தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திராவிடத்தின் இரு மொழிக் கொள்கையே காரணம் மன்னார்குடியில் சிறப்புக் கருத்தரங்கம்

Viduthalai
7 Min Read

மன்னார்குடி, ஏப். 13- 8.3.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில் மன்னார்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மன்னார்குடி நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பதத்தில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்குத்திராவிடர் கழக நகர செயலாளர் வே. அழகேசன் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் கோ.கணேசன், மாவட்டக்காப்பாளர் பா.சிவஞானம், மாவட்டத் துணை தலைவர் ந.இன்பக்கடல், பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், பகுத்தறிவாளர்கழக மாவட்டத்தலைவர் வை.கவுதமன், ப.க.மாவட்டச்செயலாளர் தங்க.வீரமணி, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மன்னை நகரத்தலைவர் எஸ்.டி.உத்திரா பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் வழக்குரை ஞர் சு.சிங்காரவேலு தொடக்க உரையாற்றினார். ஆர்.எஸ்.எஸின் மும்மொழிக்கொள்கையும், திராவிடத்தின் இருமொழிக்கொள்கையும் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சா.சிபிராஜ் சிறப்பான கருத்துரை ஆற்றினார்.

அவரின் உரையில் வரலாறு தெரிந்த சமூகத்திற்கே நாம் எங்கிருந்து வருகிறோம், எங்குச் செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரிந்திருக்கும். அந்தச் சமூகமேசுயமரியாதைபெற்ற சமூகமாக முன்னேற்ற மடைந்த சமூகமாக இருக்கும். அந்த வளர்ச்சியை சுயமரியாதையை பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு தோற்று விப்பதற்காக உருவான இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்.
அதன் நேர் எதிரானபிற்போக்குக் கருத்துக்களை வளர்க்க பார்ப்பனர் நலமே பெரிதென கொண்ட இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸின் முன்னோடி இயக்கமான ஜனசங்கம் இந்த இரண்டு இயக்கங்களும் தோற்றுவிக்கப்பட்டது ஒரே ஆண்டு 1925 ஆம் ஆண்டு ஆகும்.

சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கமும் ஜனசங்கமும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் அரசியலைத்தீர்மானிக்கும் சக்தியாகஇருந்தது ,இருக்கிறது. சுயமரியாதை இயக்கம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தது. மனுதர்மத்தை தூக்கி சுமக்கும் இயக்கமாக ஜனசங்கம் இருந்தது.
மனுதர்மத்திற்கு நேர் எதிரான கருத்தியலைப்பரப்பி சமூகநீதி பேசும் இயக்கமாக இருந்தது சுயமரியாதை இயக்கம். நீதிமன்றத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். எந்நாளும் மன்னிப்பு கேட்காமல் சுயமரியாதையோடு இருந்து இயங்கும் இயக்கம் சுயமரியாதை இயக்கம். அதன் வளர்ச்சியான திராவிட இயக்கம்.
கொள்கை கோட்பாட்டிற்காக தன்உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள் சுயமரியாதைக்காரர்கள். எதனையும் வெளிபடையாக செய்யக் கூடியவர்கள். கொள்கைக்காக மற்றவர்கள் உயிரை எடுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இவர்கள் எந்த நிகழ்வையும் திரை மறைவில் நின்று செய்யக்கூடியவர்கள்.

சுயமரியாதை இயக்கம், பார்ப்பனர் அல்லாதார் இயக்கம், திராவிடர் கழகம் பகுத்தறிவாளர்கழகம் என்ற அமைப்புகள் அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளாக மக்களை நேரடியாக சந்திக்கக்கூடிய அமைப்புகளாக தான் என்ன செய்யப் போகிறோம் என்பதனை அறிவித்து அதற்கான செயல் திட்டங்களையும் வெளியிட்டு இயங்கக்கூடிய இயக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் திரைமறைவு வேலைகளையே அதிகம் செய்து சூழ்ச்சி பின்னக்கூடிய இயக்கம்.

சுதந்திர மனிதனாக
இந்த வரலாற்றைத்தெரிந்து கொண்டு இந்த வரலாற்றை அடியொற்றி நடை போடும் மனிதன்தான் சுயமரியாதை சுதந்திர மனிதனாக இருப்பான். வரலாறு தெரிந்த சமூகமே முதன்மை சமூகமாக இருக்கும்.மற்ற சமூகங்கள் அனாதையாக மாறும் என்பதை மறந்து விடக் கூடாது.
சிவபெருமான் திருவிளையாடல்க ளையும், பெருமாள் அவதாரங்களையும் முருகன் சூரசம்கார நிகழ்வுகளுமே வரலாறு என்று இருந்ததை மாற்றி ரவுத்திரம் மிக்கவர்களாகவும் இழப்பு களையும் அவமானங்களையும் அறிந்து கொண்டு அதை நீக்கி, நமது உரிமைகளை நம்மிடம் எடுத்துச் சொல்லி அதைமீட்க கூடிய வழிமுறைகளைக் கூறி நம்மை காப்பாற்றிய இயக்கம் திராவிடர் இயக்கங்கள் ஆகும் என்பதை மறவாதீர். அரச மேடையில் பெரிய புராணமும் கம்பராமாயணமுமே இருந்ததை மாற்றி திருக்குறளையும் வரலாற்று நூல்களையும் கொண்டு வந்து சேர்த்த இயக்கம் திராவிட இயக்கங்கள். பார்ப்பனச்சேரி பரச்சேரி என்று இருந்ததை மாற்றி இன்று நாகரிக தெருக்களாக உருவாக்கியது திராவிட இயக்கங்கள் ஆகும்.

