலின் வாயிற் கதவுகளெல்லாம் மூடப்பட்டு பலமான போலீஸ் பஸ்தோபஸ்துகளும் வைக்கப் பட்டிருந்ததனால் நகரில் எங்கும் மிகுந்த பரபரப் பேற்பட்டிருந்தது. அந்நேரங்களில் வழக்கமாக நடக்க வேண்டிய பூஜைகளும் இதர கோவில் காரியங்களும் நடவாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சிறீமான் ஜே.என்.ராமநாதன், பிள்ளையார் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் சென்று கோயில் பட்டர்களுடைய (அர்ச்சகர்களுடைய) ஆட்சேபனைகளையும் கவனியாமல் கணேசருக்கு தாமாகவே தேங்காய் உடைத்து கர்ப்பூர ஹாரத்தி செய்ததாகவும், பிறகு அவர் தமது நண்பர்களுடன் சிறீமீனாட்சி கோயிலுக்குச் சென்றதாகவும் சொல்லப்பட்டது, அவர்கள் சிறீமீனாட்சியம்மனின் கர்ப்பக்கிரஹத்திற்குள்ளும் நுழைவார்களென்று அஞ்சி பட்டர்கள் அதன் கதவுகளை மூடி விட்டார்கள். மேலும் சிறீமான் ஜே.என்.ராமநாதனும் (நெல்லை) அவரது நண்பர்களும் பிராமணரல்லாதார் வழக்கமாக நின்று தொழும் இடமாகிய அர்த்த மண்டபத்திற்கு வெளியே தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தார்கள். அவர்கள் கோயில் அர்ச்சகர்களின் ஆட்சேபனைகளைக் கவனிக்கவில்லை. இதனால் மிகுந்த பரபரப்பேற்பட்டது. வெளியிலுள்ள பெரிய கோபுர வாயிற் கதவுகளும் உள்பட எல்லாக் கதவுகளும் மூடப்பட்டிருந்தன சிறீமான் ராமநாதன் உள்ளிட்ட உள்ளிருந்தவர்கள் இரவு 9:30 மணிவரை வெளியே செல்ல முடியவில்லை. போலீஸார் விசாரணை செய்தார்கள்.
சிறீமான் ராமநாதன் வெளியே வந்த பொழுது வெளியே கூடியிருந்த பெரும் ஜனக்கூட்டத்தினர் அவரைக்கண்டு சந்தோச ஆரவாரம் செய்து அவருக்கு மாலை போட்டார்கள்! அவ்வாறே ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். சுதேசி ஸ்டோருக்கு அருகில் இரவு 12:30மணிக்கு நடந்த கூட்டத்தில் சிறீமான் ராமநாதன் கோயிலுக்குள் நடந்த விஷயங்களை விளக்கி உபந்நியாசம் செய்தார்.
(‘குடிஅரசு’, 06.02.1927)
திராவிடர் இயக்கத்தின் சார்பில் முதல் கோயில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே.எஸ். கண்ணப்பர் ஆவார். இவர் 07.02.1927 இல் திருவண்ணாமலைக் கோயிலில் ஆதி திராவிடர்களை அழைத்துச் சென்றார். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது.
இது குறித்த ‘குடிஅரசு’ ஏட்டின் பதிவு.
திருவண்ணாமலையில் மூடிய கதவு
‘திராவிடன்’ ஆசிரியர் சிறீ ஜே.எஸ்.கண்ணப்பர் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய 7.2.1927 திங்கட்கிழமை காலையில் சென்றார். அதுசமயம் சிறீமான்கள் தாலுகா போர்டு வைஸ்பிரசிடெண்டு ராமசந்திர செட்டியார், செங்கம் கோவாப்ரேடிவ் சொசைட்டி காரியதரிசி வரதராஜுலு ரெட்டியார், வேலூர் பண்டிதர் துரைசாமி முதலியார், திண்டுக்கல் சங்கரப்ப நாயக்கர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கோபால் பிள்ளை, பிராகியூடிஷன் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாச முதலியார், நரசிம்மலு நாயுடு மற்றும் பலரும் சுவாமி தரிசனத்திற்குச் சென்றார்கள்.
இது விஷயம் தெரிந்த கோவிலதிகாரியான இராமநாத சாஸ்திரி என்கிற ஒரு பார்ப்பனர் சிறீமான் கண்ணப்பரை கோவிலுக்குள் விடக்கூடாதென நினைத்து அர்ச்சகர்களும் அதிகாரியுமாய்க்கூடி கோபுர வாசற் கதவை அடைத்து விட்டார்கள். கூட வந்திருந்த போலீஸ் அதிகாரி கதவைத் திறக்கச் செய்து கோவிலுக்குள் போகும்படி செய்தார்.
