சேலம், ஏப்.12- நாமக்கல், கரூர் மாவட்ட கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல்லில் புதிதாக மாவட்ட சிறை கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் இதுதவிர தர்மபுரி மாவட்ட சிறையை விரிவாக்கம் செய்து கூடுதல் கைதிகளை அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் 10.4.2025 அன்று சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்த நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை,மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை (பாளையங்கோட்டை), கடலூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச் சாலைகள் உள்ளன.இதுதவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை சிறைகள் உள்ளன.இங்குதான் தண்டனை பெற்ற குற்றவாளிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் சில சிறைகளில் சிறை கைதிகளின் எண்ணிக்கை, அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகவும் அதிகமாக உள்ளது. அதனை குறைக்கும்வகையில் அவ்வப்போது புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டு திறக்கப்படுகின்றன.
இதையடுத்து சிறையில் கைதிகளை வழக்குரைஞர்கள் பார்வையிடும் முன்பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் சிறை வார்டர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர் தர்மபுரி சென்று மாவட்ட சிறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து பேசினார். இந்த ஆய்வு குறித்து சிறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சிறையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அங்கு வெளிநாட்டு கைதிகள் அல்லது இலங்கை அகதிகள் கைதிகளை அடைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் அங்கு பெண்கள் சிறை அமைக்கவும், திறந்தவெளி சிறை வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கிண்டியில் டிஎன்பிஎஸ்சி
குரூப் 1 தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி
வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அதிகாரி தகவல்
சென்னை, ஏப்.12- டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழிகாட்டும் மய்யம்
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால், போட்டித் தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
இலவச பயிற்சி
தற்போது குரூப் 1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகின்றது.
பயிற்சி வகுப்பின் நேரம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை. எனவே, TNPSC GROUP I முதல்நிலை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் பயிற்சி துறையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மய்யம், A-28, முதல் தளம், டான்சி கட்டடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை முகவரிக்கு செல்லலாம். தொலைபேசி எண்: 044- 22500134, 9361566648