பழம்பெருமை பேசிக்கொண்டு காட்டுமிராண்டியாக வாழ்ந்த தமிழர்களை நவீன உலகத்திற்கு அழைத்து வந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் பெரியாரியத்தை முழுதாய் உள்வாங்கியதிராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பத்தாயிரம் கோடிக் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கை என்ற பழமைவாத கல்விக் கொள்கையை செயல்படுத்த விட மாட்டேன் என்று துணிவுடன் கூறுகிறார். அய்ரோப்பிய நாடுகள் முழுவதும் இரு மொழிக் கொள்கையால் தான் முன்னேறி இருக்கிறார்கள்,அதனால்தான் அக்கொள்கையை மாற்றாது பின்பற்று கிறார்கள்.
எவை வளர்ந்த நாடுகளாக உள்ள னவோ?, அங்கு என்ன கொள்கை பின்பற்றுகிறார்களோ? அதைத்தானே வளரும் நாடுகளும் பின்பற்ற வேண்டும் அதுதானே அறிவாளிகள் வேலை.

அதை விடுத்து ஆரிய சமாஜம் கண்ட பழைமைவாதி தயானந்த சரஸ்வதி. இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஹிந்தி மொழி பேசும் நிலை வர வேண்டும் என்று ஆசைப்பட்டார், அவர் வழியிலும், அவருடைய சீடரான பாலகங்காதர திலகர் வழியிலும் பாஜக இருந்து கொண்டு மும்மொழிக் கொள்கை நோக்கி தமிழ்நாட்டை நகர்த்துவது நம்மை வீழ்த்தவே என்பதை உணர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். மூதாதையர் முதல் இன்று இருக்கக்கூடிய அவருடைய சீடர்கள் வரை ஒரே குறிக்கோளோடு ஹிந்தித் திணிப்பிலே தான்இருக்கிறார்கள். அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இரும்பு காலம் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்குகிறது என்ற வரலாற்று உண்மையைச் சொன்னபிறகும், ஒருமைப்பாட்டை கூறி தமிழ்நாட்டை ஒடுக்குகிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக,அலுவல் மொழியாக, கல்வி மொழியாக ஆக்கினால் மட்டுமே உண்மையில் சுதந்திரநாடாக இந்தியா இருக்கும்.
ராஜாஜி ஹிந்தியை 122 பள்ளிகளில் கொண்டு வந்த பொழுது தந்தை பெரியார் அவர்கள் 1935 இல் ஒரு பேரணியை தொடங்குகிறார் பெரியார் கைது செய்யப்படுகிறார் மன்னிப்பு கேட்காமல் அதிகபட்சமாகமூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கிறார்.பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சியில் இருந்து சென்னை வரை பெரும் பேரணி தொடங்குகிறது மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியாரின் தளபதிகளாக இருந்து செயல்படுகிறார்கள்.

தமிழ்நாடு தமிழருக்கு
இந்தப் போராட்டம் மூலம் இளைஞர்களுக்கு புது லட்சியம்புது ரத்தம் பாய்ச்சப்படுகிறது. தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழக்கம் முழங்கப்படுகிறது. தாளமுத்து, நடராஜன் ஆகியோர் சிறையில் இறந்தார்கள். உடனே அமைச்சரவையில் இருந்து ஆங்கிலேய அரசு ராஜாஜியை வெளியேற்றுகிறது.
1938இல் இதேபோன்று ஹிந்தியை அலுவல்மொழி ஆக்க முயன்றனர் அதுவும் பெரும் போராட்டத்தின் மூலமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
1965 இல் இந்தியா முழுவதும் ஒரே மொழி அது ஹிந்தி மொழி என்று பல திட்டங்களை. சட்டங்களை கொண்டு வந்தனர், லால்பகதூர் சாஸ்திரி அனைத்து நிகழ்வுகளும் ஹிந்தியில் தான் இருக்கும் என்று அறிவித்தார்.
அதை எதிர்த்துத் தமிழ்நாடு கொதித்து எழுந்தது. மிகப்பெரிய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தமிழ்நாட்டில் முன்னெடுத்தார்கள். ஹிந்தி பாம்பு ஓடி ஒளிந்தது. ஹிந்தியை கல்வியில்கொண்டு வந்ததை நாம்தடுத்திருக்கிறோம், அலுவல் மொழியாக கொண்டு வந்ததை நாம்தடுத்திருக்கிறோம்,
தொடர்பு மொழியாக கொண்டு வந்ததையும் நாம்தடுத்திருக்கிறோம்.