சிறீமான் கண்ணப்பர் கோவிலுக்குள் போனவுடன் மேற்படி பார்ப்பனர் உடனே சுவாமி சந்நதியையும் அம்மன் சந்நிதியையும் மூடிவிட்டார். சிறீமான் கண்ணப்பரும் கூட வந்திருந்தவர்களும் கோவில் தர்மகர்த்தாக்களிலொருவரான வேட்டவலம் ஜமீன்தாரவர்களும் எவ்வளவோ சொல்லியும் சொல்லியனுப்பியும் கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். இதோடு கூடவே அன்று முக்கிய தினமாயிருந்தபடியால் மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான ஆண் – பெண் பக்தர்களும் சிறீமான் கண்ணப்பருள்பட சுவாமி தெரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்து வீடு சென்றார்கள். இதைப் பற்றி பொது ஜனங்களுக்குள் பெருத்த பரபரப்பேற்பட்டிருந்தபடியால் அன்று மாலை 16 கால் மண்டபத்தில் 10,000 பேர் கூடிய ஒரு பெரும் கூட்டத்தில் சிறீமான் கண்ணப்பர் மேற்படி பார்ப்பனர்களின் அக்கிரமங்களையெல்லாம் விஸ்தாரமாய் எடுத்துச் சொன்னதோடு மறுநாள் மேற்படி பார்ப்பனர்களின் மீது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஒரு பிராதும் கொடுத்துவிட்டு இரவு சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.
திருவண்ணாமலைக் கோயில் வழக்கு
– எதிரிகளுக்குத் தண்டனை
நஷ்ட ஈடு
கண்ணப்பருக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டது. அது குறித்த ‘குடிஅரசு’ ஏட்டின் பதிவு இதோ:
“30 ஆம் தேதி எப்போது வரும் என்று எதிர் பார்த்தபடி வந்தது. காலை 11:00 மணிக்குள் கோயில் வழக்கு முடிவைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மாஜிஸ்திரேட் அவர்கள் பகல் 12:00 மணிக்கு வந்தார். வந்து ஜட்ஜ்மெண்டு இன்னும் எழுதி முடிக்கவில்லையென்றும், 1 மணி நேரத்திற்குள் சொல்வதாயும் கூறினார். ஜனங்கள் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக அங்கேயே வெயிலையும் புழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் கூடியிருந்தார்கள். மாஜிஸ்திரேட் எப்பொழுது வாய்திறந்து சொல்வார் என்று அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். நேரம் ஆக ஆக அக்கூட்டம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. போலீசாரால் கூடக் கூச்சலை அடக்க முடியவில்லை. பகல் 3 மணிக்கு மாஜிஸ்டிரேட் எதிரிகளைக் கூப்பிடும்படியாய் உத்தரவிட்டார். மாஜிஸ்திரேட் எதிரிகளைப் பார்த்து தமிழில் பின்வருமாறு தம் ஜட்ஜ்மெண்டின் சுருக்கத்தை கூறினார்.
வாதி கண்ணப்பரை அருணாசலீஸ்வரர் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய விடாதபடி நீங்கள் இருவரும் (ராமநாத சாஸ்திரி, குப்புசாமி குருக்கள்) கதவுகளை இரண்டடி தூரத்தில் பூட்டித் தடுத்தீர்கள். அதற்கு அவர் பக்கம் கவுரவமான சாட்சியம் சொல்லியிருக்கின்றார்கள். கண்ணப்பரின் சாட்சிகளுள் ஒருவர் தாலுகா போர்டு வைஸ் பிரஸிடெண்ட், போலிஸ் பிராஸிகியூட்டிவ் சப் – இன்ஸ்பெக்டர், ஒருவர் ஒரு ஜமீன்தார். மற்றவர் ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜ். உங்கள் பக்கமோ சாட்சிகளெல்லாம் பார்ப்பனர்களும், இன்ஸ்சால்வெண்ட் பேர்வழிகளும், கேடிகளும், புளுகர்களும், கோயில் சேவகர்களுமாக இருக்கிறார்கள். உங்கள் சாட்சிகள் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் இருவரும் 341ஆவது செக்ஷன்படி குற்றவாளி ஆகின்றீர்கள். ஆகையால், உங்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 100 அபராதம் விதிக்கின்றேன். உங்கள் இருவரிடமிருந்து வசூலிக்கப்படும் ரூபாய் 200 இல் ரூ.100 கண்ணப்பருக்கு நஷ்ட ஈடாகக் கொடுக்கப்படும் என்றார்.
(தொடரும்)