அரசியலமைப்பில் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்குமிடையில் நல்லுறவு நிலவுவதற்கான தூதுவர்.
காங்கிரஸ் ஆட்சியில் கட்சிக்குள் வைத்துப் பராமரிக்க முடியாத காலம்போன பெருசுகளை அனுப்பி வைக்கும் மதிப்புமிக்க முதியோர் இல்லங்களாக அந்தப்பதவி மாறியது…பெரும்பாலும் கங்காணி வேலைக்கே அந்தப்பதவி பயன்படுத்தப்பட்டது!
பா.க.ஜ. ஆட்சி தங்களுக்கு ஒத்துவராத மாநில அரசுகளுக்கெதிரான இணை அரசாங்கம் நடத்தும் அளவுக்கு அப்பதவியைப் பயன்படுத்தியது.
மாநில அரசுகளுக்கு எதிராக…
கேரளாவிலும் ஆரீப் முகமது கான் என்னும் ஆளுநர் மாநில அரசுக்கெதிராக பல நெருக்கடிகளைக் கொடுத்தார், கடைசியில் பல போராட்டங்களை நடத்தி அவராக வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளியது கேரள இடதுசாரி அரசு.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாக்களை நிறை வேற்ற முடியாமல் வீட்டோ பவரை எடுத்துக் கொண்டார்..
கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உங்களுக்கு அவ்வளவு அதிகாரமெல்லாம் இல்லை என்று வரையறுத்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பின் வரையறை ஆர்.என்.ரவிக்கு மட்டுமில்லாமல், எல்லா ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்பதால் இதைப் பெற்று தந்த ரவிக்கும் நன்றி சொல்லலாம். இவ்வளவு கண்டனத்திற்குள்ளான ரவி மாற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவமானம் என்று கருதி அவரே விலகியிருக்க வேண்டும்!
நெருக்கடியான வழக்குகளில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பெழுதும் நீதிபதிகளுக்கு வழங்கும் கவுரவ நன்றிக்கடனாக ஆளுநர் பதவி திகழ்கிறது.
ஒரு வேளை இந்த வழக்கிலும் ரவிக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லியிருந்தால் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகிய இந்த நீதிபதிகளும் ஆளுநர்களாக்கப்பட்டிருக்கலாம்! நீதியே முக்கியம் என ஆளுநர் பதவியை தவறவிட்ட நீதிமான்கள் வாழ்க!
இந்த வழக்கை நடத்தி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பைப் பெற்றுத்தந்ந அரசு வழக்குரைஞர் வில்சன் பாராட்டிற் குரியவர். தமிழ்நாடு குறிப்பாக தி.மு.க. மீண்டும் மாநில உரிமைகள் குறித்து ஒன்றியத்துக்கு வழிகாட்டியிருக்கிறது..
அன்று இந்தியாவின் முதலமைச் சர்கள் சுதந்திர நாளன்று கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர்.
திராவிட நாயகர்
இன்று இந்தியாவின் முதல மைச்சர்கள் பல்கலைக்கழக வேந்தராக செயல்படும் உரிமையை பெற்றுத் தந்திருக்கிறார் திராவிட நாயகன் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
1969இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர், மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவில் அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.வி.ராஜமன்னார், ஆந்திராவின் சந்திரா ரெட்டி, சென்னைப் பல்கலைகழக துணைவேந்தர் ஏ.எல் முதலியார் ஆகியோர் இருந்தனர். இந்திரா பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் இது குறித்த அறிவிப்பை டில்லியிலேயே பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் தெரிவித்தார். அப்போதைய வட இந்திய பத்திரிகைகள் எல்லாம் இதனை பெரிய செய்தியாகவும் தலையங்க விவாதங்களாகவும் வெளியிட்டன.
அகில இந்திய அளவில் பல தரப்பினரிடமும் கேட்டு ஓர் அற்புதமான அறிக்கையினை 27.5.1971இல் கலைஞரிடம் ராஜமன்னார் குழுவினர் வழங்கினர். 383 பக்கங்கள் கொண்ட அறிக்கை அது.
இதோ…. ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளில் சில…
அரசியலமைப்புச் சட்டத்தின் 7ஆவது இணைப்பில் உள்ள அதிகாரப் பட்டியல்களின் பொருளடக்கத்தை மாற்றியமைத்து மாநிலங்களுக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை வழங்கவேண்டும். உதாரணமாக இப்போது நீட் பிரச்சனையில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை.
கார்ப்ரேசன் வரி ,ஏற்றுமதி தீர்வைகள் , சுங்கவரிகள் போன்ற வரிகளின் பங்கும் பகிர்வும் மாநிலங்களுக்கு அதிகரித்து வழங்கப்பட வேண்டும்.
ஆளுநர்களின் நியமனம் மாநில அரசுகளின் ஆலோசனையை பெற்றே நியமிக்கப்பட வேண்டும்.
நாட்டில் அவசர நிலை பற்றி முடிவெடுக்கும் போது, அந்த நெருக்கடி கால அறிவிப்பை பிரகடனப்படுத்தும் போதும் மாநிலங்களின் இடையேயுள்ள Inter state council உடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்பட வேண்டும்.
நீதித்துறையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் போது மாநில அரசு , ஆளுநர் , உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் கருத்துகள் முக்கியமாக கருதப்பட வேண்டும்.
மாநிலங்கவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
மாநிலங்களிடையே உள்ள நீர் பங்கீடு விசயங்களை உச்ச நீதிமன்றமே முடிவு செய்து அதன் ஆணைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மாநிலங்களில் மூன்றில் இரு பங்கு மாநில சட்டமன்றங்கள் அதனை ஏற்க வேண்டும்.
வெளியுறவு , பாதுகாப்பு, தொலைத் தொடர்பு , நிதி போன்ற துறைகளை மட்டும் ஒன்றிய அரசு வசம் வைத்துக் கொண்டு மற்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இத்தகைய சாராம்சம் அடங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் ஆந்திராவின் என்.டி.ராமாராவ் அய்தராதபாத் மாநாட்டிலும்… அசாம்கண பரிசத் நடத்திய ஷில்லாங் மாநாட்டிலும்… சிறீநகரில் ஃபரூக்அப்துல்லா நடத்திய மாநாட்டிலும்… அன்றைய மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசு அவர்களும் தீவிரமாக மாநில உரிமைகள் குறித்தும் மாநில சுயாட்சி நிர்ணயம் குறித்தும் பேசத் தொடங்கினார்கள்.