இதனால்தான் தமிழகம் வளர்ந்து இருக்கிறது இந்தியாவில் தனித்திருக்கிறது. இதைத்தகர்க்கவே புதிய கல்விக் கொள்கை என்ற விஷ உருண்டை. புதிய கல்விக் கொள்கை 2020இல் கூறியுள்ள கருத்துக்கள் அனைத்தும் எந்தத்தெளிவும் உறுதியும் இல்லாமல் கலாச்சாரத்தின் கல்வி பண்பாட்டின் கல்வி என்று சுற்றி வளைத்து மூக்கை தொடும் நிகழ்வாக நம்மை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிகொள்கையினை திணிக்கிறார்கள், அதை ஏற்றால் தான் நிதி தருவேன் என்று மிரட்டுகிறார்கள், கட்டப்பஞ்சாயத்து செய்யும் அமைச்சராக ஒன்றிய அமைச்சர்கள் இருப்பது இந்நாட்டின் சாபக்கேடு. ஒன்றிய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயக்களில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பீகார், உத்தரபிரதேசத்தில் முறையான கட்டிடங்களும் ஆசிரியர்களும் இன்றி பல பள்ளிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை போய் முதலில் சரி செய்யுங்கள். பிறகு தமிழ்நாட்டிற்கு வாருங்கள். இரு மொழிக் கொள்கைகள் மூலமே தமிழ்நாடு வளர்ந்து உள்ளது,

திராவிட மாடல்
தமிழ்நாட்டுமக்களும் இன்று உலகம் முழுவதும் பரவி வாழ்த்து கொண்டிருக்கிறார்கள். மும்மொழிக்கொள்கை மூலம் நம் முன்னேற்றத்தை தடுத்து நம்வளர்ச் சியை முடக்க பார்க்கிறார்கள். தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். திராவிட மாடலின் இரு மொழிக் கொள்கையே நம்மை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லும், பிஜேபியின் மும்மொழிக் கொள்கைநம்முடைய வளர்ச்சியை முடக்கும் பின்னோக்கி இழுக்கும் பிஜேபியின் மும்மொழிக்கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தமிழ் மண்ணிற்கும் எதிரானது, தீங்கு விளைவிக்கக் கூடியது திராவிட இயக்கத்தின் இரு மொழி கொள்கை என்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் வளர்ச்சியை முன்னேற்றத்தை கொண்டு வரக்கூடியது, மும்மொழிக் கொள்கையை எப்பாடுபட்டாவது எந்நாளும் எதிர்க்க வேண்டும். இருமொழிக் கொள்கையை எந்நாளும் வளர்க்க வேண்டும் காக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று இக்கூட்டத்தில் சிறப்புடன் கருத்துரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் மன்னை ஒன்றிய துணை செயலாளர் கவிஞர் கோ.செல்வம், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் தங்க.பிச்சக்கண்ணு, கருவாக்குறிச்சி கோபால், கோட்டூர் ஒன்றிய தலைவர் ஆர்.நாராயணசாமி. ப.க.நகரச் செயலாளர் பேராசிரியர் காமராஜர், ப.க.துணைத்தலைவர் ச.முரளிதரன், இளைஞரணி மாவட்டத்தலைவர் க.இராஜேஷ்கண்ணன், பகுத்தறிவாளர் கழக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் க.முரளி, மன்னார்குடி பொறுப்பாளர் சிவா.வணங்காமுடி, மேல திருப்பலாக்குடி தோழர் எம்.கோவிந்தராசு, மேலவாசல் குணசேகரன், உள்ளிக்கோட்டை கோ.வீரமணி, வடுவூர் து.லோகநாதன், மன்னை நகர திராவிடர் கழக செயலாளர் க.செல்வராஜ், பகுத்தறிவாளர்கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால், திராவிடர் கழக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ச.அய்யப்பன், திராவிடர் கழக கோட்டூர் ஒன்றிய செயலாளர் எம்.பி.குமார், கோட்டூர் ஒன்றிய ப.க.தலைவர் சோ.ராமலிங்கம், நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், மாவட்ட இளைஞரணி செயலாளர் க.இளங்கோவன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ச.சாருகான், மன்னார்குடி பொறுப் பாளர் சம்பத், மேலவாசல் பெட் ரண்ட்ரசல், பகுத்தறிவாளர் கழக தோழர்.ச.அறிவானந்தம், வடுவூர் ஆசைஒளி, நீடாமங்கலம் நகரச்செயலாளர் கி.ராஜேந்திரன், கோட்டூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆ.சுரேஷ், நெம்மேலி ஆர்.பாலகிருஷ்ணன், மன்னார்குடி எஸ். கோபாலகிருஷ்ணன், மன்னார்குடி சேவுகப்பெருமாள், மகாதேவபட்டினம் எம்.எஸ்.சேகர், மேலதிருப்பலக்குடி ஜெ.அருளரசன், ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை மாவட்ட இளைஞரணி மு.தலைவர் மன்னைசித்து ஒருங்கிணைத்தார், பகுத்தறிவாளர்கழக நகரத்தலைவர் கோவி.அழகிரி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *